மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலர் பாராட்டினர். மேலும் திருமாவளவன் எம்.பி, படத்தைப் பார்த்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "நான் நிறைய வெற்றிப் படங்கள் பண்ணியிருக்கேன். ஆனால் இந்த படத்தினுடைய வெற்றி கொஞ்சம் ஸ்பெஷல். பொதுவாக என்னுடைய படங்களுக்கு வாழ்த்து வந்திருக்கு. என்னுடைய நடிப்புக்கு வாழ்த்து வந்திருப்பது இதுதான் முதல் முறை. உங்கள் எல்லாருக்கும் தெரியும் மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக இருந்துதான் நடிகனாக மாறியிருக்கேன். அதனால் எல்லா நடிகர்களுடைய பாதிப்பும் இருக்கும். வேற வழியில்லை. இருந்தாலும் அதுதான் எனக்கு நடிக்க வாய்ப்பு தேடிக் கொடுத்தது. எனக்கு டிவியில் வருவதே கஷ்டமான விஷயம். சினிமாவில் வருவது அதைவிடக் கஷ்டமான விஷயம். பிறகு உள்ளே நுழைந்த பின்பு காமெடி தான் என்னுடைய அடையாளமாக இருந்தது. இன்றைக்கும் சிறந்த நடிகராக இருப்பதை விடச் சிறந்த பொழுதுபோக்காளராக இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை.
ஒரு நல்ல இயக்குநர் நினைத்தால் யாரை வேண்டுமானால் நல்ல நடிகராக மாற்றலாம். அப்படி எனக்கு கிடைத்தவர்தான் மடோன் அஷ்வின். என்னை அறிமுகப்படுத்திய பாண்டிராஜ் சார் முதல் எல்லாருமே என்னிடமுள்ள பாசிட்டிவ் மட்டுமே கொண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் என்னுடைய வழக்கமான வட்டத்திலிருந்து முற்றிலுமாக மாற்றியிருப்பது மடோன் அஷ்வின் தான். அவர் விருப்பப்பட்டால் மீண்டும் இணையத் தயாராக இருக்கிறேன். அப்படி இணையும் பட்சத்தில் நிச்சயமாக சிறந்த படமாக இருக்கும்.
இப்படத்தில் அரசியல் சம்மந்தப்பட்ட கதை என்பதால் யாரையும் புண்படுத்தாமல், பொதுவாக சொல்ல வேண்டும் என்பது முக்கியமான விஷயம். யார் பார்த்தாலும் சந்தோசம் ஆக வேண்டும் என நினைத்தேன். அது நடந்திருக்கு. தொல். திருமாவளவன் சாருக்கு நன்றி. அரசியல் ரீதியாகவும் நாங்கள் எடுத்துக்கிட்ட கதை சரியாக சொல்லப்பட்டிருக்கிறதனால் தான் அவங்கள மாதிரி களத்துல பேசுபவர்கள் நல்ல வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். மேலும் படத்தை பார்த்து பாராட்டிய அருண் விஜய், சூரி என அனைவருக்கும் நன்றி" என்றார்.