Skip to main content

“இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானதல்ல...”- நடிகை சாய் பல்லவி!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

sai pallavi

 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்தச் சம்வபம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பலரும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று ட்விட்டரில் ஹேஸ்டேக் ட்ரெட்ண்ட் செய்து வருகின்றனர். பல பிரபலங்களும் இதுகுறித்து தங்களின் கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், இதுகுறித்து நடிகை சாய் பல்லவி கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

 

“மனித இனத்தின் மேலான நம்பிக்கை அதிவேகமாகக் குறைந்து வருகிறது. குரலற்றவர்களுக்கு உதவுவதற்காக நமக்களிக்கப்பட்ட அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறோம். பலவீனமானவர்களைக் காயப்படுத்துகிறோம். நம் அரக்கத்தனமான இன்பத்துக்காகக் குழந்தைகளைக் கொல்கிறோம்.

 

கடக்கும் ஒவ்வொரு நாளும், இயற்கை மனித இனத்தைச் சுத்திகரிக்க எண்ணுவதாகவே தோன்றுகிறது. இப்படி ஒரு மோசமான வாழ்வை வாழ்ந்துகொண்டு, இப்படிப்பட்ட நிகழ்வுகளைப் பார்த்து எதுவும் செய்ய இயலாத பயனற்ற வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் வாழும் இந்த உலகம் இன்னொரு குழந்தையின் பிறப்புக்குத் தகுதியானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், "இதுபோல சம்பவங்கள் வெளியே தெரிந்து அது சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டானால்தான் நீதி கிடைக்கும் என்கிற போக்கும் மாற வேண்டும். பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

போதைப்பொருள் பதுக்கல்; இறால் பண்ணையை இடித்து தரைமட்டமாக்கிய அதிகாரிகள்

Published on 15/03/2024 | Edited on 15/03/2024

 

புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் கிராமத்தில் உப்பளம் நடத்த அரசு நிலத்தை குத்தகைக்கு பெற்று அந்த நிலத்தில் பலர் சட்டவிரோதமாக இறால் பண்ணை நடத்தி வருகின்றனர். இதற்காக தவறான முகவரிகள் கொடுத்து மின்சாரம் பெற்று நடத்தி வருகின்றனர். இதுபோல உப்பளம் நடத்த அனுமதிபெற்ற ஒரு இறால் பண்ணையில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கஸ்டம்ஸ் அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் செய்து ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில், லேகியம் மற்றும் 874 கிலோ கஞ்சா மூட்டைகளைக் கைப்பற்றி அதே இடத்தில் இருந்த சாராய ஊறலையும் அழித்து கைப்பற்றப்பட்ட போதைப் பொருட்களை சரக்கு வாகனத்தில் அள்ளிச் சென்றனர்.

இது சம்பந்தமாக 3 பேரை கைது செய்து விசாரணை செய்து வரும் நிலையில், இந்த கடத்தலில் மேலும் பல பெரும்புள்ளிகள் சிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை புதன்கிழமை புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை ஆவுடையார்கோயில் வட்டாட்சியர் மார்டின் லூதர் கிங், மீன்வளத்துறை உதவி இயக்குநர் பஞ்ச ராஜா, சாதிக் பாட்சா, கனகராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணைகளை மூடி ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது ரூ.112 கோடி மதிப்புள்ள கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகையை பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்து தரைமட்டமாக்கினர். மேலும் இறால் பண்ணை கரைகள் உடைக்கப்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் சட்டவிரோதமாக செயல்படும் இறால் பண்ணை ஆக்கிரமிப்புகளை அகற்ற முயன்ற போது பண்ணை குட்டைகளில் இறால் குஞ்சுகள் விட்டிருப்பதால் 2 மாத அவகாசம் வேண்டும் என்று அதிகாரிகளிடம் பேசி அவகாசம் பெற்றுள்ளனர்.

பரபரப்பான சூழ்நிலையில் கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கௌதமன் தலைமையிலான ஏராளமான போலீசார் பாதுகாப்பு செய்திருந்தனர். போதைப் பொருட்கள் பதுக்கி வைத்திருந்த இறால் பண்ணை கொட்டகை மற்றும் சட்டவிரோத இறால் பண்ணையை அதிகாரிகள் உடைத்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

இறால் பண்ணையில் சிக்கிய போதைப் பொருட்கள்; காவல்துறை அதிர்ச்சி

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Narcotics found in shrimp farm; Surrender to court

தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு அடிக்கடி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தப்படுவது வழக்கமாகிவிட்ட நிலையில் கடத்தல் போதைப் பொருட்கள் பிடிபட்டு வருகிறது. இந்த வகையில் புதுக்கோட்டை - ராமநாதபுரம் எல்லைப் பகுதியில் இருந்து கஞ்சா மற்றும் கஞ்சா எண்ணெய், லேகியம் ஆகியவை இலங்கைக்கு கடத்த தயாராக உள்ளது என்ற தகவல் கிடைத்து திருச்சி கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தை சேர்ந்த அமீர்சுல்தான் என்பவர் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே வெளிவயல் உப்பளம் அருகே ஒரு தனியார் இறால் பண்ணையை 6 மாதத்திற்கு முன்பு குத்தகைக்கு பெற்று அந்தப் பண்ணை குளத்தில் தண்ணீரோ, இறால் குஞ்சுகளோ விடாமல் உள்ளார். ஆனால் நள்ளிரவு நேரங்களில் அடிக்கடி வாகனங்கள் வந்து செல்லும் தகவலறிந்து அந்த இறால் பண்ணையில் உள்ள கொட்டகையை சோதனை செய்தபோது கஸ்டம்ஸ் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து நின்றனர்.

காரணம், அந்த கொட்டகையில் ரூ.110 கோடி மதிப்புள்ள கஞ்சா எண்ணெயிலிருந்து தயாரிக்கப்பட்ட லேகியம் பண்டல்கள் மற்றும் மூட்டை மூட்டையாக 824 கிலோ கஞ்சா பண்டல்களும் கண்டுபிடித்தனர். கூடவே சாராய ஊறல் ஒரு பேரலும் அழிக்கப்பட்டது. இறால் பண்ணையில் இருந்த காவலாளி அரசநகரிப்பட்டினம் முசிபுர் ரகுமான் உட்பட 3 பேரை கைது செய்த கஸ்டம்ஸ் அதிகாரிகள் போதைப் பொருள்களையும் கைப்பற்றி ராமநாதபுரம் கொண்டு சென்று நேற்று செவ்வாய்க்கிழமை மணமேல்குடி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

நீதிமன்ற அனுமதி பெற்று இன்று புதன்கிழமை புதுக்கோட்டை கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் அத்தியாவசிய பண்டங்கள் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் இறால் பண்ணையில் கைப்பற்றப்பட்ட ரூ.112 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை ஒப்படைத்தனர். இந்த தகவல் பரவியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்த சம்பவத்தில் 3 பேரை பிடித்து விசாரணை செய்து வரும் நிலையில், இதில் மேலும் பலர் சம்பந்தப்பட்டிருப்பதால் விரைவில் அவர்களையும் பிடித்து  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக கஸ்டம்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.