Skip to main content

"சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான்" - பேரரசு விளக்கம்

Published on 21/09/2023 | Edited on 21/09/2023

 

perarasu speech in aima movie event

 

அறிமுக இயக்குநர் ராகுல் ஆர். கிருஷ்ணா இயக்கத்தில், யூனஸ், எல்வின் ஜூலியட், அகில் பிரபாகரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஐமா'. சண்முகம் ராமசாமி தயாரித்துள்ள இப்படத்திற்கு இசை கே.ஆர். ராகுல். பாடல்கள் அருண் மணியன். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில், சிறப்பு விருந்தினர்களாகத் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் சங்கத் தலைவர் கே. ராஜன், இயக்குநர் பேரரசு, இயக்குநர் கேபிள் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

அப்போது தயாரிப்பாளரும் விநியோகஸ்தர் சங்கத் தலைவருமான கே.ராஜன் பேசுகையில், "சிறு முதலீட்டுப் படங்கள் தான் திரையுலகை என்றும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றன. அதன் மூலம் தான் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளை எடுத்துக் கொண்டால் தோராயமாக 320 படங்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் 100 முதல் 150 படங்களுக்கு ஆடியோ வெளியீட்டு விழாக்கள் நடந்துள்ளன. ஆனால் சுமார் 70 படங்கள் தான் சிரமப்பட்டு வெளி வந்திருக்கின்றன. வெளியான பல படங்களின் தயாரிப்பாளர்கள் காணாமல் போய்விட்டார்கள். மீதமுள்ள 250லிருந்து 300 படங்கள் வெளிவராமல் சிரமப்பட்டுக் கொண்டுள்ளன. இந்த வகையில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் இந்தப் படங்களில் முடங்கி உள்ளது.

 

நான் நிதி உதவி செய்த ஒரு படத்திற்கு 12 கோடி செலவானது. ஆனால் அதன் வெளி மொழி உரிமை போன்றவை ஆறு கோடிக்கு விற்பனையானது. இருந்தாலும் கூட அந்தப் படத்தை வெளியிட முடியவில்லை. இதுதான் இன்றைய நிலைமை. சிறு முதலீட்டுப் படங்கள் சிரமம் இன்றி  வெளிவர வேண்டும். அப்படி வெளிவந்தால் அந்த தயாரிப்பாளர் மீண்டும் படம் தான் எடுப்பார். ஆனால் பெரிய படங்களின் மூலம் வரும் லாபம் மீண்டும் சினிமாக்கு வருமா என்றால், தெரியாது. இன்று 'ஜெயிலர்' படம் வெற்றிகரமாக ஓடியுள்ளது. ரஜினிகாந்த் பெரிய நட்சத்திர நடிகர்தான் சந்தேகம் இல்லை. இருந்தாலும் அவருக்குக் கூட மலையாளத்திலிருந்து மோகன்லாலும் கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமாரும் வந்து நடிக்க வேண்டி உள்ளது. இப்படி இன்று சினிமா மாறி உள்ளது. இப்போதெல்லாம் வெளி மாநிலங்களில் இருந்து வந்து தமிழ்நாட்டில் படம் எடுக்கிறார்கள். அவர்களை நான் வரவேற்கிறேன். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்" என்றார்.

 

இயக்குநர் பேரரசு பேசுகையில், ''இந்த ஐமா படத்தில் பத்து பாடல்கள் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அதற்கு ஒரு தைரியம் வேண்டும். அதைப் படத்தில் சரிவர வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். இந்தப் படத்தில் கதாநாயகன் பேசும்போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் நிஜமாகவே நடித்தேன் என்றார். சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான். உண்மை போல நம்ப வைக்க வேண்டும் அவ்வளவுதான். கத்தியால் குத்தும் காட்சி என்றால் நிஜமாகவே குத்தி விட முடியுமா? அப்படி எல்லாம் அபாயகரமான காட்சிகளில்  நடிக்கக் கூடாது. அப்படி டூப் இல்லாமல் அபாயகரமான காட்சியில் நடித்துவிட்டு என்னுயிர்த் தோழன் பாபு தன் 30 ஆண்டுகள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இப்போது இறந்துவிட்டார். இதை நாம் கவனிக்க வேண்டும். எப்படி வேண்டுமானாலும் இப்போதுள்ள  தொழில்நுட்ப வசதிகளில் எடுக்க முடியும். எவ்வளவோ படங்களில் எதார்த்தம் மீறி காட்சிகள் வருகின்றன. சினிமாவே ஒரு ஏமாற்று வேலைதான். தெருவில் கழைக் கூத்தாடி செய்யும் ரிஸ்கைக் கூட சினிமாவில் பெரிய கதாநாயகர்கள் கூட செய்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை. ஏனென்றால் அந்த அளவிற்கு வசதிகள் வந்துவிட்டன. மெதுவாக நடந்து வருவதைக் கூட ஓடி வருவது போல் எடுக்க முடியும்.

 

தமிழ்த் திரைப்படங்கள் பெரிய பெரிய கதாநாயகன் நடிக்கும் படங்கள் கூட செட் போட்டு வெளி மாநிலங்களில் படமாக்கப்பட்டு வருகின்றன. அந்தந்த மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள். நம் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களுக்கு அதில் பங்கேற்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. எங்கள் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனியுங்கள் என்று நாங்கள் சொல்கிறோம். இது பற்றி இயக்குநர் ஆர்.கே. செல்வமணி தனது ஆதங்கத்தை வெளியிட்டபோது அதைத் திரித்து திசை திருப்பி விட்டார்கள். இதைத் தவறாகச் சிலர் புரிந்து கொள்கிறார்கள். இந்தப் படம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்