/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/477_15.jpg)
பா.ஜ.க. எம்.பி. மற்றும் நடிகையுமான கங்கனா ரனாவத், இயக்கி நடித்துள்ள இந்தி படம் ‘எமர்ஜென்சி’. இப்படம் இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, ஆட்சியில் இருக்கும்போது அறிவித்த அவசரநிலை பிரகடனத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திரா காந்தியாக கங்கனா ரனாவத் நடித்துள்ளார். இவருடன் அனுபம் கெர், சதீஷ் கௌசிக், பூமிகா சாவ்லா, ஷ்ரேயாஸ் தல்படே உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்பு மாற்றப்பட்டது.
முன்னதாக இப்படத்தின் ட்ரைலர் வெளியான சமயத்தில் சீக்கியர்கள் உணர்வுக்கு எதிராக இப்படம் இருப்பதாக கூறி எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால் சென்சார் சான்றிதழ் வாங்குவதில் பிரச்சனை நீடித்தது. அது கோர்ட் வரை சென்று பின்பு முடிவுக்கு வந்தது. இந்த நிலையில் இப்படம் கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை பஞ்சாபில் தடை செய்ய வேண்டும் என எஸ்.ஜி.பி.சி. (சிரோமணி குருத்வாரா பிரபந்தக் குழு) தலைவர் ஹரிந்தர் சிங் தாமி பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு நேற்று கடிதம் எழுதியிருந்தார். அதனால் பஞ்சாபில் இப்படம் பல நகரங்களில் வெளியாகாமல் இருந்தது. இதற்கு கங்கனா ரனாவத், “எனது படத்தை களங்கப்படுத்த பொய்யான பிரச்சாரத்தை பரப்புவதாக எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இப்படத்திற்கு இங்கிலாந்திலும் எதிர்ப்பு கிளம்பியது. காலிஸ்தான் பிரிவினை அமைப்புகள் இப்படம் சீக்கியர்களுக்கு எதிரானதாக இருப்பதாக கூறி போராட்டம் நடத்தினர். அவர்களைப் போல் சீக்கிய பத்திரிக்கையாளர் சங்கம் உட்பட பல சீக்கிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு படம் வெளியாவதில் சிக்கல் இருந்தது.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்படம் இங்கிலாந்தில் உள்ள திரையரங்குகளில் திரையிடப்பட்டுக்கொண்டிருந்த போது திரையரங்கிற்குள் முகமூடியுடன் வந்த காலிஸ்தான் பிரிவினை வாத அமைப்பினர் படத்தை நிறுத்த சொல்லி மிரட்டியுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், “எமெர்ஜென்சி படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தடுக்கப்பட்டதை குறித்து பார்த்தோம். எமர்ஜென்சி திரைப்படத்துக்கு இங்கிலாந்தில் எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அந்நாட்டு அதிகாரிகளிடம் கவலை தெரிவித்துள்ளோம். பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்துக்கு எதிராக போராட்டம் நடத்தும் இந்தியாவுக்கு எதிரான சக்திகள் மீது இங்கிலாந்து அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்” எனக் கூறியுள்ளது.
இதனிடையே பிரிட்டிஷ் எம்.பி. பாப் பிளாக்மேன், இப்பத்திற்கு ஆதராவக பேசி அவரது எக்ஸ் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோவில், அவர் பேசியதாவது, “இப்போது, ​​இது மிகவும் சர்ச்சைக்குரிய படம். படத்தின் உள்ளடக்கம் அல்லது தரம் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் மற்றவர்கள் படத்தைப் பார்க்கும் உரிமையை நான் பாதுகாக்கிறேன்” என்றார். இந்த வீடியோவை கங்கனா தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து, “பிரிட்டிஷ் எம்.பி. எனது அடிப்படை பேச்சுரிமைக்காகக் குரல் கொடுக்கிறார், அதே நேரத்தில் இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பெண்ணியவாதிகள் அமைதியாக இருக்கின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)