Skip to main content

“நான் எம்.ஜி.ஆர் வழிவந்தவன், எனக்கு இதெல்லாம் பிடிக்காது” - நடிகர் ராமராஜன்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

ramarajan talk about Saamaniyan movie

 

80 களில் முன்னணி நடிகராக இருந்த ராமராஜன் ’சொர்க்கமே என்றாலும்’, ’எங்க ஊரு பாட்டுக்காரன்’, ’கரகாட்டக்காரன்’ உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதன் பிறகு சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த ராமராஜன் தற்போது சாமானியன் படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் ரீ-என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

 

இப்படத்தின் டீசர் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ராமராஜன், “நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஒரு வார்த்தை கொல்லும், ஒரு வார்த்தை வெல்லும் என்பது போல இப்போது மீண்டும் ஹீரோவாகவே திரும்பி வந்துள்ளேன். இந்த படத்தில்  நான்  ஹீரோ என்பதைவிட கதையும், திரைக்கதையும்தான் ஹீரோ என்று சொல்லலாம். இந்த படத்தின் டீசரை பார்த்துவிட்டு ராமராஜன் துப்பாக்கி புடிச்சு என்ன பண்ணப் போறார் என்றுதான் பலரும் கேட்பார்கள் அதற்கான விடை இந்த படத்தில் இருக்கிறது.  

 

இத்தனை வருடங்களில் எத்தனையோ கதைகள் கேட்டேன். சரியாக அமையவில்லை. ஆனால் எவ்வளவு கோடி கொடுத்தாலும் தரம் கெட்டுப்போய் மோசமான படங்களில் நடிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் நான் பின்தொடர்வது எம்ஜிஆரின் பாதையை. அதனால்தான் தம் அடிக்கவும், தண்ணி அடிக்கவும் எனக்கு பிடிக்காது.  இந்த 45 வருடங்களில் 45 படங்களில் நடித்து விட்டேன் சினிமாவுக்கு வந்ததில் இருந்து இப்போதுவரை நான் தாடி வைத்ததே இல்லை இந்த படத்திற்காக முதல் முறையாக தாடி வைத்து நடிக்கிறேன். இந்தப்படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் கூறியபோது அவர் சொன்ன இன்டர்வல் காட்சியை கேட்டு திகைத்து விட்டேன். 

 

இதுவரை தமிழ் சினிமாவிலேயே வந்திராத அப்படி ஒரு இன்டர்வெல். அதுமட்டுமல்ல இந்த படத்தின் டைட்டில் என்னை ரொம்பவே கவர்ந்துவிட்டது. ஒரு படத்தின் டைட்டில் என்பது படத்திற்கு உயிர் போன்றது. படங்களின் இரண்டாம் பாகம் எடுக்கும்போது கூட அதற்கென தனியாக ஒரு டைட்டில் வைக்க வேண்டும். முதல் குழந்தை பிறந்தபோது நாள் நேரமெல்லாம் கணித்து அலசி ஆராய்ந்து கண்ணன் என பெயர் வைத்துவிட்டு, இரண்டாவது குழந்தை பிறக்கும் போது கண்ணன் 2 என யாராவது பெயர் வைப்பார்களா..? என்னிடம் கூட ஒரு சிலர்‘கரகாட்டக்காரன் 2’ எடுக்கலாமா என கேட்டபோது அப்படியே அவர்களை ஆஃப் பண்ணிவிட்டேன். இயக்குநர் விஜய் மில்டன் ’கோடீஸ்வரன் 2’ வில் நடிக்கிறீர்களா என கேட்டு வந்தபோது மறுத்துவிட்டேன்

 

50 படம் நடித்துவிட்டு அதன்பிறகு டைரக்ஷன் பக்கம் போய்விடலாம் என்றுதான் முடிவு செய்திருந்தேன். ஆனால் சூழ்நிலை அப்படியே மாறிவிட்டது. இப்போது 45 படம்.. இது போதும் எனக்கு.. முதல் முறையாக எனது படம் 5 மொழிகளில் வெளியாகிறது என்பதை இப்போது நினைத்தாலும் இது கனவா இல்லை நனவா என்றுதான் நினைக்க தோன்றுகிறது. இந்தப் படத்தின் இயக்குநர் ராகேஷை பார்க்கும்போது என்னை முதன்முதலாக நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் கதாநாயகனாக அறிமுகப்படுத்திய இயக்குநர் வி.அழகப்பன் போன்றே எனக்கு தோன்றுகிறார். இந்த நேரத்தில் எனக்கு இப்படி ஒரு படத்தை கொண்டு வந்ததற்காக தயாரிப்பாளர் மதியழகனுக்கும்,  இயக்குநர் ராகேஷுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

திரிஷாவின் கண்டனம்; சில மணிநேரத்தில் வீடியோ வெளியிட்ட ஏ.வி. ராஜு

Published on 20/02/2024 | Edited on 20/02/2024
Trisha's Condemnation; AV released the video within an hour. Raju

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகியான ஏ.வி. ராஜு அண்மையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘கூவத்தூர் விவகாரத்தில் நடிகை த்ரிஷாவை தொடர்புப்படுத்திப் பேசியிருந்தார். மேலும் தன்னை அதிமுகவிலிருந்து நீக்க எடப்பாடி பழனிசாமிக்கு எந்த அதிகாரமும் இல்லை. அதிமுகவின் சட்ட விதிகளைத் தெரியாமல் எடப்பாடி பழனிசாமி உள்ளார்’ எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்திருந்தார்.

இந்நிலையில், கூவத்தூர் விவகாரத்தில் தன்னை தொடர்புப்படுத்தி இழிவாகப் பேசிய அதிமுக முன்னாள் நிர்வாகி ஏ.வி. ராஜுவிற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள நடிகை த்ரிஷா, இது தொடர்பாக டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'கவனம் ஈர்ப்பதற்காக எந்த அளவுக்கும் தரம் தாழ்ந்து பேசுபவர்களை பார்ப்பதற்கே அறுவறுப்பாக உள்ளது. அவதூறு பேச்சுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். தமது வழக்கறிஞர்கள் தேவையான நடவடிக்கை எடுப்பார்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே அதிமுக நிர்வாகி ஏ.வி. ராஜுவின் பேச்சுக்கு பல்வேறு சினிமா பிரபலங்களும் கண்டங்கள் தெரிவித்து வந்த நிலையில், த்ரிஷா இதை உறுதிப்படுத்தி உள்ளார்.

mm

இந்நிலையில் ஏ.வி.ராஜு இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ''என்னைப் பற்றி சமூக வலைத்தளங்களில், சில ஊடகங்களில் திரைப்படத் துறையினரை அவதூறாக நான் பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நான் பேசியது அரசியல் ரீதியாக மட்டும் தான் பேசினேன். அந்த இடத்தில் பேட்டியை முடித்த பின்பு ஒரு சிலர் கேட்ட கருத்துக்கு நான் அந்த விளக்கத்தை சொன்னேன். எந்த இடத்திலும் திரைத்துறையினரை வருத்தப்படும் அளவிற்கு பேசக் கூடியவர் நான் அல்ல.

ஒருவேளை அப்படி பேசியதாக தகவல்கள் உங்களுக்கு தவறாக கிடைத்திருந்தால், நான் உங்கள் அனைவருக்கும், பெப்சிக்கும், திரைப்பட நடிகர் சங்கத்திற்கும் மற்றும் சம்பந்தப்பட்ட திரிஷாவுக்கும் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஒருவேளை மனம் புண்படும்படி இருந்திருந்தால் என் சார்பாக வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்'' எனத் தெரிவித்துள்ளார்.