/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/nationalherald_2019-11_9ad2390d-2758-4671-8e15-c312461932f3_r_parthiban.jpg)
கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துகொண்டே வருகிறது. இந்தியாவில் பல பிரபலங்களும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கூட இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து திடீரென அவர் கவலைக்கிடமாக உள்ளதாகவும், அவர் இறந்துவிட்டதாகவும் செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எஸ்.பி.பி உடல்நிலை குறித்த தகவல் வெளியானவுடன் பல்வேறு பிரபலங்கள் அவர் பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக சமூகவலைதளங்களில் பதிவிட்டு வந்தார்கள். இதையடுத்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் ''அவர் உடல்நிலை சீராக உள்ளது. வதந்திகளை நம்ப வேண்டாம்" என விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து அவர் தினமும் எஸ்.பி.பியின் உடல் நிலம் குறித்து வீடியோ பதிவுகள் மூலம் தெரிவித்து வரும் நிலையில் நடிகர் பார்திபன் எஸ்.பி.பி உடல்நலம் குறித்து ஆடியோ பதிவிட்டுள்ளார். அதில்...
"எஸ்.பி.பி. ரசிகர்கள் என்று சொன்னால், மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டவர்கள் அவருடைய இனிமையான குரலால் பாதிக்கப்பட்டவர்களே. இந்த இரு தினங்களும் நமக்கு இருண்ட தினங்களாகவே இருக்கின்றன. மூச்சுவிடாமல் பாடக் கூடியவர், மூச்சு கூட விட முடியாமல் படுக்கையில் பிராணவாயு உடன் இருக்கிறார். நமக்கு எல்லாம் இன்னொரு பிராணவாயுவாக இருப்பது அவருடைய பாடல்கள். காதலால் இரவு தூக்கம் இழந்தவர்கள் லட்சம் பேர் எனில், எஸ்.பி.பியின் பாடல்களால் இரவு தூக்கம் கலைந்தவர்களும், மனதின் துக்கம் கலைந்தவர்களும் கோடான கோடி பேர். செய்திகளை முந்தி தருவதிலே ஊடகங்களுக்கு இடையே ஒரு மிகப்பெரிய போட்டி இருக்கிறது. அது ஒரு சில நேரத்தில் விபரீதமாகவும் முடிந்துவிடுகிறது. அப்படி வந்த ஒரு செய்தி மனதை பிணமாக்கிவிட்டது. ஊடக நண்பர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள். நீங்கள் வெளியிடும் செய்தி நல்லதாக இருந்தால், நான்கு பேரைக் கூட கலந்தோலசிக்காமல் வெளியிடுங்கள்.
அது ஒரு ஊக்க மருந்தாகவே இருக்கும். அதுவே ஒரு துக்க செய்தியாக இருந்தால் தயவு செய்து இருமுறை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு வெளியிடுங்கள் என்பது என் வேண்டுகோள். வா பாலு, எழுந்துருச்சு வா என்று ஒரு இசை அழைக்கிறது. இசைப்புயலோ கூட்டுப் பிரார்த்தனைக்கு அன்பாக அழைக்கிறது. இசையறியாமல், பாட்டையறியாமல் வெறும் ரசிகர்களாகிய நாம், எஸ்.பி.பி. என்பவர் பாடகர் மட்டுமல்ல அன்பானவர், பண்பானவர், யாருடைய மனதை நோகடிக்காத ஒரு மகன். அவர் மீண்டு நம் இதய மேடைகளில் உலா வர இரு கரங்களை அல்ல, நம் இதயங்களைக் கூப்பி பிரார்த்தனை செய்வோமாக. எஸ்.பி.சரணிடம் பேசும் போது, உலகத்தில் உள்ள சிறந்த மருத்துவர்களை வைத்துக்கொண்டு என்னென்ன மருத்துவம் கொடுக்க முடியுமோ அப்பாவுக்கு கொடுத்து கொண்டிருக்கிறார்கள், நம்பிக்கையுடன் இருக்கிறேன். மருத்துவர்களும் நம்பிக்கை கொடுத்தார்கள். அப்பாவின் உடலும் மருத்துவத்துக்குத் தேறி வருகிறது" என கூறியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)