Skip to main content

"வெளியே பேசவோ கருத்து சொல்லவோ கூடாது" - சென்சார் போர்டு முன்னாள் அதிகாரி பக்கிரிசாமி அனுபவங்கள்!

Published on 22/09/2023 | Edited on 22/09/2023

 

Pakkirisamy |Exclusive Interview|Censor Board|

 

முன்னாள் சென்சார் போர்டு அதிகாரி மற்றும் ஆவணப்பட இயக்குநர் பக்கிரிசாமி அவர்களை நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். தன்னுடைய பல்வேறு அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார். 

 

டி.என்.கிருஷ்ணன் கலைப்படத்திற்காக தேசிய விருது வாங்கியது மகிழ்ச்சியான விஷயம். நாம் அறிந்தது வெகுஜன சினிமா தான். ஆனால் பலதரப்பட்ட சினிமாக்கள் இருக்கின்றன. நான் செய்தது ஆவணப்படம். ஆவணப்படங்கள் குறித்த புரிதல் இங்கு பலருக்கும் குறைவுதான். மேற்கத்திய உலகில் கமர்ஷியல் படங்கள் வந்தாலும் சீரியசான படங்களும் நிறைய வெளிவருகின்றன. இங்கு அதுபோன்ற படங்கள் குறைவாகவே வருகின்றன. அனைவரும் கமர்ஷியல் சினிமாக்களை நோக்கியே செல்கின்றனர். எனவே ஆவணப்படங்களுக்கான இடம் இங்கு அதிகம் இல்லை என்பதில் ஆச்சரியமில்லை. 

 

வெளிநாடுகளில் ஆவணப்படங்களை தியேட்டரில் ரிலீஸ் செய்வார்கள். இங்கு அதற்கான மார்க்கெட் இல்லை. ஆவணப்படம் இயக்கும் இயக்குநர்கள் அனைவருக்கும் முழு திரைப்படத்தை இயக்க வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சென்சார் அதிகாரிகள் ஒரு படத்தைப் பார்த்தால் அதுபற்றி வெளியே பேசக்கூடாது. அது பற்றிய கருத்தை நாங்கள் வெளியே சொல்லக்கூடாது. படம் எப்படி இருக்கிறது என்று எங்களிடம் நிறைய பேர் கேட்பார்கள். ஆனால் நாங்கள் சொல்ல மாட்டோம். படத்தின் தரத்தைப் பொறுத்து நாங்கள் சான்றிதழ் வழங்குவோம். 

 

ஒரு படத்தை இயக்குவதற்கு முன்பு சரியான ஆராய்ச்சி என்பது மிகவும் முக்கியம். தமிழ் சினிமாவின் தரம் தற்போது அதிகரித்து தான் வருகிறது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக நம்முடைய படங்களும் இருக்கின்றன. அந்தக் காலத்தில் ஸ்ரீதர் போன்றவர்கள் போட்ட விதை இது. ஆவணப்படங்களின் தரமும் தற்போது அதிகரித்தே வருகிறது. ’Something Like a War’  என்கிற ஆவணப்படம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. என் மனதிலிருந்து எப்போதும் நீங்காத படம் அது. ஆவணப்படங்களுக்காக மட்டுமே இப்போது நிறைய திரைப்பட விழாக்கள் நடைபெறுகின்றன.

 

ஆவணப்படங்களுக்கு இப்போது பல்வேறு வகைகளில் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகின்றது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆவணப்படங்கள் ஆஸ்கர் பரிந்துரை வரை சென்றிருக்கின்றன. இதற்கு முன்பு நான் தேசிய விருது வாங்கியது அப்துல்கலாம் ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில். கிட்டத்தட்ட 20 வருடங்கள் கழித்து மீண்டும் இப்போது தேசிய விருது வாங்கியிருக்கிறேன். இதுவரை மொத்தம் 4 தேசிய விருதுகளை நான் வாங்கியிருக்கிறேன். மக்களே மக்கள் குறித்து பேசுவது தான் இப்போதைய திரைமொழி ஆகும்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த விஷயத்தில் திராவிட கழகங்களைப் பின்தொடர வேண்டும்” - ஆர்.கே. செல்வமணி

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
rk selvamani about censor issue

நேசமுரளி இயக்கி தயாரித்திருக்கும் திரைப்படம் 'கற்பு பூமி'. இப்படத்தின் கதை சில வருடங்களுக்கு முன் நடந்த பொள்ளாச்சி சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நக்கீரன் ஆசிரியர், விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, காங்கிரஸின் மூத்த தலைவர் திருநாவுக்கரசர் எம்.பி, ஃபெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இதில் படத்தின் தலைப்பிற்கு, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு அனுமதி அளிக்கவில்லை என்பதால் படத்தின் பாடலை வெளியிட முடியாத சூழல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. பின்பு விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி, இந்தியத் திரைப்படத் தணிக்கை குழு படத்தின் காட்சிகளைத் தான் வெளியிடக் கூடாது என்றனர். கேசட்டுகளை வெளியிடலாம் என்று கூறி படத்தின் பாடலை வெளியிட்டார். 

