singer mangli about his birthday party issue

தெலுங்கில் பிரபல நாட்டுப்புற பாடகியாக வலம் வருபவர் மங்லி. அங்கு திரைப்படங்களிலும் பல்வேறு பாடல்களை பாடியுள்ளார். தெலுங்கை தவிர்த்து இந்தி மற்றும் கன்னடத்திலும் பல பாடல்களை பாடியுள்ளார். இவர் கடந்த 10ஆம் தேதி தனது 31வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இதற்காக ஹைதராபாத்தில் உள்ள திரிபுரா ரெசார்ட்டில் பார்ட்டி ஏற்பாடு செய்துள்ளார். அந்த பார்ட்டியில் மங்லிக்கு தொடர்புடைய நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், திரை பிரபலங்கள் என கிட்டத்தட்ட 50 விருந்தினர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் திரை பிரபலங்கள் ராச்சா ரவி, திவி, காசர்லா ஷ்யாம், பாடகி இந்திராவதி உள்ளிட்டோரும் அடங்குவதாக சொல்கின்றனர்.

அந்த பிறந்தநாள் பார்ட்டியில் போதை பொருள் பயன்படுத்தப்படுவதாக அப்பகுதியில் இருக்கும் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் பார்ட்டிக்கு சென்ற காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சட்டவிரோதமான போதைப்பொருட்கள், கஞ்சா மற்றும் உயர் ரக வெளிநாட்டு மதுபானங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றை பறிமுதல் செய்த காவல்துறையினர் மங்லி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பார்ட்டியில் 48 நபர்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாகவும் ஒன்பது பேர் கஞ்சா பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியானது. சோதனையில் காவல் துறையினர் ஈடுபட்ட வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த சம்பவம் தெலுங்கு திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தற்போது பாடகி மங்லி, விளக்கமளித்துள்ளார். அவர் வெளியீட்டு வீடியோவில், “எனது பெற்றோரின் விருப்பத்தால் ஒரு பண்ணை வீட்டில் பிறந்தநாள் கொண்டாட முடிவு செய்தேன். அந்த விழாவில் குடும்ப உறவினர்கள், நண்பர்கள் மற்றும் என்னுடைய டீம் மெம்பர்ஸ் இருந்தனர். அங்கு மது அருந்துவதற்கு முறையான அனுமதி பெற வேண்டும் என்பது எனக்கு உண்மையிலே தெரியாது. யாராவது எனக்கு சொல்லியிருந்தார் செய்திருப்பேன். பார்டியில் உள்ளூர் மதுபானம் மட்டுமே இருந்தது. வெளிநாட்டு மது பானங்கள் இல்லை. அதே போதைப்பொருளும் பயன்படுத்தவில்லை” எனக் கூறினார்.