Skip to main content

"காமராஜர்லாம் அப்போது உதவி செய்யவில்லை" - சிவகுமார்

Published on 17/07/2023 | Edited on 17/07/2023

 

sivakumar about kamarajar

 

ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 44வது ஆண்டு பரிசளிப்பு விழா சென்னையில் நடைபெற்றது. 1979-ல் ஆரம்பித்த இந்த அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் மாணவ மாணவிகளுக்குப் பரிசு வழங்கி வருகிறது. பின்பு ஒரு கட்டத்தில் அகரம் அறக்கட்டளை இந்த பரிசளிப்பு விழாவைத் தத்தெடுத்து நடத்தி வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் இவ்விழா நடத்தப்பட்ட நிலையில் அதில் சிவகுமார், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

ad

 

இந்நிகழ்வில் பேசிய சிவகுமார், தன் வாழ்வில் நடந்த விஷயங்களைப் பகிர்ந்து மேடையிலே கண்ணீர் விட்டார். பின்பு தொடர்ந்து பேசிய அவர்,  "எங்க அம்மா என் படிப்பிற்காக அக்காவின் படிப்பை நிறுத்திவிட்டார். பள்ளிப் படிப்பை முடிச்சுட்டு ஹைஸ்கூல் போனேன். காமராஜர்லாம் அப்போ எங்களுக்கு உதவி செய்யவில்லை. கட்டணம் கட்டி தான் படிச்சோம். மொத்த பள்ளிப் படிப்புக்கும் ரூ. 750 மட்டும் தான் செலவு செய்தேன். ஆனால் இப்போது கார்த்தியின் குழந்தைக்கு ப்ரீகேஜிக்கு இரண்டரை லட்சம் கேட்கிறார்கள். 

 

கல்வியின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ளுங்கள். வாத்தியார்களில் சாதியை பார்க்காதீர்கள். எங்களுக்கு இருந்தவங்க எல்லாரும் பிராமணர் வாத்தியார்கள் தான்.  10 வாத்தியார்களில் 8 பேர் அவர்கள்தான். அவர்களெல்லாம் வாத்தியார்கள் அல்ல கடவுள்கள். பள்ளிக்கூடத்தில் குரூப் ஃபோட்டோ எடுக்க 5 ரூபாய் கேட்டார்கள். அந்த காசு இல்லாததால் நான் ஃபோட்டோ எடுக்குற இடத்துக்கு செல்லவில்லை. அதை கவனித்த ஒருவர், காசு இல்லைன்னா பரவாயில்ல வந்து ஃபோட்டோவுக்கு மட்டும் நின்னுட்டு போ என்றார். எனக்கு தன்மானம் தடுத்தது. அதனால் வெளியே போய்விட்டேன். 

 

இதுவரை 40 வருஷத்தில் 190 படங்கள் நடித்துவிட்டேன். ஃபிலிம்-ஆக கணக்கிட்டால் 40 கோடி ஃபிரேமில் என்னுடைய முகம் பதிஞ்சிருக்கு. ஆனால் 5 ரூபாய் குரூப் ஃபோட்டோவில் இல்லை. அதன் பிறகு 50 ஆண்டுகள் கழித்து அங்க போய் ஃபோட்டோ எடுத்தேன். என் கவனம் முழுவதும் படிப்பில் மட்டும் தான் இருந்தது. பின்பு ஓவியராக ஆகி அதுக்கப்புறம் நடிக்க வந்துவிட்டேன். 87 கதாநாயகிகளுடன் டூயட் பாடினேன். இப்போது ஒரு அம்மாவோடு வாழ்ந்து வருகிறேன். நான் மட்டும் ஒரு ஓவியனாக வாழ்ந்திருந்தால் சத்தியமாக சொல்றேன் கல்யாணம் பண்ணியிருக்க மாட்டேன். இந்த வயசுல திருவண்ணாமலையில் தாடியுடன் குச்சியோடு இருந்திருப்பேன். காலத்தின் கட்டாயத்தால் சினிமாவுக்கு வந்துவிட்டேன். எனக்கு நல்ல குழந்தைகள் பிறந்ததால் இங்கு இருக்கேன். 

 

50 வயதிற்கு பின்பு கை கால்கள் எல்லாம் ஓய்ந்துவிடும். சம்பாதிக்க முடியாது. அப்போது யார் சாப்பாடு போடுவார்கள் என்று இருக்கும் போது தான் நமது பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் வெற்றிகரமாக வாழ்ந்தால் தான் நாம் நல்லாருக்க முடியும். அதனால் குழந்தைகளை நன்றாக வளர்க்க வேண்டும். எனக்கு 81 வயது, சமீபத்தில் திருக்குறளை 4 மணி நேரம் நிறுத்தாமல் பேசியிருக்கிறேன். என்னுடைய குருநாதர் சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆரும் தான். இருவரும் 71, 72 வயதிலே போய்விட்டார்கள். நான் 81 வயதில் பேசிக்கொண்டிருக்கிறேன். இதை பெருமைக்காக சொல்லவில்லை. ஒழுக்கத்திற்காக சொல்கிறேன். அதனால் மகிழ்ச்சியான வாழ்வை எல்லாரும் வாழ வேண்டும்"  என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
PM Modi remembers former CM of Tn

பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நேற்று முன்தினம் (16.03.2024) நாட்டின் 18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டன. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அதே வேளையில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.

