Skip to main content

"விஜய் சாருக்கும், நண்பர் சிம்புவுக்கும் நன்றி" -  நடிகர் சிபிராஜ்

dzbvsdbsd

 

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ள இப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார். சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், எஸ்.சதீஷ்குமார், தயாரிப்பாளர் டி.சிவா, நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி உள்ளிட்ட பலர்  சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார்கள். அப்போது விழாவில் நடிகர் சிபிராஜ் பேசியபோது.... 

 

"கரோனா பேண்டமிக் காலத்திற்குப் பிறகு நான் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இதுதான். கரோனா காலக்கட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய தமிழக அரசு, காவல்துறை, மருத்துவ பணியார்கள் என அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. சிவா சார் சொன்னது போல, கபடதாரி ஜனவரி 28 ஆம் தேதி ரிலீஸாவதற்கான தைரியத்தை கொடுத்தது மாஸ்டர் மற்றும் ஈஸ்வரன் படங்கள் தான். எனவே விஜய் சார், நண்பர் சிம்பு மற்றும் படக்குழுவினர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

 

கபடதாரி படம் கன்னட படத்தின் ரீமேக் தான் என்றாலும், தமிழுக்கு ஏற்றவாறு சில மாற்றங்கள் செய்திருக்கிறோம். இந்த படத்தை ஓடிடி பிளாட்பார்மில் பார்த்தேன். எனக்கு ரொம்ப பிடித்தது. உடனே,
தனஞ்செயன் சாரை தொடர்புக் கொண்டு இந்த படத்தின் உரிமையை கொடுங்கள், எங்களுடைய பேனரில் தயாரிக்கிறோம், என்றேன். ஆனால், அவர் நான் தயாரிக்கப் போகிறேன் என்று கூறி மறுத்துவிட்டார். உடனே, அப்படி என்றால் நானே நடித்து விடுகிறேன் சார் என்று அவரிடம் சொன்னேன். ஆனால், அவர் வேறு ஒரு ஹீரோவிடம் பேசிக்கொண்டு இருப்பதாக என்னிடம் சொன்னார். இருந்தாலும், என் உள்மனது இந்த படம் நமக்கு தான் வரும் என்று கூறியது. அதேபோன்று இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

 

தனஞ்செயன் சார் பற்றி சொல்ல வேண்டும் என்றால், அவர் எறும்பு போல சுறுசுறுப்பானவர். சில நேரங்களில் ஷாட்டுக்கு கூட என்னை அழைக்க அவரே வந்துவிடுவார். அந்த அளவுக்கு படப்பிடிப்பில் படு சுறுசுறுப்பாக இருப்பார். அனைத்து பணிகளையும் ஈடுபாட்டுடன் செய்வார். ஒரு முறை படப்பிடிப்பில் ஒரு பழைய காரை வைத்து படம்பிடித்து கொண்டிருக்கும் போது அந்த கார் பழுதாகி நின்றுவிட்டது. அடுத்த ஷாட்டுக்காக அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்தும் போது அவரே அந்த காரை தள்ளிவிட்டு ஸ்டார்ட் செய்தார். அவரால்தான் நான் இந்த படத்திற்குள் வந்தேன். ரொம்ப நன்றி சார். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் நான் நடிக்கும் இரண்டாவது படம் இது. பொதுவாக ரீமேக் படம் செய்யும் போது இயக்குநர்களுக்கு சிறு ஈகோ இருக்கும். இந்த படத்தில் நாம் என்ன செய்யப்போகிறோம் என்று நினைப்பார்கள்.  இல்லை என்றால் அதன் ஒரிஜனல் எசன்ஸை கெடுத்து விடுவார்கள். ஆனால், இந்த இரண்டையும் செய்யாமல் சிறப்பாக இயக்கியிருக்கிறார் பிரதீப். நான் படப்பிடிப்பிற்கு செல்லும் போது, ஏற்கனவே அவருடன் பணியாற்றியதால், நாங்கள் வைத்திருந்த மீட்டரிலேயே நடித்தேன்.

 

ஆனால் அதை அவர் சற்று மாற்றி வேறு ஒரு விதத்தில் என்னை நடிக்க வைத்தார். அது எனக்கு நாசர் சார் போன்ற ஜாம்பவனுடன் இணைந்து நடிப்பதற்கு ஈசியாக இருந்தது. அதேபோல் ஜெயப்பிரகாஷ் சார், நந்திதா ஆகியோருடன் நடித்து நன்றாக இருந்தது. எடிட்டர் பிரவீன், இசையமைப்பாளர் சைமன் ஆகியோரது பணிகள் பெரிதும் பேசப்படும். இந்த படத்திற்கு சைமன் மிகப்பெரிய் உழைப்பை கொடுத்திருக்கிறார். அது படம் பார்க்கும் போது தெரியும். பிரவீன் பணியாற்றும் படங்களில் எங்கேயாவது லேக் இருந்தால் அதை உடனே தூக்கிடுவார். ஆனால், இந்த படத்தில் எந்த காட்சியையும் அவர் தூக்கவில்லை. அந்த அளவுக்கு காட்சிகள் நேர்த்தியாகவும், எந்த ஒரு லேகும் இல்லாமல் இருந்ததாக பிரவீன் கூறினார். அதுவே மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்தது. எனக்கு விஜய் ஆண்டனி சார் நிறைய உதவி செய்திருக்கிறார். இயக்குநர் பிரதீப்பை அறிமுகம் செய்து வைத்ததே அவர் தான். அனைத்து படங்களும் நன்றாக ஓட வேண்டும் என்று தான் எடுக்கிறோம். அப்படி தான் இந்த படமும் நன்றாக ஓட வேண்டும். இந்த பேண்டமிக் நேரத்தில் படத்தை தைரியமாக தனஞ்செயன் சார் வெளியிடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. படம் நிச்சயம் வெற்றி பெறும்” என்றார்.

 

மிஸ் பண்ணிடாதீங்க