Skip to main content

விஜய்யின் இரவு பாடசாலை திட்டம் - வரவேற்ற பிரபலம்

Published on 13/07/2023 | Edited on 13/07/2023

 

producer suresh kamatchi about vijay scheme

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். மேலும் அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். கடந்த 17 ஆம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளை நேரில் சந்தித்து ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.

 

அந்த நிகழ்ச்சியில் விஜய்யின் பேச்சு அரசியல் களத்திலும் சமூக வலைத்தளங்களிலும் பேசுபொருளாக இருந்தது. மேலும் அரசியல் கட்சி தொடங்கவுள்ளதாகவும் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து அண்மையில் தனது 68வது படத்தை முடித்தவுடன் சினிமாவில் இருந்து 3 வருடம் விலகி, வருகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைக் குறி வைத்துச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. 

 

இதையடுத்து கடந்த இரண்டு நாளாக பனையூரில் தனது மக்கள் மன்றம் சார்பாக இருக்கும் 234 தொகுதி பொறுப்பாளர்கள் மற்றும் 10க்கும் மேற்பட்ட மாவட்ட பொறுப்பாளர்களைச் சந்தித்து ஆலோனை நடத்தினார். இன்றும் அது நடப்பதாகக் கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், காமராஜர் பிறந்தநாளான வருகிற ஜூலை 15 ஆம் தேதி 234 தொகுதிகளிலும் ஏழை, எளிய கிராமப்புற பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில், இரவு பாடசாலை திட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. 

 

இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, விஜய்யின் செயல்பாடுகள் குறித்து தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "எத்தனையோ குழந்தைகள் இன்னமும் இரவு நேரம் படிக்க வசதி இல்லாமல் தவிக்கிறார்கள். மதிப்பெண்களால் வெற்றிபெற்று நாளிதழ்களில் மின்னொளியில் படித்தேன்... மண்ணெண்ணெய் விளக்கில் படித்தேன் என மாணாக்கர்கள் சொல்லும்போதுதான் அவர்களின் வறுமை புரிய வருகிறது. அப்படியிருக்க,  தமிழ் சினிமாவில் கோலோச்சும் நாயகன்  விஜய், இரவுப் பாடசாலை திட்டத்தை செயல்படுத்த முன்வந்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. தான் நிஜ கதாநாயகன் என தன் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பது கல்விச் செல்வம் தழைக்க மிக மிக அவசியமானது. தொடர்க. வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்