Skip to main content

கரோனா இரண்டாம் அலை எதிரொலி! படப்பிடிப்புகள் ரத்து!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021
vgsgasd

 

இந்தியாவில் வேகமெடுத்துவரும் கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்திலும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ள தமிழக அரசு, தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. ஆக்சிஜன் வசதிகளுடன் கூடிய படுக்கைகளை அமைத்தல், ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள், ஆர்.டி.பி.சி.ஆர். கிட்டுகள், உயிர்காக்கும் மருந்துகள், தடுப்பூசிகள் உள்ளிட்ட பிற மருத்துவக் கருவிகளை வாங்குதல் எனத் தற்போதைய சூழலை எதிர்கொள்ள தமிழக அரசிற்கு பெரிய அளவில் நிதித் தேவை ஏற்பட்டுள்ளது. இதனை சமாளிக்கும் விதமாக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குமாறு பொதுமக்கள், சமூகநல அமைப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

bghsh

 

இதையடுத்து, பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தங்களால் இயன்ற அளவிற்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். இதற்கிடையே, கரோனா இரண்டாம் அலை காரணமாக தற்போது மீண்டும் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. வரும் மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி அறிவித்துள்ளார். இதனால் திரைப்பட தொழிலாளர்கள் மீண்டும் அவதிக்குள்ளாக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கிடையே திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவும் பொருட்டு நடிகர் அஜித் ரூ. 10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும்” - த்ரிஷாவிற்கு ஆதரவாக ஃபெப்சி

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
fefsi about trisha admk member issue

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்ட நிலையில், சசிகலா தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். அப்போது அங்கு பல சம்பவங்கள் நடைபெற்றதாக அதிமுகவின் முன்னாள் சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஏ.வி. ராஜு தற்போது குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் நடிகை த்ரிஷா மற்றும் கருணாஸ் குறித்தும் அவதூறாகப் பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையான நிலையில், திரைத்துறையிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சேரன், “வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதாரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவரை சட்டமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கம் இதற்கு தகுந்த பதிலும் நடவடிக்கையும் எடுக்கும் என நம்புகிறேன்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். மேலும் நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலையும், பொருளாளர் கார்த்தியையும் டேக் செய்திருந்தார். 

இதனைத் தொடர்ந்து த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்து அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் இறங்கி தரம் தாழ்ந்து பேசும் இதுபோன்ற மனிதர்களை தொடர்ச்சியாக பார்ப்பதற்கு அறுவறுப்பாக உள்ளது. இந்த அவதூறுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இனி இவ்விவகாரம் தொடர்பாக எனது சட்ட ஆலோசகரே பேசுவார்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இந்த நிலையில் ஃபெப்சி இந்த விவகாரம் தொடர்பாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “இன்றைய சமூக வலைத்தளங்களில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி. ராஜீ என்பவர் திரைத்துறை குறித்து சில தரமற்ற, அவதூறுகளைக் கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை திரிஷா அவர்களை சம்பந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்பந்தப்படுத்தி இந்த கீழ்த்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார். அரசியலில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்வதற்கு அவர்களுக்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஆனால் உங்கள் அரசியல் பிரச்சனையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, கீழ்த்தரமான அவதூறுகளைத் திரையுலகப் பெண்கள் மீது சுமத்தாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் வன்மையாகக் கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர் முதல் பாரத குடியரசின் தலைவராக முர்மு வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் ‘பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்’ நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக் கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்குப் பணிவன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

லியோ பட விவகாரம் - ஃபெப்சி அறிக்கை

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

fefsi about leo dancers issue

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'லியோ'. இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர். லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் யு/ஏ சான்றிதழுடன் வருகிற 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ரிலீஸாகும் முன்பே சில சர்ச்சையில் படக்குழு சிக்கியுள்ளது. இசை வெளியீட்டு விழா நடத்த திட்டமிடப்பட்டு, பின்பு ரத்தானது. இதற்கு அரசியல் அழுத்தங்களோ அல்லது வேறு காரணங்களோ இல்லை எனப் படக்குழு தெரிவித்தது. இருப்பினும் இது சர்ச்சையாகி, அரசியல் காரணங்களால் தான் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாக சீமான் மற்றும் சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர். 

