Skip to main content

“இரு மொழிப் பிரச்சனை; நிச்சயமா இந்த படம் விவாதத்தை உருவாக்கும்” - பா. ரஞ்சித்

Published on 12/03/2024 | Edited on 12/03/2024
pa.ranjith speech in gv prakash rebel movie audio launch

ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ். இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ரெபல். இப்படத்தில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க கருணாஸ், வெங்கடேஷ்.விபி, ஷாலு ரஹீம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷே இசைப் பணிகளையும் கவனித்துள்ளார். இப்படத்தின் டீசர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியான நிலையில், ட்ரைல்ர் நேற்று வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள இப்படம் மார்ச் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இதில் படக்குழுவினரோடு இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் பா. ரஞ்சித் கலந்து கொண்டுள்ளார்.  

அவர் பேசுகையில், “இப்படத்தின் விஷுவல், டிரெய்லர், எடிட்டிங் எல்லாமே மிக நன்றாக இருக்கிறது. முல்லைப் பெரியாறு பகுதியில் இரு மாநிலங்கள் கலக்கும் பகுதியில் அங்குள்ள பிரச்சனையைப் பேசும் பின்னணியில் இந்தக் கதையை செட் செய்துள்ளார்கள். வாழ்த்துகள். ஜிவியை எனக்கு தங்கலான் மூலமாகத்தான் பழக்கம். எல்லோரும் அவரை நல்ல மனிதன் எனச் சொல்வார்கள். ஆனால் நேரில் பழகிய பிறகு தான் தெரிந்தது, மிக மிக நல்ல மனம் கொண்ட மனிதர். அவர் இன்னும் நிறைய ஜெயிக்க வேண்டும். நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். தயாரிப்பாளர் ஞானவேல் பலரது வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருந்துள்ளார். என் வாழ்வில் அவர் முக்கியமானவராக இருந்துள்ளார்.

இந்தப் படத்தில் நிறைய முக்கியமான மனிதர்கள் பங்கேற்றுள்ளார்கள். எல்லோருக்கும் என் வாழ்த்துகள். இன்றைய சினிமாவில் சின்ன படங்களைக் கொண்டு சேர்ப்பது என்பது மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. என்னைப் போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஏதோ ஒரு பலம் இருக்கிறது. அதன் மூலம் தியேட்டருக்கு கொண்டு வந்துவிடுகிறோம். ஆனால் கஷ்டப்படுகிற சின்ன படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்ய உதவுகிறார் சக்தி பிலிம் சக்திவேலன். அவர் தொடர்ந்து நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்போது ஜெ. பேபி படம் வணிக ரீதியாக வெற்றியா என கேட்டால் அதில் சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. படம் பார்த்தவர்களுக்கு எல்லாருக்குமே பிடித்திருந்தது. நிறைய பேர் கொண்டாடுறாங்க. அதை பார்க்கும்போது வணிக ரீதியாக வெற்றியை விட ஒரு படம் முக்கியமானதாக பார்க்கப்படும் போது படத்தில் பணியாற்றியவர்களுக்கு இன்னொரு வாழ்க்கை ஆரம்பிக்கும். இது போலத்தான் அட்டகத்தி எனக்கு ஆரம்பித்தது. 

ஒரு தயாரிப்பாளராக ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், நான் இந்த துறைக்கு வரவில்லை. எனக்கென்று சில வேலைகள் இருந்தது, அதை செய்ய வேண்டுமென்ற நோக்கத்தோடு தான் வந்தேன். அதன் பிறகு தயாரிப்பு பொறுப்பு வந்தவுடன் ரசித்து தான் பணியாற்றுகிறேன். ஒவ்வொரு கதைகளிலும் சரி, கதாபாத்திரங்களிலும் சரி, அனைத்திலும் என்னுடைய தலையீடுகள் இருக்கும். ஆனால் அது இயக்குநருக்கு பாதிப்பு ஏற்படாமல் தேவையான விஷயத்தை ஆதரிக்கிற வகையில் இருக்கும். நிகேஷ் இப்படத்தில் இரு மொழிப் பிரச்சனையைக்  கவனமுடன் பேசியிருப்பார் என நம்புகிறேன். நிச்சயமா இந்த படம் ஒரு விவாதத்தை உருவாக்கும் என நினைக்கிறேன். அந்த விவாதம் சரியான இடத்தை நோக்கி நகர வேண்டும் என நினைக்கிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

மீண்டும் கவர்ந்ததா குறட்டை செண்டிமெண்ட்? - டியர் விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
gv prakash aishwarya rajesh starring dear movie review

குறட்டையால் ஏற்படும் பிரச்சனையை மையமாக வைத்து கடந்த வருடம் வெளியான குட் நைட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதே கதைக்கருவை வைத்துக்கொண்டு குடும்பத்திற்குள் நடக்கும் குழப்பங்களை நேர்த்தியாக எடுத்துச் சொல்லும் திரைப்படமாக வெளியாகி இருக்கும் டியர் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு ஈர்த்தது? 

