rajini and kamal meets in same studio in chennai

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தனது 170வது படத்திற்கு த.செ. ஞானவேலுடன் கூட்டணி வைத்துள்ளார் ரஜினி. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இப்படம் 2024 ஆம் ஆண்டுக்குள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, ஃபகத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இதனால் படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. படத்தின் படப்பிடிப்பு கேரளாவின் திருவனந்தபுரத்தில் தொடங்கி திருநெல்வேலி, கன்னியாகுமரி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இது தொடர்பான வீடியோக்கள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.

Advertisment

இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்டு நடித்து வருகிறார் ரஜினி. அதே இடத்தில் கமல்ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பும் நடந்து வருகிறது. இந்த நிலையில் ரஜினியும் கமலும் சந்தித்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை லைகா நிறுவனம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் இதே ஸ்டூடியோவில் 21 ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியன் 2 படத்தையும் லைகா தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் மறைந்த நடிகர்கள் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு ஆகியோர் நடித்துள்ளனர்.

Advertisment

முன்னதாக இப்படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டிருந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி சென்னை, திருப்பதி, தென்னாப்பிரிக்கா மற்றும் தைவான் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. இன்னும் படப்பிடிப்பு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதனிடையே இந்தியன் 2 படம், இன்னொரு பாகமாக இந்தியன் 3 என வெளியாகவுள்ளது. அதற்கான படப்பிடிப்புதான் தற்போது நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.