 

இதையடுத்து வெளியான ட்ரைலரில் விஜய் பேசிய வசனம் ஒன்று பலரை முகம் சுளிக்க வைத்தது. மேலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதை நீக்கக் கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், சென்னையில் ரோகிணி திரையரங்கில் ட்ரைலர் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் திரையரங்கின் இருக்கைகளை உடைத்திருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இப்படி தொடர் சிக்கல்களை எதிர்கொண்டு வரும் படக்குழு நேற்று புது சிக்கலில் சிக்கியது. படத்தில் இடம்பெற்ற 'நா ரெடி தான்...' பாடலில் நடனக் கலைஞர்களாகப் பணியாற்றிய 50க்கும் மேற்பட்டோர், தங்களுக்கு ஊதியம் வந்துசேரவில்லை எனக் காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர். மூன்று மாதங்களுக்கு மேலாகச் சம்பளம் தராமல் இருந்ததாகவும் இது பற்றி தயாரிப்பு தரப்பிடம் கேட்டபோது, சரியாக பதிலளிக்கவில்லை எனவும் புகார் கொடுத்த கலைஞர்கள் கூறுகின்றனர். மேலும் இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டபோது அவர்களுக்கும், நடனக்கலைஞர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

இந்த நிலையில் இந்த நடனக் கலைஞர்கள் விவகாரம் தொடர்பாக ஃபெப்சி தலைவர் செல்வமணி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நடனக் கலைஞர்களின் புகார்களை மறுத்துள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது, "லியோ திரைப்படத்தில் நடனக் காட்சியில் பங்கு பெற்றவர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை என புகார்கள் அளிக்கின்ற காட்சியை பார்த்தோம். திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சியில் 2,000 நடன கலைஞர்களை வைத்து பாடல் எடுக்க இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விருப்பப்படுவதாக அந்த பாடலுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்த நடன இயக்குநர் தினேஷ் மாஸ்டர் தெரிவித்தார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் (FEFSI) இணைந்துள்ள தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடன கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அதிகபட்சமாக 600 கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். 

 

ஏனெனில், அதிகபட்சமாக 1,000 பேர் உறுப்பினராக உள்ள சங்கத்தில் பல்வேறு படங்களில் ஏறக்குறைய 400 கலைஞர்கள் ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதால் 600 நடன கலைஞர்கள் மட்டுமே இருந்தனர். இதுபோன்று அதிகமான நடன கலைஞர்கள் தேவைப்படும்போது முன் வரிசைகளில் நடன கலைஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்களையும், உறுப்பினர் அல்லாத ஓரளவுக்கு நடனம் தெரிந்த அல்லது அழகான தோற்றம் உள்ள ஆண்கள் / பெண்களை பின் வரிசையில் நிற்க வைத்தும் படமாக்குவது வழக்கம். இவர்கள் ரிச் பாய்ஸ் / ரிச் கேர்ள்ஸ் என்றோ மாடல்ஸ் என்றோ உறுப்பினர் அல்லாதவர் என்றோ அழைக்கப்படுவார்கள். இவர்களுக்கு வழக்கமாக 3 வேளை உணவளித்து கன்வேயன்ஸ் (Conveyance) உட்பட ரூ.1000 ஊதியமாக வழங்கப்படும். 

 

இந்த 'லியோ' திரைப்படத்தில் 1,400 உறுப்பினர்கள் அல்லாதவர்கள் சென்னை பனையூரில் உள்ள 'ஆதி ஸ்ரீராம்' ஸ்டுடியோசில் கடந்த ஜீன் மாதம் 06.06.2023 முதல் 11.06.2023 வரை 6 நாட்கள் பாடல் காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. இவர்களுக்கு, உறுப்பினர் அல்லாதவர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் விவாதிக்கப்பட்ட போது ஊதியம் + பேட்டா கன்வேயன்ஸ் உட்பட ஒரு உறுப்பினருக்கு நாளொன்றுக்கு ரூ.1,750/- வீதம் 6 நாட்களுக்கு ரூ.10,500/- ரூபாய் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது.

 

இதன்படி, அனைத்து உறுப்பினர்களுக்கும் அவரவர் வங்கிக்கணக்கில் நேரடியாக 94,60,500/- ரூபாய் மொத்தம் செலுத்தப்பட்டது. அது மட்டுமின்றி இவர்களுக்கு ரிகர்சல் அளித்து ஒழுங்குபடுத்தும் விதமாக சர்வீஸ் சார்ஜ் தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்திற்கு (TANTTNNIS) தனியாக வழங்கப்பட்டது. தற்போது, ஒரு சிலர் தங்களுக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என பேட்டியளித்ததைக் கண்டோம். இது தவறான செய்தியாகும். தமிழ்நாடு திரைப்படம், தொலைக்காட்சி நடனக் கலைஞர்கள் மற்றும் நடன இயக்குநர்கள் சங்கத்தின் (TANTTNNIS) உறுப்பினர்கள் அனைவருக்கும் சேர வேண்டிய ஊதியம் முழுமையாக அவர்களது சங்கத்தில் செலுத்தப்பட்டுவிட்டது. அதேபோல் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு அவரவர் வங்கிக்கணக்கில் தலா ரூ.10,500/- வீதம் (மொத்தம் 6 நாட்களுக்கு) வழங்கப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்" என்றுள்ளது.