Skip to main content

சண்டியரை எப்படி சமாளித்தார் கமல்? - மெஹந்தி சர்க்கஸ் இயக்குனரின் ஆச்சர்ய அனுபவம்

Published on 20/04/2019 | Edited on 20/04/2019

கமல்ஹாசனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் இயக்குனர் சரவண ராஜேந்திரன். இவரது இயக்கத்தில்‘மெஹந்தி சர்க்கஸ்’படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. சமீபத்தில் சரவண ராஜேந்திரன் கொடுத்த பேட்டியில் கமல் குறித்த சுவாரசியமான அனுபவங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர்...

 

saravana rajenrdan about kamal haasan

 

வீட்டில் நான் சினிமாவுக்கு போறேன்னு சொன்னால் விட மாட்டாங்க, அதனால் படிக்க போறேன்னு சொல்லிட்டு சென்னைக்கு வந்து பச்சையப்பாஸ் காலேஜில் அட்மிஷன் போட்டுட்டு, காலேஜ் போகாமல் சினிமா வாய்ப்புத் தேடி சுற்றினேன். அப்போ மாநில அளவில் ஒரு பேச்சுப் போட்டி நடந்தது. அதற்கு கமல் தான் சிறப்பு விருந்தினராக வந்திருந்தார். அவருக்கு என் பேச்சு ரொம்போ பிடித்திருந்தது, பாராட்டினார். அதேபோல்,அப்போதிருந்த கமல் ரசிகர்மன்ற தலைவர் குணசீலனுடன் எனக்கு நல்ல நெருக்கம் இருந்தது. மேலும், என் நண்பன் அசோக், கமலிடம் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அதன்பிறகு கமலின் பிறந்தநாள் விழா காமராஜ் அரங்கத்தில் நடந்தது. அதில் நாங்கள் மைம் நிகழ்ச்சி ஒன்று நடத்தினோம். அதற்கு ஜேம்ஸ் வசந்த் தான் மியூசிக் போட்டார். முழுசா ஐந்து நிமிட மைம் அது. முடிந்ததும் நல்ல க்ளாப்ஸ் இருந்துச்சு.  2 நாள் கழித்து கமல் எங்களை வரச்சொல்லியிருந்தார்.
 

நாங்கள் அங்கே போனதும் கமல் “மைம் அப்டிங்குறது...”என்று பேச ஆரம்பித்தார். நமக்கு மைம் பண்ணத்தெரியும் ஆனால், அதோட வரலாறுலாம் தெரியாது. அவர் மைம் எங்க தோன்றுனுச்சு, எப்டி வளந்துச்சுன்னுலாம் பேசும் போது பயங்கரமா இருந்துச்சு. பேசி முடிச்சுட்டு “உங்களில் ஒருத்தரை நான் செலெக்ட் பண்ணுறேன், மைம் தான் வாழ்க்கையினு முடிவு பண்றவுங்க கைத்தூக்குங்க, அவங்களை நான் ஃபிரான்ஸுக்கு அனுப்புறேன், அங்கப்போய் இன்னும் கத்துக்கோங்க”அப்படினு சொன்னாரு. ஆனால், ஒருத்தனும் கையத்தூக்கல, அப்படியே என்னப் பார்த்தாரு, ஏன்னா, நானும் அசோக்கும் தான் அந்த மைம் நிகழ்ச்சியை டைரேக்ட் பண்ணுனோம். நான் அவரிடம் எனக்கு சினிமாதான் ஆசைன்னு சொன்னேன். அப்போ அவர் “சினிமாவுக்கு புறவழி வாசலில் வரக்கூடாது, நேர்வழியில வரணும்னு” சொன்னாரு. அப்போ அது எனக்குப் புரியலை. பிறகு யோசிக்கும்போது புரிஞ்சுது. “மைம் பண்ணி அதல் மூலம் சினிமாவுக்கு வரணும்னு ஆசைப்படாதே, அதுக்குன்னு ஒன்னு இருக்கணும்” அப்படினுதான் அவர் சொல்லியிருக்கார். 
 

