
பிரபல பின்னணி பாடகிகளில் ஒருவரான கல்பனா, தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார். இவர் கடந்த 4 ஆம் தேதி அதிகளவில் தூக்க மாத்திரை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறப்பட்டது. மேலும் அவரது கணவரின் மீது உள்ள அதிருப்தி காரணமாகவே பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவியது.
இதனைத் தொடர்ந்து சிகிச்சைக்கு பின் வீடியோ வெளியிட்ட பாடகி கல்பனா, “என்னைப் பற்றியும் என் கணவரை பற்றியும் செய்திகளில் தவறான வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இந்த வயதில் பிஹெச்டி, எல்.எல்.பி இன்னும் நிறைய விஷயங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன். இசைத் துறையின் மீதும் அதீத கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறேன். இதில் ரொம்ப ஸ்ட்ரெஸ் லெவல் அதிகமாகி பல வருடமாகவே சரியான தூக்கம் இல்லை. தூங்க முடியாத பிரச்சனை காரணமாக மருத்துவரிடம் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்ட பொழுது இன்சோம்னியா பிரச்சனை இருக்கிறது என மருந்துகள் கொடுத்திருந்தார்கள். சம்பந்தப்பட்ட நாளில் அந்த மருந்தின் டோஸ் அதிகமாக எடுத்துக் கொண்டதால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பாடகி கல்பனா, “ஒவ்வொருவருக்கும் உடல்ரீதியாக ஒவ்வொரு பிரச்சனைகள் இருக்கும். அதுபோன்று தான் உடல்ரீதியாக எனக்கும் பல பிரச்சனைகள் இருக்கிறது. ஒரு பெண் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எவ்வளவு விஷயங்களை சுமந்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதைப் புரிந்துக் கொள்ளவதே இல்லை. ஒரு நல்ல செய்தி என்றால் 10 பேரைத் தான் சென்றடைகிறது. ஆனால் அதுவே ஒரு அவதூறான செய்தி என்றால் 1000 பேரை சென்றடைகிறது.
எனக்கு ஜனவரி மாதத்தில் இருந்து நுரையீரல் பிரச்சனை இருக்கிறது. நானும் ஒரு சாதாரண மனிதர் தான். எனக்கும் பல பிரச்சனைகள் இருக்கும். எனக்கு வாழ்க்கையில் நடந்த ஒரே நன்மை எனக்கு நல்ல கணவர் அமைந்ததுதான். கணவர்தான் எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறார். பல வருடங்களாகவே எனக்கு உடல்ரீதியாகப் பிரச்சனை இருக்கிறது. அன்றைக்கு வழக்கத்திற்கு மாறாக அதிகமான தூக்க மாத்திரையை எடுத்துக்கொண்டதால் மயங்கி விழுந்துவிட்டேன். என் கணவருடன் போனில் பேசிக் கொண்டிருக்கும் போது தான் மயங்கி விழுந்தேன். அதனால்தான் எனது கணவர் எனக்கு எதோ ஆகிவிட்டது என்று காவல்துறைக்கும், ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்து என்னைக் காப்பாற்றியுள்ளார்.
ஏன் எங்களைப் போன்ற பிரபலங்கள் மீது சேற்றை வாரி அடிக்கிறீர்கள்? ஏன் தவறான செய்திகளைப் பரப்புகிறீர்கள்? யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் நிறைய தவறாக விஷயங்கள் பரவிக் கொண்டிருக்கிறது. இதனைத் தடுக்க வேண்டும் என்று தமிழக மற்றும் தெலுங்கான அரசுகளிடம் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக் கொள்கிறேன். உடலுக்கு எப்படி சாப்பாடு முக்கியமோ, அதேபோன்று மூளைக்கும் சாப்பாடு முக்கியம். நல்ல விஷங்களை மூளைக்குக் கொடுக்க வேண்டும். ஆனால், தற்போது இருக்கும் சூழலில் தவறான விஷயங்கள் நமது குழந்தைகளின் மூலைக்கு சென்றுக் கொண்டிருக்கிறது.
இன்றைய காலத்தில் ஆபாசப் படங்கள் பார்ப்பது அவ்வளவு எளிதாகிவிட்டது. அது நல்லதல்ல; நமது சமுதாயம் சர்வ நாசமாகிவிடும். நீ என்னை அடித்தால், நானும் திருப்பி அடிப்பேன் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிப்பது நமது கலாச்சாரம் அல்ல; இது கணவன் அடித்தால் பயத்தில் திருப்பி அடிக்கக்கூடாது என்பதில்லை. கணவன் என்ற ஸ்தானத்திற்கு மரியாதை கொடுத்து அவரை திருப்பி அடிக்காமல் இருக்கிறாள். அப்பா அடித்தால் திருப்பி அடிக்கும் கலாச்சாரம் நம்முடையது கிடையாது. இந்த மோசமான நிலை மாற வேண்டும். இதற்காக தமிழக அரசு நல்ல சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.
யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் ஒரு மனிதரை பற்றி வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அது மிகவும் தவறு. என்னை பற்றி மட்டுமல்ல, ஏதோ ஒரு பெண்ணை பற்றிப் பேசினாலும் தவறுதான். சினிமாக்காரர்களின் வாழ்கையில் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் எதற்காக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றிப் பேசுகிறீர்கள்? உங்களை சிரிக்க வைப்பதற்காக பாட்டுப் பாடுவது காமெடி செய்வது என்று திரைக்குப் பின் நாங்கள் அழுதால் கூட உங்களை மகிழ்வித்து வருகிறோம். உங்களை சிரிக்க வைத்துச் சந்தோஷப்படுத்துவது எங்களது தொழில்; அதற்காகத்தான் நாங்கள் உழைத்துக் கொண்டிருக்கிறோம். மற்றபடி நாங்களும் உங்களை போன்று அனைத்து உணர்வுகளும் கொண்ட மனிதர்கள்தான்” என்று உருக்கமாக பேசினார்.