
ஏ.ஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் ஒரு படம் உருவாகி வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். அனிருத் இசைப்பணிகளை மேற்கொள்கிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கியது. பின்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.
இப்படத்தில் இருந்து எந்த ஒரு அப்டேட்டும் கடந்த சில மாதங்களாக வெளியாகாத நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான இன்று(17.02.2025) படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘மதராஸி’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் கிளிம்ப்ஸில் ஒரு வசனம் கூட வரவில்லை. முழுக்க முழுக்க குண்டு வெடிக்கும் காட்சிகளும், அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் இடம் பெற்றிருக்கின்றனர்.
இந்த கிளிம்பிஸ் மூலம் படத்தில் வித்யுத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் நடித்து வருவதாக முன்பு தகவல் வெளியானது தற்போது உறுதியாகியுள்ளது. இவர்களை தவிர்த்து ஷபீர் கல்லரக்கல், விக்ராந்த் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் தமிழ். மலையாளம், தெலுங்கு உட்பட மொத்தம் ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆடியோ உரிமையை ஜங்க்லீ மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது.