நடிகர் மற்றும் இயக்குநரான மாரிமுத்து(57) மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இன்று காலை, சின்னத்திரையில் அவர் நடித்து வரும் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த அவர், திடீரென மயக்கம் போட்டு விழ, அருகில் இருந்த ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, நெஞ்சுவலி காரணமாக இறந்து விட்டதாக உறுதி செய்துள்ளனர். சென்னையில் உள்ள இவரது இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு இயக்குநர் வசந்த், சரத்குமார். எம்.எஸ். பாஸ்கர், வையாபுரி மற்றும் அவர் நடித்து வந்த சீரியல் நடிகர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். பின்பு செய்தியாளர்களிடம் மாரிமுத்துவுடன் பணியாற்றியதை கண்ணீர் மல்கத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரோபோ ஷங்கர், "மாரிமுத்து அண்ணன், எங்களுக்கு அன்பு சகோதரரா, குடும்ப நண்பரா, நல்ல படைப்பாளியா, ஒரு நல்ல இயக்குநரா, எல்லாரையும் சிரிக்க வைக்கிற ஒரு அற்புதமான மனிதர். அது மிகப் பெரிய இழப்பு. நாங்களெல்லாம் ஒரே ஜிம்மில் உடற்பயிற்சி செய்தோம். மிகவும் கவனத்தோடு உடற்பயிற்சி செய்வார். மற்றவர்களை சிரிக்க வச்சிக்கிட்டு மகிழ்ச்சியா இருப்பார். கேமராவுக்கு பின்னால் அவரை பார்த்தால் முரட்டுத்தனமாக இருக்கிறார் என, அவரிடம் எல்லாரும் பேச பயப்படுவாங்க. ஆனால் பழகினால் குழந்தை மாதிரி. தென் பகுதியில் இருக்கிற உடல்மொழி, அவர் நடித்த கதாபாத்திரத்தில் இனி யார் நடித்தாலும் ஈடு கொடுக்க முடியுமா எனத் தெரியவில்லை" என்றார்.