‘மேயாத மான்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அந்த படத்திற்கு பிறகு கவனம் பெற்ற அவர் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடிய அளவில்தான் வெற்றிப்படங்கள் உள்ளன. அந்த வரிசையில் 2018ஆம் ஆண்டு வெளியான கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் மற்றும் 2022ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ஆகிய திரைப்படங்கள்தான் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
மேற்கண்ட படங்களைத் தவிர்த்து பிரியா பாவானி சங்கர் நடித்த ‘மான்ஸ்டர்’, ‘பத்து தல’, ‘ருத்ரன்’, ‘ரத்னம்’, உள்ளிட்ட பல திரைப்படங்கள் கலவையான விமர்சனங்கள் பெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் ஷங்கர்- கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான ‘இந்தியன் 2’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் பிரியா பவானி சங்கரை மட்டும் குறிப்பிட்டு, அவர் நடித்த எந்த திரைப்படங்களும் சரியாக ஓடுவதில்லை என்று மீம்ஸ் மூலமாக சமூகவலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தது.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ள ‘டிமான்ட்டி காலனி 2’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இது தொடர்பாக அருள்நிதி, பிரியா பவானி சங்கர் , அருண் பாண்டியன் உள்ளிட்ட படக்குழுவினர் பத்திரிக்கையாளரை சந்தித்தனர். அப்போது பிரியா பவானி சங்கரிடம் அவருக்கு எதிராக வரும் விமர்சனங்களை குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், “எல்லோரும் மனுஷங்கதான். உங்களை கஷ்டப்படுத்துகிற மாதிரி பேசினால் உங்களுக்கு எப்படி கஷ்டமாக இருக்குமோ அதுபோலத் தான் நடிகர்களுக்கும் கஷ்டமாக இருக்கும். இந்தியன் 2 திரைப்படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் சொன்ன விமர்சனங்களைப் பற்றியும் கருத்தை பற்றியும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஏனென்றால் அது நெகட்டிவ்வாக இருந்தாலும் பாசிட்டிவ்வாக இருந்தாலும் அது விமர்சனம். அதை ஏற்றுக்கொண்டால்தான் வளர முடியும். ஆனால் டிஜிட்டல் மீடியாவில் முகமே தெரியாதவர்கள் தனிப்பட்ட முறையில் அட்டாக் செய்வது கஷ்டமாகவுள்ளது” என வேதனையுடன் பேசினார்.