Skip to main content

சில்லுக்கருப்பட்டி நடிகர் திடீர் மரணம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

gegda

 

ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற 'சில்லுக்கருப்பட்டி' படம் விமர்சனரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது.

 

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அந்தாலஜி படமாக உருவான இப்படத்தில் வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக நடித்த நடிகர் ஸ்ரீராம் மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு வயது 60. இன்று காலை 6 மணியளவில் பெசன்ட் நகரில் உள்ள தனது வீட்டின் மாடியில் தற்காப்புக் கலை பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அங்கிருந்த தண்ணீர் டேங்கைச் சுற்றிப் பார்த்த சமயத்தில் கால் இடறிக் கீழே விழுந்த அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

இவர் பல முன்னணி நடிகர்களுக்கு, தமிழக காவல்துறை கமாண்டோ படை மற்றும் சென்னை மாநகர காவல்துறையினருக்கு தற்காப்புக் கலையைக் கற்பித்து வந்தார். இதுதவிர பெண்களின் பாதுகாப்புக்கான பட்டறைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். ஹலிதா ஷமீமின் சில்லுக் கருப்பட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து  'இமைக்கா நொடிகள்', 'அதோ அந்த பறவை போல', 'வலிமை', 'கூட்டத்தில் ஒருவன்', 'எனிமி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஸ்ரீராமின் மறைவு திரையுலகினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது இறுதிச் சடங்கு வேளச்சேரி மின் மயானத்தில் இன்று மாலை நடைபெறவுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"நீங்கள் இல்லை என்பதை உணரும்போது நொறுங்கிவிடுகிறேன்" - சில்லுக்கருப்பட்டி இயக்குனர் உருக்கம்!

Published on 23/01/2021 | Edited on 23/01/2021

 

hfdhdh

 

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் அந்தாலஜி படமாக உருவான 'சில்லுக்கருப்பட்டி' படத்தில் வயதான தம்பதியினருக்கு இடையே மலரும் காதலை மையப்படுத்திய 'டர்டில்ஸ்' என்ற கதையின் நாயகனாக நடித்தவர் நடிகர் ஸ்ரீராம். இவர் இன்று காலை மாடியிலிருந்து தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவரது மறைவுக்குத் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் இரங்கல் தெரிவித்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்... 

 

"ஸ்ரீராம் இன்று காலை காலமானார் என்ற செய்தி கேட்டு அதிக வருத்தமும், அதிர்ச்சியும் அடைந்திருக்கிறேன். அவரது பால்கனியிலிருந்து எதிர்பாராத விதமாகக் கீழே விழுந்துள்ளார். அவரது நடிப்பு வாழ்க்கையை ஆரம்பிப்பதில் மிகவும் உற்சாகமாக இருந்தார். தயாரிப்பில் இருக்கும் சில பெரிய படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடிப்பது குறித்து அவர் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார் என்பதை என்னுடன் பகிர்ந்தார்.

 

ஸ்ரீராம் சார், உங்கள் ஆர்வமும், வசீகரமும் என்றும் எங்கள் மனதில் இருக்கும். உயிர்ப்புடன் இருந்த மனிதர் நீங்கள். இப்போது இல்லை என்பதை நம்பமுடியவில்லை. நீங்கள் அவ்வளவு அன்போடு 'என் டைரக்டர் மேம்' என்று என்னை அழைத்தது, உங்கள் காலை நேர ஓவியங்களை, நீங்கள் நடித்து வந்த பெரிய படங்களின் புகைப்படங்களை என்னுடன் பகிர்ந்தது என எதுவும் மறக்காது. " 'சில்லுக் கருப்பட்டி' வெளியாகி ஒரு வருடம் ஆனதைக் கொண்டாட நம் குழுவை இரவு விருந்துக்கு அழைத்ததற்கு நன்றி. நான் அதற்கான செலவைப் பகிர்ந்துகொள்கிறேன்" என்று சொன்னபோது, இது என் விருந்து, அடுத்தமுறை நீங்கள் கொடுங்கள் என்று சொன்னீர்கள்.

 

ஆனால், அடுத்த முறை என்பது கிடையாது என்பதை உணரும்போது நொறுங்கிப் போகிறேன். வாழ்க்கை மிகவும் குரூரமானது. என் அன்பும், மரியாதையும் சார். நீங்கள் எங்கிருந்தாலும், கண்டிப்பாக அங்கிருந்து, உங்கள் இணையற்ற உற்சாகத்துடன் எங்களைப் பார்ப்பீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் வாழ்க்கையை நேசித்தவர். நான் என்றுமே உங்களை மனதில் வைத்திருப்பேன். நீங்கள் வாழ்க்கையை எப்படி நேசித்தீர்களோ அப்படி நேசிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்வேன். ‘டர்டல்ஸ்’ கதையில் நீங்கள் சொன்ன வசனம், 'என்னால் இன்னும் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை' என்பது. படப்பிடிப்பில் நீங்கள் இந்த வசனத்தைப் பேசியது என் மனதில் ஓடிக்கொண்டே இருக்கிறது. நீங்கள் இல்லாத குறையை உணர்வேன்" என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.
 

 

 

Next Story

''நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம் இனி நடக்காமல் இருக்கட்டும்'' - இயக்குனர் ஹலிதா ஷமீம் கவலை!

Published on 27/05/2020 | Edited on 27/05/2020

 

cfad

 

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக்கொண்டே இருப்பதால் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
 


இதனால் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் உணவின்றி, உறைவிடமின்றி தங்களது சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். இதற்கிடையே இவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பசி பட்டினியுடன் நடந்தே செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. மேலும் இவர்களில் சில தரப்பினர் வீடு திரும்ப அரசாங்கமும், பிரபலங்களும் உதவி வருகின்ற நிலையில் புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து 'சில்லுக்கருப்பட்டி' பட இயக்குனர் ஹலிதா ஷமீம் சமூகவலைத்தளத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்... ''வெறும் வயிற்றில், சுமை தூக்கி, கால்கள் வெடிக்க, பெற்ற பிள்ளைகளுக்குச் சோறு தண்ணி கொடுக்க முடியாமல் வெதும்பிய மன நிலையில் பாலைவனமான நெடுஞ்சாலைகளில், உயிரைப் பிடித்துக் கொண்டும், பெட்டிகளை இழுத்து கொண்டும் நெடுந்தூரம் நடந்தே செல்லும் அவலம், இனி நடக்காமல் இருக்க, ஓங்கட்டும் பசியின்குரல்'' எனப் பதிவிட்டுள்ளார்.