'பொம்மை' படத்தின் ரிலீசை எதிர்நோக்கி காத்திருக்கும் நடிகர், இயக்குநர் எஸ்.ஜே. சூர்யா அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்...
இயக்குநர் ராதாமோகன் மென்மையான படங்களை எடுப்பவர். அவருடைய படங்கள் மென்மையான உணர்வுகளையும் நன்கு கடத்தும். பொம்மை படத்தின் கதை ரொமான்டிக் திரில்லராக இருந்ததால் எனக்கும் பிடித்திருந்தது. இந்தப் படத்தில் கதாநாயகியின் பெயர் நந்தினி. பொன்னியின் செல்வன் நந்தினியை இன்ஸ்பிரேஷனாக வைத்து தான் இயக்குநர் இந்தப் பெயரைத் தேர்வு செய்தார். இந்தப் படத்தின் காட்சிகளை இயக்குநரோடு அமர்ந்து நாங்கள் பலமுறை ரிகர்சல் செய்தோம். நன்றாக வந்திருக்கிறது.
என்னுடைய படங்களின் இரண்டாம் பாகம் குறித்து நான் இதுவரை யோசித்ததில்லை. இனி யோசிக்கலாம். நான் எப்போதும் என்னை ஒரு இளைஞனாகவே உணர்கிறேன். அதனால் இளைய இயக்குநர்களை நான் வித்தியாசமாகப் பார்ப்பதில்லை. ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்கள் செய்கிறேன். காதல் ஒருவனை எவ்வளவு துரத்தியது என்பதைச் சொல்லும் கதை தான் பொம்மை. இந்த கேரக்டர் செய்யும்போது ஒரு பரவசம் இருந்தது. அது படம் பார்க்கும் மக்களுக்கும் நிச்சயம் இருக்கும். எனக்கு நிறைய நல்ல நண்பர்கள் இருக்கிறார்கள். ஃபிரான்சிஸ் என்பவர் முக்கியமான ஒரு நண்பர்.
என்னை ஒரு நல்ல நடிகனாக முழுமையாக மாற்றிய படம் இறைவி. அதற்கான கிரெடிட் அனைத்தும் கார்த்திக் சுப்புராஜுக்கு தான் செல்ல வேண்டும். நான் முழுமையாக வென்றுவிட்டேன் என்று சொல்ல முடியாது. வெற்றிக்கான பாதையில் சென்றுகொண்டிருக்கிறேன். இந்தப் படத்தில் முத்தக்காட்சி ஒன்று இருக்கிறது. ஆனால் அது உணர்வுப்பூர்வமான காட்சியாக இருக்கும். இன்று சினிமா குறித்த புரிதல் அனைவருக்கும் வந்துவிட்டது. ப்ரியா பவானிஷங்கர் நல்ல ஒரு நடிகை. பொம்மை படத்தில் பொம்மை போல் அவர் அழகாக இருப்பார்.
இந்தப் படத்துக்கு மிகப்பெரிய ப்ளஸ் யுவன் ஷங்கர் ராஜா. மிகச் சிறந்த பின்னணி இசையை இந்தப் படத்துக்கு அவர் வழங்கியிருக்கிறார். பொம்மை படம் அருமையான காதலை உணர வைக்கும். இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த செய்தியை அனைவரும் உங்களுடைய நண்பர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிச்சயம் இது ஒரு நல்ல படமாக இருக்கும் என்பது உறுதி.