Skip to main content

“ரூபாய் நோட்டில் இருக்கும் அத்தனை மொழிகளிலும் விஜய் சேதுபதி நடித்திருக்கிறார்” - சூரி

Published on 22/05/2024 | Edited on 31/05/2024
soori speech at garudan audio launch

வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் 'கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர். மே 31ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா, பல்வேறு பிரபலங்கள் கலந்து கொள்ள நடைபெற்றது. 

மேலும் விழாவில்  சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். இதில் சூரி பேசுகையில்,  “விடுதலைக்கு முன் - விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால்... பெருமிதத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது. அதுதான் உண்மை. இந்தியாவின் எங்கு சென்று டீ குடித்தாலும் அங்கு கிடைக்கும் பேப்பரில் சேது மாமாவின் முகம் இருக்கிறது. ரூபாய் நோட்டில் எத்தனை மொழி இருக்கிறதோ.. அத்தனை மொழிகளிலும் சேது மாமா நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். 

கதையெல்லாம் எழுதி முடித்த பிறகு இந்த வேடத்திற்கு சசிகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சொன்னவுடன் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவரிடம் இதை எப்படி கேட்பது என்று தான் தயக்கம் இருந்தது. அப்போது நான் தான் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னேன். 'பழக்க வழக்கத்திற்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வான்' என்று விளையாட்டாக சொன்னேன்.  உடனே அந்த பொறுப்பை என்னிடமே கொடுத்து விட்டார்கள். அதன் பிறகு இயக்குநர் சரவணனிடம் பேசினோம்.  அவர்தான் சசிகுமாரிடம் பேசினார். அதன் பிறகு என்னிடம் 'உனக்காக சசிகுமார் நடிக்க தயார்' என்ற விவரத்தை சொன்னார். அதன் பிறகு சசிகுமார் இயக்குநரிடம் கதை கேட்டார்.  கேட்டதும் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இதற்காக சசிகுமார் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 

தம்பி சிவகார்த்திகேயன் சினிமாவை கடந்து என்னுடைய சிறந்த நண்பர் என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும். விடுதலைப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் என்னுடைய மனைவியிடமும் அதன் பிறகு தம்பி சிவகார்த்திகேயன் இடம் தான் பகிர்ந்து கொண்டேன். கேட்டவுடன் தம்பி மிகவும் சந்தோசமடைந்தார்.  இந்த வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த பிறகு உங்களுடைய தோற்றமே மாறிவிடும் என்று நம்பிக்கை கொடுத்தார். அத்துடன் நிற்காமல் 'கொட்டுக்காளி' படத்தைக் கொடுத்து நீங்கள் கதையின் நாயகனாகவே தொடருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்தப் படம் இன்று உலக நாடுகள் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறது. 

கொட்டுக்காளி படத்தைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன். அவர்தான் வினோத் அற்புதமான இயக்குநர். இந்தியாவில் தலை சிறந்த இயக்குநராக வருவார். அவரை தவற விட்டு விடாதே என்றார். விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. என்னை அவர்கள் கதாநாயகனை தான் பார்ப்பார்கள்.  தனுஷ் சார் ஒரு படத்தில் 'என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்கத்தான்  பார்க்கத்தான் பிடிக்கும்' என்று சொல்லி இருப்பார். ஆனால் என்னை 'பார்க்க பார்க்க பார்க்க பார்க்க தான் பிடிக்கும்' ஆனால் நான்கு படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் கேட்டுக்கொண்டதற்காக படப்பிடிப்பு தளத்தில் வருகை தந்து பணியாற்றினார். படப்பிடிப்பின் போது அவருடைய நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன். அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் என்னை சௌகரியமாக பணியாற்ற அனுமதி அளித்தார்” என்றார்.

சார்ந்த செய்திகள்