seenu ramasamy to stop interval in theatre

மாமனிதன் படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’. இப்படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்யா, ‘குட்டி புலி’ தினேஷ், லியோ சிவகுமார், ஐஸ்வர்யா தத்தா, பவா செல்லதுரை, மானஸி கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விஷன் சினிமா ஹவுஸ் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார். இப்படம் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சீனு ராமசாமி பேசுகையில், “சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். அப்படி என்றால் இது வணிகம் மட்டும் தானா..! இது சந்தை மதிப்புள்ள பொருள் மட்டும் தானா..! இந்தக் கேள்வி.. எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், என்ன மாதிரியான விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம் என நான் சிந்திக்கும் போது எனக்கு இருப்பது நிலம், அது என் நிலம், என் ஊர், என் மண், நான் வாழ்ந்த வாழ்க்கை.‌ நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை.‌ கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.

சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும். இது மிக முக்கியமான கருத்து.‌ உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள். அந்தக் காலத்தில் நாடகத் துறையில் இருந்து சினிமா வந்தது. சம்பூர்ண ராமாயணம் - மூன்றரை மணி நேரம் திரைப்படமாக வந்தது. அதனை ஒரே தருணத்தில் தொடர்ச்சியாக திரையிட முடியாது என்பதற்காக இரண்டு முறை இடைவேளைகள் அளிக்கப்பட்டன.‌ இது நாளடைவில் ஒரு இடைவேளையாக மாற்றம் பெற்றிருக்கிறது.

Advertisment

இணையத் தொடர்கள் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை.‌ ஆனால் மேற்கத்திய நாடுகளில் இணைய தொடர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது.‌ ஏனெனில் அவர்கள் முழு நீள திரைப்படத்தை பார்த்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் பாகம் பாகமாக படைப்பை பார்ப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நாம் முதல் பாதி - இரண்டாம் பாதி என இரண்டு பாகமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கூடுதலாக மூன்று அல்லது நான்கு பாகங்கள் இணைத்தால் நமக்கு பிடிப்பதில்லை. சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த 'கோழிப்பண்ணை செல்லதுரை'யில் கிடைக்கும்” என்றார்.