பெங்களூரைச் சேர்ந்தவர் கன்னட நடிகை சோனு ஸ்ரீநிவாஸ் கௌடா. கன்னட பிக் பாஸ் போட்டியில் கலந்து கொண்டதன் மூலமும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டும் பிரபலமானவராக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கும் அவர், அவ்வப்போது ஒரு பெண் குழந்தையுடன் இருக்கும்படியும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வந்தார். அந்த குழந்தையை அவர் தத்தெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அக்குழந்தையை சட்ட விரோதமாக சோனு ஸ்ரீனிவாஸ் கௌடா தத்தெடுத்துள்ளதாக குழந்தைகள் நலத்துறை சார்பில் காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அக்குழந்தையின் அடையாளத்தை நடிகை வெளிப்படுத்தியதாகவும், மார்ச் மாதம் தேர்வு இருந்தும் குழந்தையை பள்ளிக்கு அனுப்பாமல் இருந்ததாகவும் புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையில், குழந்தைக்கும் தத்தெடுப்பவருக்கும் 25 வயது இடைவெளி இருக்க வேண்டும் என சட்டம் இருக்கும் நிலையில் அக்குழத்தைக்கு 8 வயது என்றும் நடிகைக்கு 29 என்றும் மனுவில் மேற்கோள்காட்டப்பட்டுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் நடிகையை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். அவரை விசாரித்த போது, குழந்தை தத்தெடுக்கும் முறையை முழுமையாக பின்பற்றவில்லை என்று ஒப்புகொண்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. பின்பு நடிகையை 4 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.