Skip to main content

"மாஸ்டர் படம் கொடுத்த தைரியம் தான் இதற்கு காரணம்" -  தயாரிப்பாளர் டி.சிவா

Published on 19/01/2021 | Edited on 19/01/2021
hsfhsrh

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் தயாரிப்பாளர் டி.சிவா பேசியபோது.... 

 

 “சினிமா என்னாகுமோ, ஏதாகுமோ, திரையரங்குகள் திறக்கப்படுமா, மக்கள் கூட்டம் வருமா, என்ற கேள்விகள் 10 நாட்களுக்கு முன்பு இருந்து. ஆனால், மாஸ்டர் என்ற படம் நமக்கு புதிய உற்சாகம் கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படம் தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம் தான் இன்று 'கபடதாரி' ரிலீஸ் குறித்து நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விஜய், விஜய் சேதுபதி, தயாரிப்பாளர் லலித் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல் கரோனா காலக்கட்டத்தில் தனது சம்பளம் 25 சதவீதத்தை விட்டுக்கொடுத்து, அதை செயல்படுத்திய முதல் ஹீரோ விஜய் ஆண்டனி சார். அவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சிபியும் இந்த படத்திற்காக அதை செய்திருக்கிறார். தனஞ்செயன் சார் எதையும் தாங்கும் இதயம் படைத்தவர். அதனால்தான் இத்தனை வருடங்கள் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார். 

 

அவருக்கு சினிமா மீது மிகப்பெரிய பேஷன். பணம் சம்பாதிக்கும் அனைத்து வழிகளும் அவருக்கு தெரியும். ஆனால் அவற்றில் செல்லாமல் சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார். அதனால்தான் இந்த நேரத்தில் பெரிய ரிஸ்க் எடுத்திருக்கிறார். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பெரிய பாராட்டுக்களை பெற்று தரும். சிபி இந்த படத்திற்கு மிக பொருத்தமாக இருக்கிறார். இயக்குநர் பிரதீப் இந்த படம் மூலம் பெரிய வெற்றி பெற வேண்டும். சிபி நல்ல நடிகர். மிகப்பெரிய நடிகரின் மகனாக இருந்தாலும் அதை காண்பித்துக் கொள்ளாமல், தனது சொந்த முயற்சியில் முன்னேற்றம் அடைந்து வருகிறார். அவருக்கு இந்த படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். சினிமா கஷ்டமான காலக்கட்டத்தில் இருந்து மீண்டு
வருகிறது. இந்த நேரத்தில் பத்திரிகையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். குறிப்பாக விமர்சனத்தை பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் செய்யாமல், விமர்சனமாக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தயாரிப்பாளர்களின் நிலைமை என்ன ஆவது?... ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவிற்கு தயாரிப்பாளர் டி. சிவா எதிர்ப்பு!

Published on 05/07/2021 | Edited on 05/07/2021

 

T siva

 

மத்திய அரசு கடந்த ஜூன் 19ஆம் தேதி ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவை வெளியிட்டது. அந்த மசோதா வெளியானது முதலே இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு திரைக்கலைஞர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர். குறிப்பாக சட்டத்திருத்த மசோதாவில் இடம்பெற்றுள்ள தணிக்கை செய்யப்பட்ட திரைப்படத்தை தேவைப்பட்டால் மத்திய அரசு மீண்டும் தணிக்கை செய்ய முடியும் எனும் புதிய விதிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இது தொடர்பாக 1,400 கலைஞர்கள் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளனர். இந்த நிலையில், தயாரிப்பாளர் டி. சிவா ஒளிப்பதிவு சட்டத்திருத்த மசோதாவைக் கண்டித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தேச விரோத கருத்துகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் எப்போது வேண்டுமானாலும் தடை செய்யலாம். வேறு எந்தக் காரணத்திற்காகவும் தணிக்கை செய்த பிறகு அதைத் தடை செய்யும் உரிமை யாருக்கும் இருக்கக்கூடாது. அப்படி ஒரு சட்டம் வந்தால் பணம் போட்ட தயாரிப்பாளர்களின் நிலை எந்த நேரத்திலும் கேள்விக்குறியாகிவிடும். இது கருத்துச் சுதந்திரம் சம்பந்தப்பட்டது மட்டுமல்ல, மொத்த முதலீடும் போட்டு படத்தை வெளியிட்டபின் அந்தப் படம் தடை செய்யப்பட்டால் தயாரிப்பாளரின் நிலைமை என்ன ஆவது. எனவே புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.  

