Skip to main content

புதிய வாக்காளர்களுக்கு சூரி சொன்ன அறிவுரை

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
soori advise to first time voters

வெற்றிமாறன் இயக்கத்தில் 'விடுதலை' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சூரி, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தவிர்த்து சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஹீரோவாக 'கொட்டுக்காளி' படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை கூழாங்கல் படம் மூலம் கவனம் ஈர்த்த பி.எஸ். வினோத்ராஜ் இயக்குகிறார். மேலும் ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் கதையில் துரை செந்தில் குமார் இயக்கத்தில் கருடன் படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், மதுரையில் நேற்று திருமண நிகழ்வில் கலந்து கொண்ட சூரி பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். தனது படங்கள் குறித்துப் பேசிய சூரி, “விடுதலை 2 இன்னும் கொஞ்சம் படப்பிடிப்பு இருக்கு. எனக்கான போர்ஷன் முடிஞ்சிருச்சு. சீக்கிரம் வெளியாகவுள்ளது. விடுதலைக்கு முன்னாடி கருடன் வந்துவிடும். அந்த பட படப்பிடிப்பு அனைத்தும் முடிஞ்சிருச்சு. போஸ்ட் புரடக்‌ஷன் பணிகள் நடந்துக்கிட்டு வருகிறது. அதுவும் விரைவில் வரும். கண்டிப்பா விடுதலை மாதிரி கருடன் படமும் எல்லாருக்கும் புடிக்கும். ஒரு நல்ல படமா இருக்கும்” என்றார். 

அவரிடம் உதயநிதி மதுரையில் பிரச்சாரத்திற்கு வந்தது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்” என்றார். நடைபெறவுள்ள தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒவ்வொரு தேர்தலும் அதன் ரிசல்ட்டு வந்த பிறகுதான் தெரியும். நல்ல தேர்தலாக இருக்கும் என நினைக்கிறேன். மக்களுக்கு நல்லதாக அமைந்தால் இன்னும் சந்தோஷம்” என்றார். 

உதயநிதி பிரச்சாரத்திற்கு அழைத்தாரா என்ற கேள்விக்கு, “அவர் என்னை அழைக்கவில்லை. நான் ஷூட்டிங்கில் பிஸியாக இருப்பேன் என அவருக்கு தெரியும்” என்றார். புதிய வாக்களர்களுக்கு நீங்க சொல்லக்கூடிய விஷயம் என்ன என்ற கேள்விக்கு, “கன்னி சாமி மாதிரி எல்லாரும் கன்னி ஓட்டுக்கு ரெடியா இருக்காங்க. ஒவ்வொரு ஓட்டும் சாதாரணமானது கிடையாது. நாட்டின் வளர்ச்சிக்கான ஓட்டு. நம்முடைய வாழ்க்கைக்கான ஓட்டும் கூட. அதை கணிச்சு, யாருக்கு போடணுமோ அவர்களுக்கு போடுவாங்க என நம்புறேன்” என்றார்.

சார்ந்த செய்திகள்

Next Story

“இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா?” - அன்புமணி ராமதாஸ்

Published on 06/07/2024 | Edited on 06/07/2024
Anbumani Ramadoss has appealed to the Tamil Nadu government

அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ், வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டில் அரசு உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 33% வரை குறைக்கப்பட்டிருக்கிறது. பள்ளி மாணவர்களிடையே விளையாட்டை வளர்க்க வேண்டும் என்று அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மழுங்கடிக்கும் வகையிலான இந்த நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் வீதம் ஒரு பள்ளிக்கு அதிகபட்சமாக 3 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். ஆனால், இப்போது 700 மாணவர்கள் வரை ஒரே ஒரு உடற்கல்வி ஆசிரியரை நியமித்தால் போதுமானது; அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் இருந்தால் அதிகபட்சமாக இரு ஆசிரியர்களை நியமித்தால் போதுமானது என பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த ஜூலை 2-ஆம் நாள் பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதம் நியமிக்கப்படுவார்கள். ஆனால், இப்போது 1500 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் உடற்கல்வி ஆசிரியர், ஓர் உடற்கல்வி இயக்குனர் வீதமும், அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் கூடுதலாக ஓர் ஆசிரியரும் நியமிக்கப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை ஆகும்.

மாணவர்கள் வளரும் பருவத்தில் உடலை ஆரோக்கியமாக பராமரிக்க உடற்கல்வி மிகவும் அவசியம் ஆகும். ஒரு பள்ளியில் 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் என்றால், அவர் 4 அல்லது 5 வகுப்புகளை ஒன்றாகச் சேர்த்து தான் உடற்கல்வி வகுப்பை நடத்த முடியும். ஒரே நேரத்தில் 150 முதல் 200 மாணவர்களை வைத்துக் கொண்டு யாருக்கும் விளையாட்டுகளைக் கற்றுத் தர முடியாது. மாணவர்களைச் சுற்றிலும் மது மற்றும் புகையிலைப் பொருட்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றிலிருந்து மாணவர்களைக் காக்க வேண்டுமானால், அவர்களை விளையாட்டில் தீவிர ஆர்வம் கொண்டவர்களாக மாற்ற வேண்டும். அதற்காக அவர்களுக்கு விளையாட்டைக் கற்றுத்தராவிட்டால் மாணவர்கள் வேறு திசையில் பயணிக்கும் ஆபத்து உள்ளது. இதை உணராமல் உடற்கல்வி ஆசிரியர்கள் பணியிடங்களை குறைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விடும்.

தமிழ்நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு செல்லும் போதெல்லாம், உடற்கல்வி பாடப்பிரிவில் மாணவர்களை முழுமையாக விளையாட அனுமதிக்க வேண்டும்; உடற்கல்வி வகுப்புகளை வேறு ஆசிரியர்கள் யாரும் கடன் வாங்கக் கூடாது என்று கூறி வருகிறார். ஆனால், அவரது நண்பர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அமைச்சராக இருக்கும் பள்ளிக்கல்வித் துறையோ, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஆணையிட்டுள்ளது. இது தான் விளையாட்டை வளர்க்கும் அழகா? இது தான் உதயநிதி ஸ்டாலினுக்கு வழங்கப்படும் மரியாதையா? பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு கற்பிக்கப்பட வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே, அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசாணையை அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் ஆசிரியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தும், கட்டமைப்பை வலுப்படுத்தியும் மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

‘சூரியின் ‘கருடன்’ படம் ஓடிடியில் எப்போது வெளியாகும்?’  - வெளியான அப்டேட்

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Update released on When will soori's 'garudun' release in OTD?

எதிர் நீச்சல், காக்கிச் சட்டை, கொடி போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில் குமார் இயக்கத்தில் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘கருடன்’. இதில் சூரியோடு சசிகுமார், மலையாள நடிகர் உன்னி முகுந்தனும் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கதாநாயகிகளாக ஷிவதா நாயர், ரேவதி சர்மா மற்றும் சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் வெற்றிமாறனின் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் கடந்த மே 31ஆம் தேதி அன்று வெளியான இப்படம், நல்ல வரவேற்பைப் பெற்றது. இயக்குநர் வெற்றிமாறன் கதை எழுதியுள்ள இப்படத்திற்கு, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், கருடன் திரைப்படம், நாளை (03-07-24) முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.