Skip to main content

"அவர் சிரிப்பது இதயத்தில் இருந்து சிரிப்பதுபோல இருக்கும்" - கண்கலங்கிய பிரியா ஆனந்த்

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

Priya Anand Emotional Interview on James

 

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார், பிரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜேம்ஸ் திரைப்படம், புனித் ராஜ்குமாரின் பிறந்த தினமான மார்ச் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில், நடிகை பிரியா ஆனந்த், புனித் ராஜ்குமார் குறித்தும் ஜேம்ஸ் திரைப்படம் குறித்தும் பேட்டியளித்துள்ளார்.  

 

"அனைவரும் பார்க்க விரும்பும் படமாக ஜேம்ஸ் இருக்கும். தியேட்டரில் விசில் அடித்து, டான்ஸ் ஆடி கொண்டாட்டமாக பார்ப்பதற்கான விஷயங்கள் படத்தில் உள்ளன. குறிப்பாக, ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.   

 

புனித் ராஜ்குமார் இன்று இல்லாதது மிகப்பெரிய இழப்பு. அவர்தான் உண்மையான ஹீரோ. திரையில் நாம் வியந்து பார்த்த நடிகர்களை நேரில் பார்க்கும்போது அவர்கள் நடந்துகொள்ளும் விதம் முற்றிலும் வேறாக இருக்கும். ஆனால், புனித் ராஜ்குமார் எப்போதுமே ஒரே மாதிரியாக இருப்பார். அவர் இறந்த பிறகுதான் அவர் செய்துகொண்டிருந்த பல நல்ல விஷயங்கள் தெரியவந்தன. அவருடன் இணைந்து இரண்டு படம் நடித்ததை பெரிய வரமாக பார்க்கிறேன். கர்நாடக மாநிலம், அந்த மக்கள், அந்த மாநில கலாச்சாரம் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார் புனித் ராஜ்குமார். நான் கற்றுக்கொண்ட முதல் கன்னட வார்த்தை, அவர் சொல்லிக் கொடுத்ததுதான்.    

 

பெரிய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சாதாரண மக்களின் கஷ்டங்களை நன்கு புரிந்து வைத்திருந்தார். கஷ்டப்பட்டு முன்னேறியவர்கள்கூட ஒரு கட்டத்தில் கடந்துவந்த பாதையை மறந்துவிடுவார்கள். ஆனால், அவர் அப்படி இல்லை. நேரில் பார்த்தாலும் சரி, டீவியில் பார்த்தாலும் சரி, அவர் சிரிப்பதை பார்த்தால் நம்மால் பதிலுக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. அவர் சிரிப்பு இதயத்தில் இருந்து சிரிப்பதுபோல இருக்கும். திரைத்துறையில் நிறைய சாதனைகள் படைத்துள்ளார். அது மாதிரியான சாதனைகள் படைப்பதற்கு இன்னும் சில தலைமுறைகள் வரவேண்டும். 

 

ராஜகுமாரா படப்பிடிப்பிற்காக ஆஸ்திரேலியாவில் இருந்தபோதுதான் அவரை முதல்முறையாக சந்தித்தேன். என்னிடம் கைகுலுக்கிவிட்டு நான் புனித் ராஜ்குமார் என்று எளிமையாக அவரை அறிமுகப்படுத்தினார். எல்லோருடனுமே அப்படித்தான் பழகுவார். அவர் தற்போது வேறொரு நாட்டில் இருப்பதாகத்தான் நான் நினைக்கிறேன்". இவ்வாறு நடிகை பிரியா ஆனந்த் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புனித் ராஜ்குமார் பெயரில் கோரிக்கை - நிறைவேற்றிய அரசாங்கம்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

as per request by people Karnataka CM named a road Puneeth Rajkumar

 

கன்னட சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். கன்னட திரையுலகம் மட்டுமல்லாது இந்திய திரையுலகமே அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியது. திரைத்துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் ஏழைகளுக்கு அவர் செய்த பங்களிப்பையும் போற்றும் விதமாக கர்நாடக அரசாங்கம்  கர்நாடக ரத்னா விருது வழங்கியது.

 

இதனிடையே புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிறகு சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று நகர மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை சூட்டியுள்ளது.

 

இந்த நிகழ்வில் சிவராஜ்குமார், ராகவேந்திரா ராஜ்குமார் மற்றும் அஸ்வினி புனித் ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கு அஸ்வினி புனித் ராஜ்குமார் சமூக ஊடகங்கள் வாயிலாக கர்நாடக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார். புனித் ராஜ்குமாரை பல்வேறு வழிகளில் வாழ வைத்ததற்காக மாநில அரசு, கர்நாடகா ஃபிலிம் சேம்பர், திரையுலகினர் மற்றும் அவரது ரசிகர்கள் அனைவருக்கும் கடன்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார்.

 

 

Next Story

"இந்த காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது" - பிரியா ஆனந்த்

Published on 08/02/2023 | Edited on 08/02/2023

 

Priya Anand about Turkey, Syria earthquake

 

துருக்கியில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை இந்திய நேரப்படி 4.17 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவு, 3வது முறையாக 6.0 ரிக்டர் அளவு, 4வது முறையாக 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 

 

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் 5,000 பேர் இறந்துள்ளதாக தகவல் வெளியானது. மேலும், 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 

 

இந்த நிலநடுக்கம் தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உலக மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. விரைவில் இந்த நிலைமை சரியாகவும் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் பலரும் பிரார்த்தனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தமிழ் திரைப்பிரபலங்களும் பிரார்த்தனை செய்து வரும் நிலையில், நடிகை ப்ரியா ஆனந்த், "துருக்கி மற்றும் சிரியாவில் இருந்து வெளியாகியுள்ள காட்சிகள் நெஞ்சை பதைபதைக்க வைக்கிறது. அனைவருக்காகவும் பிரார்த்திக்கிறேன்" என ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 

 

நடிகை மிருனாள் தாக்கூர், "இது மிகவும் மனவேதனை அளிக்கிறது. கடவுளே, தயவு செய்து கருணை காட்டுங்கள்" எனக் குறிப்பிட்டிருந்தார். நடிகை ஆத்மிகாவும் சிரியா மற்றும் துருக்கி மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாகப் பதிவிட்டிருந்தார். 

 

பாடலாசிரியர் வைரமுத்து, "துருக்கியின் கீழே பூமி புரண்டு படுத்துவிட்டது. ரிக்டர் கருவிகள் வெடித்துவிட்டன. வான்தொட்ட கட்டடங்கள் தரைதட்டிவிட்டன. மனித உடல்கள் மீது வீடுகள் குடியேறிவிட்டன. மாண்டவன் மானுடன்; உயிர் பிழைத்தவன் உறவினன். உலக நாடுகள் ஓடி வரட்டும். கண்ணீர் சிவப்பாய் வடியும் நேரம்" எனப் பதிவிட்டுள்ளார். மேலும் பல பிரபலங்களும் தங்களது பிரார்த்தனைகளை அவர்களின் சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர்.