 

 

Next Story

"கரோனாவுக்கு என் உடன்பிறவா சகோதரா உன்னை பறிகொடுத்துவிட்டேன்" - டி சிவா உருக்கம்!

Published on 29/05/2021 | Edited on 29/05/2021

 

vdvsVS

 

நாடு முழுவதும் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக மாநில அரசுகள், தங்கள் மாநிலத்தில் நிலவும் சூழலுக்கு ஏற்ப ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. பல்வேறு கரோனா தடுப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகளை வகுத்துச் செயல்படுத்திவரும் மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளன. இதற்கிடையே கரோனா இரண்டாம் அலையால் சில மாதங்களாகவே விவேக், கே.வி. ஆனந்த், பாண்டு, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன், பவுன்ராஜ், அருண்ராஜா காமராஜ் மனைவி சிந்துஜா, நிதீஷ் வீரா உள்ளிட்ட பல தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ச்சியாக உயிரிழந்துவருவது மக்களிடையே கவலையையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில் நடிகரும், பல வெற்றி திரைப்படங்களை தயாரித்துள்ள பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா கிரியேஷன்ஸ் வெங்கட், கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர், இன்று (29/05/2021) சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 60. இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்ற நிலையில், தயாரிப்பாளர் டி சிவா இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்... 

 

dvdzbvszd

 

"வெங்கட்.. வெங்கட்.. வெங்கட் என் வாழ்நாளில் நான் அதிகம் அழைத்த நண்பனின் பெயர். 36 வருடங்கள், ஆயிரமாயிரம் நினைவுகள். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெற்றியிலும் தோல்வியிலும் உடன் இருந்தவன். அறிவாளி, எழுத்தாளன், படைப்பாளி, நடிகன், விமர்சகன் என ஒரு மினி சகலகலா வல்லவன். யார் சொல்லி கேட்காவிட்டாலும் நான் சொன்னால் கேட்பான். ஆனால் தடுப்பூசி போட்டுக்கொள்ளச்சொல்லி நான் சொல்லியும் ஊர் உறவு சொல்லியும் கேட்கவில்லை. அதுதான் ஆஜாணுபாகுவாக ஆரோக்யமாக இருந்த உன்னை கண்ணுக்கு தெரியாத ஒரு கிருமி எங்களிடமிருந்து பிரித்துவிட்டது மட்டுமல்ல உன் எதிர்கால படைப்புகளை, திட்டங்களை, கனவுகளையும் அழித்துவிட்டது. 

 

சினிமா மீதுதான் எத்தனை காதல் உனக்கு. ஆதாயமே இல்லாமல் இதையே சுற்றி சுற்றி வந்து சேவை செய்தாய். நட்பே வாழ்க்கை என நண்பர்களை சுற்றியே வாழ்ந்தாய். நட்பும் தமிழ் சினிமாவும் என்றும் உன்னை மறவாது நண்பனே. கரோனாவுக்கு என் உடன்பிறந்த சகோதரணை பறிகொடுத்தேன். இன்று உடன்பிறவா சகோதரன் உன்னையும் பறிகொடுத்துவிட்டேன். வெங்கட், மறக்க முடியாதடா உன்னை. மன்னித்துவிடு வெங்கட்டா. இந்த கரோனாவை எதிர்த்து உன்னை காப்பாற்ற உன் மனைவியும், உறவுகளும் நண்பர்களும், நீ நேசித்த மொத்த தமிழ் சினிமாவும் உனக்காக அப்போலோ மருத்துவமனைக்கு தொடர்புகொண்டு போராடியது. ஆனாலும் உன்னை மீட்க முடியவில்லையடா வெங்கட். கரோனா காலத்திலும் கடுமையாக உழைத்துவிட்டாய் வெங்கட். தெய்வத்தின் திருவடியில் நீ இளைப்பாரு. உன்னை தினம் தொட்டு வணங்கிக்கொள்கிறேன்.

டி சிவா " என கூறியுள்ளார்.