மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'. இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்க சரிதா, இயக்குநர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரத் சங்கர் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகியுள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் வருகிற 14ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. தெலுங்கில் 'மகாவீருடு' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளது. அதனால் அதன் ப்ரொமோஷன் நிகழ்ச்சியில் பிசியாக உள்ளனர் படக்குழு. இதனையொட்டி படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில், "மடோன் எடுத்துக்கிற கதைக்களம் எல்லாமே ரொம்ப கடினமான ஒன்று. அதே சமயம் அதில் சமூக பார்வையும் சமூக அக்கறையும் இருக்கு. அதை ஜனரஞ்சகமாக எல்லாரும் ரசிக்கிற மாதிரி கொடுக்கிறார். மண்டேலா போன்று ஒரு சமூக அக்கறையோடு தான் இப்படத்தையும் கையாண்டிருக்கிறார். படத்தில் கருத்து சொல்வது போல ஒரு வசனமும் கிடையாது. ஆனால் படம் பார்த்த பிறகு எல்லாருக்கும் அது போய் சேரும்.
டாக்டரில் வேறொரு சிவகார்த்திகேயனை பார்த்தது போல் இப்படத்திலும் வேறொரு சிவகார்த்திகேயனை பார்ப்பீர்கள். அதே போல் இப்படம் பார்த்த பிறகு, மிஷ்கின் சாருக்கு டைரக்ட் பண்ண டைம் இருக்குமான்னு தெரியவில்லை. அவ்ளோ சூப்பராக நடித்துள்ளார். சரிதா அம்மாவோடு நடித்தது புது அனுபவம். அவரிடம் ஒரு கோரிக்கை, இதுக்கப்புறம் கேப் விடக்கூடாது. தொடர்ந்து நிறைய படங்கள் நடிக்க வேண்டும்" என்றார்.