'அவுட்டு'... பொல்லாதவன் படம் பார்த்த அனைவரது நினைவில் இருந்தும் நீங்காத பெயர். படத்தில் தனுஷுக்கு அடுத்து கிஷோரும் அவருக்கு அடுத்து பவனும்தான் நடிப்பில் முன் நின்றனர்.
ஒரு தாதாவின் அடியாள் என்றாலும் கெத்தான, விசுவாசமான அடியாளாக ரசிகர்களைக் கவர்ந்தவர் 'அவுட்டு' என்கிற பவன். பத்து வருடங்களாகியும் இன்னும் மறக்காமல் இருக்கிறது. இப்பொழுது மீண்டும் அதே கூட்டணியில் 'வடசென்னை' வெளிவரவிருக்கிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பு வரிசையில் பவனும் இருக்கிறார். நக்கீரன் ஸ்டுடியோ யூ-ட்யூப் சானலுக்கு அவர் அளித்த பேட்டியில் அஜித், விஜய் இருவருடன் பணியாற்றிய அனுபவத்தைப் பகிர்ந்தார்.
"ராசி படம் நடிக்கும்போதே எனக்கும் அஜித்துக்கும் நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. அதன்பின் சிறிது காலம் கழித்து 'ஜி' படத்தில் நடிக்கும்போது, லிங்குசாமி சார் அஜித்திடம் 'படத்தின் வில்லனை பார்க்கிறீர்களா' என்று கேட்டிருக்கிறார். அஜித் 'சரி' என்றதும் பவன் எங்கே என்று என்னைத் தேடினார்கள். பிறகு நான் அஜித் முன்னால் நின்றேன். என்னை பார்த்ததும் 'நாங்க ரெண்டு பேரும் ஏற்கனவே ஒன்னா நடிச்சு இருக்கோமே, நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்களாச்சே' என்று சொன்னார். எனக்கோ எப்பொழுதோ நடித்தோம் இன்றுவரை நினைவில் வைத்திருக்கிறாரே என்று ஆச்சரியமாக இருந்தது. அந்த ஆச்சரியம் குறைவதற்குள் 'உங்கள் பெயர் வேறல்ல?' என்றார். 'ஆமா.. என் பெயர் சுரேஷ். சினிமாவுக்காக பவன் என்று மாற்றியிருக்கிறேன்' என்றேன். அஜித்தும் நானும் நிறைய பேசியிருக்கிறோம். நல்ல மனிதர் அவர்.
'குருவி' படத்தில் விஜய் சார் கூட நடித்தேன். அவர் 'பொல்லாதவன்' படம் பார்த்துட்டு வந்திருந்தார். 'செமயா பண்ணிருக்கீங்க, ஆக்டிங் கிளாஸ் ஏதும் போறிங்களா' என்றார். 'அதுலாம் எதுவும் இல்லை சார், சும்மா அப்படியே நடித்ததுதான்' என்றேன். 'இல்லன்னா செமயா பண்ணிருக்கீங்கன்னா' என்று சொல்லி புகழ்ந்து தள்ளினார். அதற்கும் ஒரு மனம் வேணும்ல?"