அதன்பிறகு கமல் விருமாண்டி படம் ஆரம்பிக்கும்போது நான் அவரிடம் உதவி இயக்குனராக சேந்தேன். முதலில் அந்த படத்துக்கு ‘சண்டியர்’ன்னு தலைப்பு வச்சுருந்தாங்க. டாக்டர்.கிருஷ்ணசாமி, இது ஒரு சாதிய படம், இதுக்கு எப்படி சண்டியர்ன்னு தலைப்பு வைக்கலாம்னு பிரச்சனைப் பண்ணினார். மறுநாள் ஷூட்டிங் ஆரம்பிக்கணும், திடீர்ன்னு இந்த பிரச்சனை வந்துடுச்சு. இப்போ என்ன பண்ணலாம்னு யோசிச்சு சூட்டிங் போகல, அப்டியே 20 நாள் சூட்டிங் தள்ளிப் போயிடுச்சு. சண்டியஎன்னு பெயர் வச்சதுக்காக 20 நாள் வேலை நடக்காமல் எல்லோரும் உட்காந்துருக்கோம். சரி, ஷூட்டிங்க ட்ராப் பண்ணிட்டு சென்னைக்கே திரும்பி வந்துட்டோம். சென்னை ஆபிஸில் இருக்கும்போது “இங்கையே செட் போடுங்க. உள்ளயே ஷூட்டிங் போவோம். நான்  ‘சண்டியர்’ன்னு தான் தலைப்பு வைப்பேன்”னு சொல்லி ஷூட்டிங் தொடங்குனோம். அந்த நிலைமையில் அவர் தான் டைரக்டர்,  எல்லோரையும் அவர்தான் ஒருங்கினைக்கணும். அவரே தயாரிப்பாளர், அதற்கான பொறுப்பும் இருக்கு. அவரே ஹீரோவும் கூட. அந்த சூழ்நிலையில இப்படியொரு பிரச்சனையும் வந்துருக்கு. இவ்வளவு பிரச்சனையையும் தாண்டி ஒரு நடிகனாக எந்த இடத்திலும் அதைக் காட்ட மாட்டார். ஸ்பார்ட்டில் விருமாண்டியாகவே இருப்பார். அதேபோல் ஒரு இயக்குனராக எல்லாவற்றையும் ரொம்போ அழகா ஒருங்கிணைத்து செயல்பட்டார். எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் சரி, அதை எந்த விதத்திலும் உன் படைப்பில் கொண்டுவராதே என்பதை நான் அவரிடம் தான் கற்றுக்கொண்டேன். 
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“30 வருசமாச்சு, இன்னும் குறைந்த பாடில்லை” - நக்கீரன் ஆசிரியர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
nakkheeran editor speech in karpu bhoomi audio launch

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளை தான் வெளியிட கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர் கலந்து கொண்டு பேசுகையில், “இயக்குநர் நேசமுரளி பேசியதைப் பார்த்தால் இனி படம் செய்யும் எண்ணம் அவருக்கு இல்லை என்று நினைக்கிறேன். போகிற போக்கில் ராமாயணம் கட்டுக்கதை என சொல்லிவிட்டார். இதையே இனி விடமாட்டார்கள். சீதை என சிங்கத்துக்கு பெயர் வைத்தாலே இப்போது அடிக்கிறார்கள். இந்த சூழலில் நடிகை கவுதமியை பற்றி பேசுகிறார். பாரத தேசமா பாலியல் தேசமா என்கிறார். இதையெல்லாம் கவனித்து கொண்டிருப்பார்கள். ஆனால் இது தான் எதார்த்தம். இதற்குள் தான் வாழ்கிறோம். அதில் ஜெயிக்கிறோம். அவர் பேசின மணல்மேடு, பொள்ளாச்சி நாங்கள் கொண்டு வந்தது தான். மணிப்பூர் சம்பவத்தை நாங்களும் பேசி இருக்கிறோம். இங்கு சென்சாரை நம்பித்தான் படமே எடுக்க வேண்டியிருக்கிறது. நாங்களும் கூச முனுசாமி வீரப்பன்னு ஒரு டாக்குமெண்டரி சீரிஸ் பண்ணோம். அதைப் பார்த்துவிட்டு சிலர் கேட்டார்கள்… ஏன் இதை படமாகச் செய்யவில்லை என்று. வேறு வினையே வேண்டாம். சென்சாரிடம் இருந்து ஒரு ரீலும் தப்பாது. ஏன் தேவையின்றி அவர்களிடம் போய் கெஞ்ச வேண்டும் என்று கூறினேன். 

இந்த பொள்ளாச்சி விஷயத்தில் மொத்தம் 1100 வீடியோக்கள், எங்களிடமிருந்தது வெறும் 3 மட்டும் தான். மற்ற வீடியோக்களை வெளியிடக் கூடாது என்று அதிகாரிகளும் ஒரு அரசியல் பிரமுகரும் மிரட்டினார்கள். சிபிசிஐடி அலுவலகத்தில் இருந்து சாட்சி விசாரணை செய்ய வேண்டும் என்று அழைப்பு வருகிறது. அவர்கள் என்னிடம் கேட்ட கேள்வி யாரைக் கேட்டு வீடியோவை வெளியிட்டீர்கள். யாரைக் கேட்டு வெளியிட வேண்டும் என்று கேட்டேன். வெளியிட்டிருக்கவே கூடாது என்றார்கள். நான் அப்படி சட்டம் எதுவும் இருக்கிறதா என்றேன். சட்டம் இல்லை ஆனால் அப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்றார்கள். குற்றவாளி தப்பாமல் இருக்கவும், இது போன்று இனி நடக்காமல் இருக்கவும் தான் நாங்கள் செயலாற்றி இதை செய்தி ஆக்குகிறோம் என்று கூறினேன். பத்திரிக்கையில் போட்டதற்கே இந்த விசாரணை. ஆனால் நேச முரளி சினிமா எடுத்திருக்கிறார். சும்மா விடுவாங்களா.  

