Skip to main content

கனவில் நயன்தாரா வரவில்லை, இவர்கள்தான் வந்தார்கள் - ஆர்.ஜே. பாலாஜி இன்டெர்வியூ... பாகம்-1

Published on 07/11/2020 | Edited on 07/11/2020

 

rjb

 

'எல்.கே.ஜி' படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி, நடித்துள்ள படம் 'மூக்குத்தி அம்மன்'. இந்தப் படத்தில் நயன்தாரா முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் தீபாவளி அன்று 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் நேரடியாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது. மூக்குத்தி அம்மன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி, நமக்குப் பேட்டி அளித்தார். அந்தப் பேட்டி வருமாறு:-

 

இதற்கு முன்பு அரசியல் படம், இப்போது அம்மன் படம். அம்மன் படம் எடுக்கக் காரணம்? 


ஜாலியாக, ஜனரஞ்சகமான, குடும்பத்தோடு பார்க்கக்கூடிய பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படம் எடுக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஏன் அம்மன் படமென்றால், அம்மன் படம் வந்து இருபது வருடம் ஆகிவிட்டது. முன்பெல்லாம், அம்மன் படத்தை குடும்பத்தோடு பார்ப்பார்கள். இப்போது பேய்ப்படத்தைக் குடும்பத்தோடு பார்க்கிறார்கள். மீண்டும் குடும்பத்தோடு பார்க்கும்  அம்மன் படம் எடுக்கலாமென்பதுதான் இப்படத்தை எடுக்கக் காரணம்.

 

ட்ரைலரில் மதத்தை வைத்து ஓட்டு வாங்கமுடியாது. ஆனால் இன்னும் ஐந்து வருடத்தில் வாங்கிக் காட்டுகிறேன் பார் என வசனம் வருகிறது. அது போன்ற சூழல், தமிழ்நாட்டிற்கோ அல்லது இந்தியாவிற்கோ வருமா?. போன படத்தில் பேசிய அரசியலுக்கும் இந்தப் படத்தில் பேசப்போகிற அரசியலுக்கும் என்ன வித்தியாசம்? 

 

போன படம் ஒரு அரசியல் படம். இது ஒரு குடும்பப் படம். ஒரு குடும்பத்தைப் பற்றிய கதையில், செய்திகளில் பார்க்கிற, நக்கீரனில் படிக்கிற விஷயங்களிலிருந்து சின்னச் சின்ன விஷயங்களைச் சேர்த்திருக்கிறோம். மற்றபடி இது அரசியல் பேசுகிற படமல்ல. போன படம் நடப்பதைக் காட்டிய படம். இந்தப்படம் ஒரு குடும்பத்திற்கு, கடவுள் மீதான நம்பிக்கை எப்படி இருந்தது. அது எப்படி மாறியது என்பதைச் சொல்லும் படம். நான் காவியமெல்லாம் எடுக்கவில்லை. தியேட்டருக்கு வந்தால் சந்தோசமாகப் பார்க்கும் ஒரு படமாக இருக்கும்.


நயன்தாரா என கூகுளில் தேடினாலே, அவர் அம்மன் கெட்டப்பில் இருக்கும் படங்கள்தான் வருகின்றது. அந்த வேடத்திற்கு நயன்தாரா பொருந்துவார் என நினைத்தீர்களா? நயன்தாரா மூக்குத்தி அம்மனாக வாழ்ந்திருக்கிறார் எனக் கூறினீர்கள். என்றாவது கனவில் நயன்தாரா மூக்குத்தி அம்மனாகக் காட்சியளித்துள்ளாரா?  

 

cnc

 

நயன்தாரா எனத் தேடினால் அம்மன் படங்களாக வருகிறதென்றால், நிறைய பேருக்கு அது பிடிக்கிறது என்றுதானே அர்த்தம். ஒன்று வருவதற்கு முன்பு அது எப்படி இருக்குமென யாருக்கும் தெரியாது. சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு சேவாக்கை கேப்டனாக போடலாமென்று நினைத்தார்கள். ஆனால் மறைந்த கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் மட்டும், தோனியைக் கேப்டனாக போடலாம் என்றார். இன்று தோனியை எப்படிப் பார்க்கிறோம்? 

 

அதுபோல்தான் படம் ஆரம்பிக்கும்போது கே.ஆர்.விஜயா அம்மா நடித்திருக்கிறார். ரம்யா கிருஷ்ணன்  நடித்திருக்கிறார். நயன்தாராவுக்கு  எப்படி செட் ஆகும் என நினைத்தார்கள். ஆனால், இப்போது அம்மன் என்றாலே நயன்தாராதான் நியாபகம் வருகிறார் என்கிறார்கள். இப்போதுள்ள தலைமுறை நயன்தாராவை அம்மனாக ஏற்றுக்கொண்டார்கள் என்றுதான் நினைக்கிறேன். இப்போது கனவெல்லாம் வருவதில்லை. கண்ணை மூடினால் படத்தின் எடிட்டர் முகமும், இன்னொரு இயக்குனரான சரவணன் முகமும் தான் வருகிறது.

 

ஒரு அரசியல்வாதி கதாபாத்திரத்தில் இருந்து அரசியல் பேசுவதற்கும், எளிய மக்களின் பார்வையிலிருந்து அரசியல் பேசுவதற்கும் என்ன மாதிரியான சிரமங்கள் இருந்தது?      

     

எல்.கே.ஜி  படத்தில் நான் ஒரு ஊழல் கவுன்சிலர். எல்லாவற்றையும் நானே பேசியிருப்பேன். இறுதியில் திருந்துவது போல் காட்சி இருக்கும். ஆனால் இது ஒருவனைப் பற்றிய படம் கிடையாது. அம்மா, தங்கை கதாபாத்திரங்கள், பின்பு எனது காதபாத்திரம் மற்றும் தாத்தா கதாபாத்திரம் என அனைவரது உணர்ச்சிகள் தான் இப்படம். நான் ஒருவன் மட்டும் பேசும் படமாக இது இல்லை.

 

எல்.ஆர். ஈஸ்வரி அம்மா படத்தில் பாடியிருக்கிறார். அவருடைய ஸ்பிரிட் எப்படி இருந்தது?

 

nkn

 

எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா இல்லாமல், அம்மன் படம் எடுக்க முடியுமா எனத் தெரியவில்லை. இப்படத்தில் பாடுவது மட்டுமில்லாமல் நடிக்கவேண்டும் எனக் கேட்டேன். 60 வருடத்தில், அவர்கள் படத்தில் நடித்ததில்லை. நான் கேட்டவுடன் சரியென்றுவிட்டார்கள். இந்த வயதில் நாகர்கோவில் வரை வந்து நான்கு, ஐந்து மணி நேரம் இருந்து நடித்துத் தந்தார். ஏ.ஆர். ரஹ்மான் சார், அதைப் பார்த்துவிட்டு, ஆச்சரியப்பட்டதாக ட்விட் செய்துள்ளார். அவர் மட்டுமல்ல எங்களுக்கும் ஆச்சர்யம்தான். இந்த வயதில் அப்படி ஒரு எனர்ஜி. அவர் இருக்குமிடம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

 

 

 

சார்ந்த செய்திகள்