Skip to main content

தற்கொலை சம்பவம்;  நீதிமன்றத்தை நாடிய சல்மான் கான் 

Published on 23/05/2024 | Edited on 23/05/2024

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் சல்மான்கான், மும்பை பாந்த்ரா நகரில் வசித்து வருகிறார். இத்தகைய சூழலில் கடந்த மாதம் 14ஆம் தேதி, அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வந்து, துப்பாக்கிச் சூடு நடத்தினர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடதக்கது. 

இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், அந்த இரண்டு மர்ம நபர்களை தேடி வந்தனர். பின்பு அந்த இரண்டு நபர்கள் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) எனக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்தனர். அவர்கள் இருவரும் இந்தியாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக அவர்களுக்கு உதவிய அனுஜ் தாபன் மற்றும் சோனு சுபாஷ் உட்பட 11 பேரை போலிஸார் கைது செய்தனர். 

இதில் அனுஜ் தாபன் என்பவர், கஸ்டடியில் இருக்கும் போது கடந்த மே 1ஆம் தேதி இறந்துள்ளார். அவர் கழிவறையில் தற்கொலை செய்து கொண்டதாக போலிஸார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அனுஜ் தாபன் தாயார், தன் மகன் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மகனின் மரணம் குறித்து விசாரணை நடத்த மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இது தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 

இந்த நிலையில் சல்மான் கான், அனுஜ் தாபனின் தாயார் தாக்கல் செய்த மனுவில் தனது பெயரை நீக்கக் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இது தொடர்பாக சல்மான் கானின் வழக்கறிஞர் கூறியதாவது, “உண்மையில் இந்த வழக்கில் சல்மான் கான் தான் பாதிக்கப்பட்டவர். அவரை குறிவைத்து தான் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதற்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என அவருக்குத் தெரியவில்லை. யார் கைதானது கூட தெரியவில்லை. அதனால் சல்மான் கான் மேல் குற்றம் சொல்வது, தவறான ஒன்று. அதோடு அவரது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகவும் இருக்கிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

கான் நடிகருடன் ஜோடி - பாலிவுட்டில் டேக் ஆஃப் ஆகும் ராஷ்மிகா மந்தனா

Published on 09/05/2024 | Edited on 09/05/2024
rashmika mandana to pair witha salman khan in ar murugadoss project

ரஜினியின் தர்பார் படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிவகார்த்திகேயனின் 23ஆவது படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர் முருகதாஸ். இப்படத்தில் ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க அனிருத் இசையமைக்கிறார். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி மாதம் பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்தப் படத்தை அடுத்து பாலிவுட்டில் சல்மான் கானை வைத்து படமெடுக்கவுள்ளார் ஏ.ஆர் முருகதாஸ். இதன் மூலம் பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமீர் கான், அக்‌ஷய் குமார் உள்ளிட்ட ஹீரோக்களை இயக்கிய ஏ.ஆர் முருகதாஸ் மற்றொரு முன்னணி நடிகரான சல்மான் கானை இயக்கவுள்ளார். சல்மான் கான், கடைசியாக டைகர் 3 படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது. இதையடுத்து விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக 1 வருடத்திற்கும் மேலாக தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. ஆனால், அப்படம் குறித்த அப்டேட் இன்னும் வெளியாகாத சூழலில் சர்ப்ரைஸாக ஏ.ஆர் முருகதாஸ் பட அறிவிப்பு வெளியானது. 

rashmika mandana to pair witha salman khan in ar murugadoss project

முதல் முறையாக இருவரும் கூட்டணி வைத்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிக்கந்தர் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தை தயாரிப்பாளர் சஜித் நதியாத்வாலா தயாரிக்கிறார். அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இதனைக் கடந்த மார்ச்சில் அறிவித்த படக்குழு, தற்போது கதாநாயகி குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளார். இதற்கு முன்பு பாலிவுட்டில் ரன்பிர் கபூருக்கு ஜோடியாக அனிமல் படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் தெலுங்கில் புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள்ஃபிரண்ட் மற்றும் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் தனுஷின் குபேரா படத்தில் நடித்து வருகிறார்.

Next Story

இறுதி எச்சரிக்கை.... சல்மான் கானுக்கு நிழல் உலக தாதா மிரட்டல்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Dada threat to Salman Khan

மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே அமைந்துள்ளது பாந்த்ரா. இப்பகுதியின் கேலக்சி என்ற பெயர் கொண்ட அடுக்குமாடி கட்டடத்தில் வசித்து வருகிறார் நடிகர் சல்மான் கான். அவருடன் குடும்பத்தினர் ஒன்றாக குடியிருந்து வருகின்றனர். 

