விக்ரம் நடிப்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியுள்ள தங்கலான் திரைப்படம் நாளை (15.08.2024) வெளியாகவுள்ள நிலையில், படக்குழு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். இதில் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் இப்படத்தில் நடித்த பார்வதி, மாளவிகா மோகனன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது ரஞ்சித் பேசுகையில், “விக்ரம் என்னை நம்பினார். அவருடன் இணைந்து பணியாற்றியதைப் பெருமையாக நினைக்கிறேன். அவரை போல் ஒரு நடிகர் கிடைத்தால், எழுதுவதைச் சிறப்பான முறையில் எடுத்துவிட முடியும். நேற்று கூட படத்தின் இறுதி நகலைப் பார்க்கும்போது, நடித்த அனைவரும் நிறைய உழைப்புடன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரையும் இப்படத்தில் நடிக்க அழைத்ததில் நான் பெருமையடைகிறேன். ஏனென்றால் இவர்கள் இல்லை என்றால் இது போன்ற தரமான படைப்பை எடுத்திருக்க முடியுமா என்று தெரியவில்லை. அவர்கள் அனைவருக்கும் நன்றி.
இந்த படத்திலிருந்து வெளியான முதல் வீடியோவிலிருந்தே ஜி.வி.பிரகாஷின் இசையைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிட்டார்கள். அதன் பிறகு இந்த கதைக்குத் தேவையான இசையைப் புரிந்துகொண்டு அவர் வெளியிட்டுள்ள மூன்று பாடல்களும் இந்த படத்தின் வெற்றியைத் தீர்மானித்துள்ளது. விக்ரம் சின்ன பிள்ளை மாதிரி ஸ்டைலாக வந்து எங்களையும் இழுத்துக் கொண்டு மக்களிடம் படத்தைக் கொண்டு சேர்க்கிறார். நான் வரமாட்டேன் என்று சொன்னாலும் கூட நீங்க வந்துதான் ஆக வேண்டும் எனப் படத்தை புரமோஷன் செய்கிறார். இது எனக்குப் பிரமிப்பாக இருக்கிறது. இதற்கெல்லாம் அவருக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. ஆனால், படத்தை நல்லபடியாக கொடுத்துவிட்டால், அதுதான் அவருக்கு நான் சொல்லும் நன்றியாக இருக்கும். விக்ரமை போன்ற நடிகரையும் ஞானவேல் ராஜா போன்ற தயாரிப்பாளரையும் வைத்து நான் கமர்ஷியல் சினிமா எடுத்திருக்கலாம். ஆனால் கலையையும், அரசியலையும் சொல்ல முயற்சிப்பது என்னுடைய பொறுப்பாகவுள்ளது.
தமிழ் ஆடியன்ஸ் எப்போதும் முற்போக்காக இருப்பார்கள். கமர்ஷியலான படங்களையும், கலை சம்பந்தப்பட்ட படங்களையும் அவர்கள் பிரித்து பார்த்தது கிடையாது. அப்படி அவர்கள் கொண்டாடியதால்தான் நான் இங்கு இருக்கிறேன். நான் பேசுகிற கருத்தில் அவர்களுக்கு முரண் இருக்கலாம். ஆனால், என்னுடைய திரைமொழியில் என்னுடன் அவர்கள் ஒத்துப்போவார்கள். அதுதான் இன்று தங்கலான் வரை என்னை கொண்டு வந்துள்ளது. இந்த படத்தையும் ஆடியன்ஸ் ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன். இப்படத்திற்கு பிறகுதான் நான் ஒரு வரலாற்றுப் பயணி என்று எனக்குத் தெரிந்தது. என்னுடைய படங்களில் என்னை நானே தெரிந்துகொள்வதற்கும், புரிந்துகொள்வதற்குமான படமாக உள்ளது. நான் என்னவாக இருக்கிறேன் என்றும் மக்களிடம் எதைப் பேச விரும்புகிறேன் என்றும் என்னுடைய படங்கள் மூலமாகத் தேடும் ஒரு வரலாற்றுப் பயணியாக இருக்கிறேன் என்பதை தங்கலான் படம் மூலம் தான் தெரிந்துகொண்டேன்” என்றார்.