எஸ். ஜெ. சினு இயக்கத்தில் பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'பேட்ட ராப்'. ப்ளூ ஹில் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் வேதிகா, மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, ரியாஸ் கான், ராஜீவ் பிள்ளை, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் இப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்படம் வருகிற 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் பிரபு தேவா, சன்னி லியோன், வேதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்ட நிலையில் இயக்குநர் பேரரசு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் பிரபு தேவா பேசுகையில் பேரரசு படங்களை சல்மான் கான் பாராட்டியுள்ளதாக தெரிவித்தார். அவர் பேசியதாவது, “நான் பதினோராம் வகுப்பில் தோல்வி அடைந்தவன். அதனால் அதிகம் படித்தவர்களை கண்டால் எனக்குள் பயம். இதனால் பாடலாசிரியர்களை கண்டால் எனக்குள் ஒரு பிரமிப்பு இருக்கும். இருந்தாலும் பாடலாசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி, பாடல்களில் ஏதாவது திருத்தம் மேற்கொள்வதுண்டு. அவை அனைத்தும் படத்திற்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் தான் அவர்களும் அதனை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு திருத்தி தருவார்கள். நான் எப்போதும் எம்ஜிஆர் பார்முலாவை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன்.
பாலிவுட் நடிகர் சல்மான்கான் 'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை பார்த்துவிட்டு அதனை இயக்கிய இயக்குநர் பேரரசுவை பற்றி என்னிடம் பலமுறை வியந்து பாராட்டியிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை இந்தியில் ரீமேக் செய்யலாமா..? என என்னிடம் கேட்டுக் கொண்டே இருப்பார். அதனால் 'பேட்ட ராப் ' படத்திற்கு வாழ்த்த வருகை தந்த இயக்குநர் பேரரசுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நடிகை வேதிகா கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்கு தயார்படுத்திக் கொண்டு வருவார். திறமையான நடிகை. இல்லையென்றால் இயக்குநர் பாலா படத்தின் வாய்ப்பு கிடைத்திருக்குமா..! அவருடைய கடும் உழைப்பை இந்தப் படத்தில் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சன்னி லியோன் நடிகை என்பது கடந்து அனைவரையும் நேசிப்பவர். மதிப்பவர். அவர் தன்னுடைய அறக்கட்டளைகள் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார். செப்டம்பர் 27ஆம் தேதியன்று 'பேட்ட ராப்' வெளியாகிறது. இதற்காக முதலில் இயக்குநர் ஷங்கருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் இந்த வார்த்தையை எழுதியவர் அவர்தான். அதனுடன் இந்தப் பாடலுக்கு இசையமைத்த ஏ ஆர் ரஹ்மானுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.