பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தங்கலான்’. இதில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக யு/ஏ சான்றிதழுடன் நாளை (15.08.2024) வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் படக்குழுவினருக்குத் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சூர்யா, “இந்த வெற்றி மிகப்பெரியதாக இருக்கும்” எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், படக்குழுவை வாழ்த்தியுள்ளார். அவர் கூறுகையில், “ஆதித்தமிழர்களின் வாழ்வியலையும், வலியையும் இரத்தமும் சதையுமாகக் காட்சிப்படுத்தி, இயக்கம், இசை, நடிப்பு, திரைக்கதை, ஒளிப்பதிவு, கலை, தொழில்நுட்பம் என அனைத்து பிரிவுகளிலும் ஆகச்சிறந்த படைப்பாக உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் உலக அரங்கில் தமிழ்த் திரையுலகை தலைநிமிரச் செய்யும் என்ற நம்பிக்கையை விதைக்கிறது.
ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எதிர்கொள்ளும் சமூக சிக்கல்களுக்கும், பறிக்கப்பட்ட அவர்களது உரிமை மீட்புக்கும், நல்வாழ்விற்கும் எனத் தனது ஒப்பற்ற கலைத்திறனை அர்ப்பணித்துள்ள அன்புத்தம்பி பா.ரஞ்சித்துக்கும் நடிப்புக்கலையில் தான் கொண்டுள்ள அளவற்ற காதலாலும், தனித்திறனாலும் தான் ஏற்ற பாத்திரத்திற்கும், கதைக்களத்திற்கும் ஏற்ப தனது உடலை வருத்தி, திருத்தி வெளிப்படுத்தியுள்ள அசாத்திய நடிப்பாற்றலால் காட்சிகளில் நம்மை ஒன்றச் செய்துள்ள பெருங்கலைஞன் அன்புத்தம்பி விக்ரமுக்கும், வரலாற்றுப்பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்திற்கு மண் மனம் மாறாத மக்களிசையாலும், வீரம் தெறிக்கும் போர்ப்பறையிசையாலும் காட்சிகளுக்கு வலிமைசேர்த்துள்ள என் ஆருயிர் இளவல் ஜி.வி.பிரகாஷுக்கும், குருதி தோய்ந்த தங்கச்சுரங்கங்களில் மறைக்கப்பட்ட வரலாற்றை உணர்வுச்சூடேற்றும் திரைக்கதை மற்றும் உரையாடல்களாக வார்த்துள்ள அன்பிற்கினிய எழுத்தாளர்கள் தமிழ் பிரபா, அழகிய பெரியவன் ஆகியோருக்கும், வரலாற்றுக்காலத்தை அதன் விழுமியங்களோடு கண் முன்னே கொண்டு வந்துள்ள கலை இயக்குநர் தம்பி மூர்த்திக்கும், அதனை உலகத்தரத்தில் ஒளிஒவியமாக வடித்துள்ள ஒளிப்பதிவாளர் அன்புத்தம்பி கிஷோர்குமாருக்கும் படத்தொகுப்பாளர் தம்பி செல்வாவிற்கும், தங்கலான் திரைப்படத்திற்கு கடின உழைப்பையும், ஆற்றலையும் வெளிப்படுத்தியுள்ள அனைத்து திரைக்கலைஞர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது அன்பும், பாராட்டுகளும்.
வருகின்ற 15-08-2024 அன்று வெளியாகவிருக்கும் தங்கலான் திரைப்படத்தை உலகெங்கும் பரவிவாழும் என் உயிர்க்கினிய அன்னைத்தமிழ்ச் சொந்தங்கள் அனைவரும் திரையரங்கங்களுக்குச் சென்று கண்டு களித்து, மாபெரும் வெற்றியடையச் செய்து, மேலும் இதுபோன்ற ஆகச்சிறந்த படைப்புகள் தமிழில் உருவாகத் துணை நிற்குமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.