இயக்குநர் நேசமுரளியின் கோபமும் வேகமும் புரிகிறது. எங்களுக்கும் அந்த கோபம் இருக்கிறது. ஆனால் யதார்த்தம் வேறுமாதிரி இருக்கிறது. உங்களை நம்பி தொழில்நுட்ப கலைஞர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள். இது போன்று படமெடுத்தால் 109 கட் பண்ணுவோம் என்பதற்கு நேசமுரளி உதாரணமாகிவிட்டார். சென்சார் போர்டை ஆட்கொண்டுவிட்டனர். அதை மீறித் தான் அவர் ஜெயித்தாக வேண்டும். அடுத்ததாக மணிப்பூர் விவகாரத்தை படமெடுக்க வேண்டும் என சொன்னார். மணிப்பூர் என்ற தலைப்பை எப்படி விடுவார்கள். இந்தியாவே பார்த்து கொண்டிருக்கிற பாலியல் பிரச்சனை. ஆனால் எதுவுமே பண்ணவில்லை, என சொல்லி மறுபடியும் அந்த பூமியில் அது போன்ற சம்பவங்கள் நடக்கிறதாக சொல்கிறார்கள். இதை எப்படி சென்சார் அனுமதிக்கும் என நம்புகிறீர்கள். 

மணல்மேடு விஷயத்தை 1994லயே நான் அட்டைப்படமா எடுத்தேன். ஒரு பிள்ளைய வீடு தேடி வந்து சிதைச்சிட்டாங்க. பால்டாயில் குடிச்சி குடும்பமே இறந்துட்டாங்க. 30 வருசமாச்சு. இன்னும் இதுமாதிரி சம்பவம் குறைந்த பாடில்லை, கூடத் தான் செய்கிறது. இப்படத்தை எப்படி மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பது என்று யோசித்து செயல்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து. அதற்கான வழியை தேர்ந்தெடுப்பது நல்லது. அதற்கு நக்கீரனும் துணை நிற்கும்” என்றார். 

Next Story

ஜி2 படத்தில் பனிதா சந்து நாயகியாகிறார்!

Published on 22/11/2023 | Edited on 22/11/2023

 

 Panitha Sandhu is the female lead in G2

 

அதிவி சேஷ் கதையின் நாயகனாக நடிக்கும். 'G2 '( குடாச்சாரி 2) படத்தில் நடிகை பனிதா சந்து நாயகியாக நடிக்கிறார்.

 

நடிகர் அதிதி சேஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் 'G2'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அண்மையில் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், தற்போது இப்படத்தில் நடிக்கும் நாயகி யார்? என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது. 'குடாச்சாரி 2' எனும் இந்த படத்தில் நாயகன் அதிவி ஷேஷுக்கு ஜோடியாக நடிகை பனிதா சந்து நடிக்கிறார் என்ற செய்தியை தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.‌இந்தத் திரைப்படத்தை மக்கள் மீடியா ஃபேக்டரி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் மற்றும் ஏ கே என்டர்டெய்ன்மெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிப்பாளர்கள் டி. ஜி. விஸ்வ பிரசாத் மற்றும் அபிஷேக் அகர்வால் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த திரைப்படத்தை வினய் குமார் சிரிகிடினி இயக்குகிறார்.‌

 

'மேஜர்', 'காஷ்மீர் ஃபைல்ஸ்' மற்றும் 'கார்த்திகேயா 2' போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்களின் தயாரிப்பில் உருவாகும் ஆக்ஷன் கலந்த ஸ்பை திரில்லர் திரைப்படம் தான் 'ஜி2'.  இது போன்ற திறமையான நடிகர்களுடனும் இணைவதால் படம் பிரம்மாண்டமாகவும், தரமுடனும் இருக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.‌ 'அக்டோபர்', 'சர்தார் உத்தம்' போன்ற படங்களில் நடித்து, பாலிவுட்டின் நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வருகிறார் நடிகை பனிதா சந்து. இது மட்டுமின்றி அவர் தற்போது இந்தி, ஆங்கிலம், பஞ்சாபி ஆகிய மொழிகளில் தயாராகும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரை இந்த திரைப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் காண்பதற்கு ரசிகர்கள் உற்சாகத்துடன் தயாராக இருக்கிறார்கள்.

 

இது தொடர்பாக நடிகை பனிதா சந்து பேசுகையில், '' இது என்னுடைய முதல் பான் இந்திய திரைப்படமாகும். இதுபோன்ற நம்ப முடியாத தொலைநோக்கு பார்வையுடன் கூடிய திறமையான குழுவுடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன். நான் இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். பார்வையாளர்கள் என்னை முற்றிலும் புதிய அவதாரத்தில் திரையில் பார்க்கவிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆக்கபூர்வமான மகிழ்ச்சியுடன் கூடிய அனுபவமாக இருக்கும். '' என்றார்.