அந்த வகையில், ஐந்து முறை தமிழகத்திற்கு வந்திருந்த பிரதமர் மோடி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் முதன் முறையாக நேற்று (18.03.2024) தமிழகம் வந்திருந்தார். இதனையடுத்து பா.ஜ.க. சார்பில் கோவையில் நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தார். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார். அதனைத் தொடர்ந்து கேரள மாநிலம் பாலக்காடு சென்று பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், பாலக்காட்டில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மோடி சேலத்திற்கு வந்தார். அங்கு கெஜல்நாயக்கன்பட்டி என்ற இடத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரை பொதுக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார். முன்னதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸின் கைகளைப் பிடித்துக்கொண்டு மோடி நலம் விசாரித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. கூட்டணி கட்சித் தலைவர்களான ஓ.பி.எஸ்., ராமதாஸ், பாரிவேந்தர், ஏ.சி. சண்முகம், அன்புமணி ராமதாஸ், டி.டி.வி. தினகரன், சரத்குமார், ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

PM Modi remembers former CM of Tn

இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், பாரத அன்னை வாழ்க. எனதருமை தமிழ் சகோதர சகோதரிகளே எனத் தமிழில் பேச்சை தொடங்கினார். மேலும், “கோட்டை மாரியம்மன் வாழும் புண்ணிய பூமிக்கு வந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவால் தி.மு.க.வுக்கு தூக்கம் தொலைந்துவிட்டது. தமிழகத்தில் எனக்கு கிடைத்திருக்கும் ஆதரவு பற்றித்தான் நாடு முழுவதும் இப்போது பேச்சாக இருக்கிறது. ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கொலை செய்யப்பட்டதை மறக்கவே முடியாது. கட்சிக்காக நேர்மையாக உழைத்தவர்களை படுகொலை செய்துவிட்டார்கள். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை பா.ஜ.க. கூட்டணிக்கு உதவியாக இருக்கும். வளர்ச்சியடைந்த இந்தியா, வளர்ச்சியடைந்த தமிழகத்தை அமைக்க 400 இடங்களைத் தாண்ட வேண்டும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை தி.மு.க.வினர் எவ்வளவு இழிவுபடுத்தினர் என்பதை நினைத்து பாருங்கள். தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதல்வரான காமராஜர் கொண்டு வந்த மதிய உணவு திட்டம்தான் எனக்கு உத்வேகம் அளித்தது. ஜி.கே. மூப்பனாரை பிரதமராக விடாமல் தடுத்தது காங்கிரஸ்தான்” எனத் தெரிவித்தார்.

Next Story

சால்வையைத் தூக்கியெறிந்த விவகாரம் - விளக்கமளித்த சிவகுமார்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
sivkumar about shawl throw iss

நடிகர் சிவகுமார் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது, ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் அவர் செய்யும் செயல் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கடும் விமர்சனத்தையும் சந்தித்தது. அந்த வகையில் காரைக்குடியில் சில தினங்களுக்கு முன்பு பழ. கருப்பையா எழுதிய ‘இப்படித்தான் உருவானேன்’ நூல் வெளியீட்டு விழாவில் சிவக்குமார் கலந்துகொண்டபோது, வயதான ஒருவர் அவருக்கு பொன்னாடை அணிய காத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்த்த சிவகுமார், அவர் கையில் வைத்திருந்த பொன்னாடையை பிடுங்கி தூக்கி எறிந்தார். இந்த செயலுக்கு பல்வேறு விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்து வந்தது.   

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக சிவகுமார் மற்றும் அந்த பெரியவர் இருவரும் ஒன்றாக வீடியோ வாயிலாகப் பேசியுள்ளனர். சிவகுமார் பேசியதாவது, “அந்த பெரியவர் யாரோ எவரோ இல்லை. என் தம்பி. 50 ஆண்டுகால நண்பர். அவர் கல்யாணத்தையே நான்தான் பண்ணி வச்சேன். அது மட்டுமல்ல, மகள் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பேரன் கல்யாணத்துக்கும் போயிருக்கேன். பொதுவா ஒரு நிகழ்ச்சிகளில் எனக்கு யாராவது சால்வை அணிய வந்தார்கள் என்றால், அதை திருப்பி அவங்களுக்கே போத்திருவேன். சால்வை அணியும் பழக்கம் எனக்கு கிடையாது. 

அன்னைக்கு 6 மணிக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சு 10 மணி ஆகும்போதுதான் நான் பேசுனேன். அப்போவே செம்ம டயர்ட் ஆகிருச்சு. கீழ கரீம் நின்னுக்கிட்டு இருந்தார். எனக்கு சால்வை போடுறது பிடிக்காது என்பதை தெரிஞ்சு அந்த மனுசன் கையில் சால்வையோடு நின்னுக்கிட்டு இருந்தார். பொது இடத்தில் சால்வையை வாங்கி கீழ போட்டது தப்புதான். அதுக்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வருத்தமும் படுகிறேன்” என்றார். சிவகுமார் பேசிக்கொண்டிருக்கும் வேளையில் நடுவே அந்த பெரியவரும், சிவகுமாருக்கும் அவருக்கும் உண்டான நட்பை பற்றி பேசினார். மேலும் சிவகுமாருக்கு சால்வை போடுவது பிடிக்காது என்பது தெரிந்தும் சால்வை எடுத்து வந்தது தப்பு தான் எனக் கூறினார்.