மலைப்பிரதேசத்தில் வசிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தூக்கத்தில் குறட்டை விடும் வியாதி இருக்கிறது. இதனால் அவருக்கு மாப்பிள்ளை கிடைப்பதில் சிரமம் ஏற்படுகிறது. இதற்கிடையே டிவியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் ஜிவி பிரகாஷ் தன் அம்மா, அண்ணன் வற்புறுத்தலின் பேரில் ஐஸ்வர்யா ராஜேஷை மணம் முடிக்கிறார். சிறிது சத்தம் கேட்டாலும் தூக்கத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் இருக்கும் ஜிவி பிரகாஷுக்கு ஐஸ்வர்யா ராஜேஷின் குறட்டை மிகப்பெரிய இடியாக வாழ்க்கையில் வந்து விழுகிறது. இதனால் இருவருக்குள்ளும் பிளவு ஏற்படுகிறது. இந்தப் பிளவு நாளடைவில் விவாகரத்து வரை சென்று விட இதன் பிறகு இருவரும் விவாகரத்து பெற்றார்களா? அல்லது மீண்டும் இணைந்தார்களா? என்பதே இப்படத்தின் மீதி கதை. 

gv prakash aishwarya rajesh starring dear movie review

நாம் இதற்கு முன் இதே போன்ற ஒரு கதையை பார்த்து இருப்பதால் கதையில் பெரிய சுவாரசியம் இருப்பதாக தோன்ற மனம் மறுக்கிறது. அதேபோல் இதற்கு முன் வெளியான படத்தில் நாயகனுக்கு குறட்டை பிரச்சனை, இந்த படத்தில் நாயகிக்கு குறட்டை பிரச்சனை. மற்றபடி கதைக்கும் திரைக்கதைக்கும் வேற எந்த சம்பந்தமும் இல்லாமல் இந்த படம் வேறு ஒரு டிராக்கில் பயணிக்கிறது. வெறும் ஒரே ஒரு குறட்டையை வைத்துக் கொண்டு 2:30 மணி நேரம் படத்தை சுவாரஸ்யமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன். அந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா என்றால் சற்று சந்தேகமே! ஒரு புதுமண தம்பதிக்கு திருமணம் நடந்த பிறகு அவர்கள் வெறும் தூக்கத்திற்கு மட்டும் ஏன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்? அதேபோல் ஒரு குறட்டை என்று வரும் பட்சத்தில் அதிலிருந்து விடுபடும் நோக்கில் காதில் பஞ்சு வைத்துக் கொள்ளலாமே? போன்ற கேள்விகள் படம் பார்ப்பவர்கள் மனதில் எழ செய்வதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல் படம் ஆரம்பித்து ஒரு நகைச்சுவை படமாகவும் இல்லாமல், ஒரு சீரியசான படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே பயணிப்பது சற்றே அயற்சியை கொடுத்து இருக்கிறது. அதே போல் எந்த ஒரு இடத்திலும் பெரிதாக திருப்பங்கள் இல்லாமல் படம் பிளாட்டாக செல்வது சுவாரசியத்தை குறைத்து இருக்கிறது.

ஜீவிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் கெமிஸ்ட்ரியும் பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. படத்தின் டைட்டிலுக்கு கொடுத்த கிரியேட்டிவிட்டியின் முக்கியத்துவத்தை இயக்குநர் ரவிச்சந்திரன் திரைக்கதைக்கும் கொடுத்திருந்தால் இந்தப் படம் நன்றாக பேசப்பட்டிருக்கும். வழக்கமான நாயகனாக வந்து செல்கிறார் நாயகன் ஜி.வி பிரகாஷ். அவருடைய தோற்றத்திலும் நடிப்பிலும் எந்த ஒரு மாற்றமும் இன்றி முந்தைய படங்களில் என்ன செய்தாரோ அதையே இந்த படத்திலும் செய்திருக்கிறார். நடிக்க நன்றாக ஸ்கோப் இருந்தும் அதை சரியாக பயன்படுத்த தவறியிருக்கிறார் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். இயக்குநர் இவரை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். ஒரு நல்ல நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஏன் இந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்கிறார் என்ற குழப்பம் ரசிகர்களிடையே நிலவுகிறது. அதேபோல் தனது தோற்றத்திலும் சற்றே முதிர்ச்சியுடன் காணப்படுகிறார். ஜிவி பிரகாஷை விட இவருக்கு வயது அதிகம் போல் தெரிகிறது. இதனாலேயே இருவருக்குமான கெமிஸ்ட்ரி சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை.

gv prakash aishwarya rajesh starring dear movie review

படத்தின் ஒரே ஒரு ஆறுதல் காளி வெங்கட்டின் நடிப்பு. தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்து கைதட்டல் பெற்று இருக்கிறார். ஜீவியின் அம்மாவாக வரும் ரோகிணி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் மற்ற முன்னணி நடிகர்கள் அனைவருமே அவரவர் வேலையை நிறைவாக செய்திருக்கின்றனர். ஜிவி பிரகாஷ் இசையில், இந்த படத்துக்கு ஜீவிதான் இசையா என்ற கேள்வி எழுப்பும் அளவிற்கு இசையை கொடுத்திருக்கிறார். அந்த அளவுக்கு சுமாரான இசையை படம் முழுவதும் அள்ளித் தெளித்திருக்கிறார். ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வீடு சம்பந்தப்பட்ட காட்சிகளும் ஜீவியின் ஆபீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 

நாம் ஏற்கனவே பார்த்துப் பழகிய ஒரு வரிக் கதையை வைத்துக் கொண்டு 2.30 மணி நேரம் படத்தை ரசிக்க வைக்க முயற்சி செய்த இயக்குநர் இந்த படத்திற்கான டைட்டிலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை சற்று திரைக்கதைக்கும் கொடுத்து இருக்கலாம். 


டியர் - பாவம்!