மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 14 ஆம் தேதி வெளியான படம் 'மாவீரன்'. படத்தைப் பார்த்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் ஷங்கர், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பலர் பாராட்டினர். மேலும் திருமாவளவன் எம்.பி, படத்தைப் பார்த்து படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது சிவகார்த்திகேயன் பேசுகையில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். பின்பு விஜய் சேதுபதி பற்றி, "இப்படத்துக்கு அசரீரி குரலில் யாரை பேச வைக்கலாம் எனக் கேட்டபோது விஜய் சேதுபதியிடம் கேட்கலாம் என இயக்குநர் சொன்னார். நானும் ஓகே சொல்லிவிட்டேன். ரெண்டு நாள் கழிச்சு இயக்குநரிடம், அவர் குரல் பயன்படுத்தியதால் நானும் அவரும் இணைந்துவிட்டோம் என்று பின்பு நடிக்க முடியாமல் போய்விடக் கூடாது. அது எனக்கு ரொம்ப முக்கியம் என்றேன். அது வேற இது வேற என்று தான் என்னை சமாதானப்படுத்தினார். அவரோடு நடிக்க வேண்டும் என்ற ஆசை நிறையவே இருக்கு. அதுவும் கூடிய சீக்கிரம் நடக்கும். அதற்கு இப்படம் ஒரு தொடக்கம் என்று நினைக்கிறேன்.
இயக்குநர், விஜய் சேதுபதியிடம் கேட்டபோது, ‘இது ஒரு ஆரோக்கியமானதாக இருக்கும். சிவா ஒரு பெரிய ஹீரோ, நினைத்திருந்தால் வேண்டாம்னு சொல்லியிருக்கலாம். ஆனால் நான் பண்ண வேண்டும் என அவர் நினைக்கிறார். அதே மாதிரி, நானும் நினைத்தால்தான் சரியாக இருக்கும்’ என சொல்லியிருக்கிறார். அதேதான் நானும் ஆரம்பத்தில் இருந்து சொல்கிறேன். அவருக்கும் எனக்கும் போட்டியே கிடையாது. அவருடைய நடிப்பை அவ்ளோ ரசிப்பேன். இதை வார்த்தையாகத் தான் இதுவரை சொல்லிக்கிட்டே இருந்தேன். அதை நிரூபிக்கிற வாய்ப்பு இந்த படத்தில் கிடைத்தது. இரண்டு பேரும் சேர்ந்து நிரூபிச்சிட்டோம் என்று நினைக்கிறன். ஸ்க்ரீனில் சேர்வது சீக்கிரம் நடக்கும்" என்றார்.