Skip to main content

என்னது 30,000 பாடல்களா? அசந்து நின்ற அமெரிக்க அதிபர்!

 

spb

 

கரோனா பாதிப்பு காரணமாக ஆகஸ்ட் 5- ஆம் தேதி, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். அதைத் தொடர்ந்து அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் எக்மோ மற்றும் உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் எஸ்.பி.பி உயிரிழந்தார். இன்று மதியம் 01.04 மணிக்கு எஸ்.பி.பி உயிர் பிரிந்ததாக அவரது மகன் சரண் தெரிவித்துள்ளார். 

 

இந்நிலையில், எஸ்.பி.பி குறித்த அறிதான தகவல்களை பலரும் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகி எஸ்.கே.பி.கருணா, மறைந்த பாடகர் எஸ்.பி.பி குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவு...

 

“அமெரிக்க ஜனாதிபதி இந்தியாவுக்கு வருகிறார்! குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்து. அதற்கு அழைக்கப்பட்ட எஸ்.பி.பி.யை நமது குடியரசுத்தலைவர் அமெரிக்க ஜனாதிபதிக்கு அறிமுகப்படுத்துகிறார்.. “இவர் எஸ்.பி.பி., எங்க நாட்டின் புகழ் வாய்ந்த பாடகர்.,35,000 பாடல்கள் பாடியிருக்கார்”

 

அமெரிக்க பிரசிடெண்ட் தலையாட்டி கை குலுக்கி நகர்ந்து விடுகிறார். பிறகு நடந்ததை எஸ்.பி.பி இப்படிச் சொன்னார்.., “அந்த அறிமுகத்தின் பிறகு, பிரசிடெண்ட் யாரையோ தேடிக் கொண்டே இருந்ததைப் பார்த்தேன்., என் பக்கம் வரும்போதெல்லாம் நான் விலகிக் கொண்டே இருந்தேன்.

 

இறுதியாக என்னை அவர் தோள் பிடித்து நிறுத்திவிட்டார். என்னைத்தான் தேடினார் என்பதையே அப்போதுதான் நான் உணர்ந்தேன். என் கையில் இருந்த காலிக் கோப்பையை எங்கே வைப்பது எனத் தடுமாறிய அந்தக் கணத்தில் அவரே அதை வாங்கி, அருகிருந்த ஒரு டிரேயில் வைத்து விட்டு, “மிஸ்டர் சிங்கர்! உண்மையிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளீர்களா?” என்றார். 

 

”நான் பதிலுக்கு இல்லை சார்., என்னுடைய குடியரசுத் தலைவர் தவறாக கூறிவிட்டார். நான் கடந்த வாரத்தில் 35 ஆயிரம் பாடல்களைக் கடந்துவிட்டேன்” என்றேன். அவர் திகைத்தபடி, என்னை இறுகப் பற்றி, ஓ கடவுளே! நான் இதுவரை ஆயிரம் பாடல்களுக்கு அதிகமாக பாடிய பாடகர்களை பற்றி கேள்விப்பட்டதில்லை, நீங்கள் அசாத்தியமானவர். என்று சொல்லிவிட்டு, எதையோ முணுமுணுத்தபடியே விலகிச் சென்றார். இப்போது நான் 40 ஆயிரம் பாடல்களைப் பாடி முடித்ததை இங்கிருந்தே அமெரிக்காவுக்கு கேட்கும்படி உரக்க கத்த வேண்டும் போலிருக்கு” என்றார்.

 

Ad

 

அமெரிக்க ஜனாதிபதியை விடுங்க! நமக்கு அடுத்த தலைமுறையே இப்படியொரு பாடகர் இருந்தார்! அவர் 11 மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களைப் பாடினார். ஒரே நாளில் 7 மொழிகளில் 15 பாடல்களும், ஒரே நாளில் 22 பாடல்களும் பாடினார் என படித்தால் நம்பவா போகிறார்கள்? இவைகளைக் கேட்டு, பார்த்து வாழ்ந்த நமது வாழ்க்கை அல்லவா முழுமை பெற்ற வாழ்வு!” என்று பதிவிட்டிருந்தார்.

 

மேலும், அந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்