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி அதிகாலையில் சல்மான் கான் வீடு அருகே ஹெல்மட் அணிந்து இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் நோட்டமிட்டுள்ளனர். திடீரென அந்த நபர்கள், தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சல்மான் கான் வீட்டை நோக்கி சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். பிரல நடிகர் வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனிடையே, நடந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த மும்பை போலீசார் குற்றாவாளிகளைத் தேடிவந்தனர். முதற்கட்டமாக போலீசார், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய பைக்கை, ஒரு கிலோமீட்டர் தூரத்தில் கண்டெடுத்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், விக்கி ப்தா மற்றும் சாகர் பால் என்ற இரண்டு பேரை மும்பை குற்றப்பிரிவு போலிசார் அதிரடியாக கைது செய்தனர்.

தொடர்ந்து, நடிகர் சல்மான் கான் துப்பாக்கி சூடு நடைபெற்ற பிறகு தனது வீட்டில் இருந்து ரசிகர்களைச் சந்தித்தார். ஆனால், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து இதுவரை நடிகர் சல்மான் கான் எதுவும் வெளிப்படையாக பேசாத நிலையில், “எங்கள் குடும்பத்தினர் இந்தச் சம்பவத்தின் மூலம் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து யார் சொல்வதையும் நம்ப வேண்டாம்” என சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனிடையே, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவை நடிகர் சல்மான் கான், தனது தந்தை சலீம் கானுடன் சந்தித்த வீடியோ வெளியாகியுள்ளது. அதில் அவர்கள் எதுகுறித்து பேசினார்கள் என்ற தகவல் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இத்துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் பொறுப்பேற்றுள்ளார். அவர் வெளிப்படையாக தனது முகநூல் பக்கத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். அதில், இது டிரைலர்தான் என்றும், இறுதி எச்சரிக்கை என்றும் குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவு தற்போது வைரலாகி வரும் நிலையில், குற்ற சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள அன்மோல் பிஷ்னோய் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் தொடர்ந்து வந்த நிலையில், துப்பாக்கிச் சூடு வரை சென்று இருப்பது திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது அன்மோல் பிஷ்னோய் ஆக இருந்தாலும், இதற்கெல்லாம் மூளையாக செயல்பட்டது அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் என்கின்றது மும்பை போலீஸ் வட்டாரம். லாரன்ஸ் பிஷ்னோயிக்கும் சல்மான் கானுக்கும் தனிப்பட்ட முறையில் எந்த வித விரோதமும் கிடையாது. ஆனால், சல்மான் கான், மான் வேட்டையாடியதாக கூறும் விவகாரம்தான் இருவருக்கும் பகையை ஏற்படுத்தியுள்ளது.

சல்மான் கான் வேட்டையாடிய மான்கள, பிஷ்னோய் சமுதாய மக்கள் தெய்வமாக கருதுகின்றனர். இதனால் சல்மான் கான் மான் வேட்டையாடியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கோரிக்கை வைத்தார். மன்னிப்பு கேட்கவில்லையெனில் சல்மான் கானை ஜெய்ப்பூரில் கொலை செய்வோம் என்று லாரன்ஸ் பிஷ்னோய் கடந்த 2018 ஆம் ஆண்டு கோர்ட்டிற்கு வெளியில் மிரட்டல் விடுத்தார். அதன் பிறகு சிறைக்குச் சென்றாலும் தொடர்ந்து தனக்கு என்று ஒரு படையைக் கட்டமைத்துக் கொண்டு லாரன்ஸ் பிஷ்னோய் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் விடுத்து வந்தார். பிரபல கேங்ஸ்டராக அறியப்படும் லாரன்ஸ் பிஷ்னோய் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருக்கிறது. சிறையில் இருந்தாலும், அவர் கொடுத்த டாஸ்க்காகத்தான் இந்தழ் சம்பவம் நடைபெற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, தேசிய புலனாய்வு முகமையின் தரவுப்படி, லாரன்ஸ் பிஷ்னோய் கொல்லத்துடிக்கும் 10 பேர் கொண்ட முக்கியஸ்தர்கள் பட்டியலில் சல்மான் கானின் பெயரும் இடம்பெற்றுள்ளது. இதனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து சல்மான் கானுக்கு 11 பேர் அடங்கிய Y+ பாதுகாப்பு அதிகாரிகள் குழு பாதுகாப்பு அரணாக செயல்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.