இந்நிகழ்ச்சியில் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “இந்த சென்சார் அராஜகத்திற்கு முதலில் பலியான இயக்குநர் நான் தான். அன்று சற்று காம்ப்ரமைஸ் ஆகி சென்றதால் என் படம் வெளியானது. ஒரு வேளை அன்று விடாப்பிடியாக போராடி இருந்தால் இன்று இவர்கள் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்களோ என்னவோ? நக்கீரன் சார் சொன்னதைப் போல, நாங்கள் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகிவிட்டோம். அடுத்து ஒருவர் வந்து எதிர்வினை ஆற்றும்போது தாக்குதல் துவங்கி விடுகிறது. 

இரு விஷயம் சொல்ல விரும்புகிறேன். எதார்த்தத்தை புரிந்து கொள்ளுதல், அதே நேரம் வளைந்து போகவும் கூடாது. புலன் விசாரணை மற்றும் கேப்டன் பிரபாகரன் படங்களில் இது கற்பனை என்கின்ற ஒரு கார்டை போட்டு, உண்மை சம்பவங்களில் இருந்து சில விஷயங்களை மாற்றி வீரப்பன் என்பதை வீர்பத்திரன் என்றும் ஆட்டோ சங்கர் என்பதை ஆட்டோ தர்மா என்றும் லேசாக மாற்றி திரைப்படமாக எடுத்தேன். மக்கள் சரியாக நான் எதைப் பற்றி கூறுகிறேன் என்பதை புரிந்துகொண்டு ரசித்தார்கள். அந்தப் படங்கள் தந்த வெற்றியின் உற்சாகத்தில் நான் அடுத்து குற்றப்பத்திரிக்கை என்கின்ற படத்தை எடுத்தேன். அப்பொழுது நான் புரிந்து கொண்ட உண்மை, உண்மையை பேசக்கூடாது என்பதே. நேசமுரளி சொன்னது போல் விளம்பரங்கள் மற்றும் படங்கள் மூலம் பொய் பேசலாம், வன்மம் வளர்க்கலாம். ஆபாசம் பேசலாம். ஆனால் உண்மை பேசக்கூடாது என்பதை அறிந்து கொண்டேன். 

இந்த விஷயத்தில் கலைஞர்கள் திராவிட கழகங்களைத் தான் பின்தொடர வேண்டும் என்று சொல்வேன். கெடுபிடிகள் இருந்தாலும் தங்கள் படங்களின் மூலம் கருத்துகளை பரப்பி ஆட்சிக் கட்டிலுக்கு வந்த திராவிட கழகங்களைத் தான் கலைஞர்கள் பின்பற்ற வேண்டும். அதே நேரம் அதிகாரத்திலிருப்பவர்கள் அத்தனை பேரையும் ஒரே நேரத்தில் பகைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் அல்ல. கல்லில் தொடர்ச்சியாக மோதிக் கொண்டே இருந்தால் தலை உடையும் என்று தெரிந்தும் தொடர்ச்சியாக முட்டிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனம் இல்லை. உளியினால் அந்தக் கல்லை உடைக்க முயல்வது தான் புத்திசாலித்தனம். ஒரு காலத்தில் மக்களைக் காக்கவே போலீஸும் அதிகாரமும் இருந்தது. ஆனால் தற்போது போலீஸும் அதிகாரமும், கட்சியையும் ஆட்சியையும் காப்பாற்றவே போராடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும். 

துணிச்சலான மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களையே இப்படி மிரட்டுகிறார்கள் என்றால், நேசமுரளி போன்றோரை சுண்டைக்காய் நசுக்குவது போல் நசுக்கிவிடுவார்கள். எனவே இயக்குநர் நேசமுரளி புத்திசாலித்தனமாக இந்தப் பிரச்சினையை அணுகி, தன் படத்தை வெளியிட்டு மேலும் பல படங்கள் எடுத்து வெற்றி பெற வாழ்த்துகிறேன்” என்றார். 

Next Story

தேசிய திரைப்பட விருதுகள் - பெயர் மாற்றம்; பரிசுத் தொகை அதிகரிப்பு

Published on 14/02/2024 | Edited on 14/02/2024
name and prize changed in national film awards

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறைக் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் 1954ஆம் ஆண்டிலிருந்து தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. இதில் 1984ஆம் ஆண்டிலிருந்து சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருதும், 1965ஆம் ஆண்டிலிருந்து தேசிய ஒருமைப்பாடு குறித்த சிறந்த திரைப்படத்திற்கான நர்கிஸ் தத் விருது வழங்கப்பட்டு வருகின்றன. 

ad

இந்த நிலையில் இந்தாண்டு நடக்கவுள்ள 70வது தேசிய விருதுகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பரிசுத்தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த அறிமுக படத்துக்கான இந்திரா காந்தி விருது, சிறந்த அறிமுக திரைப்பட இயக்குநருக்கான விருது என பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவ்விருது வாங்கும் இயக்குநருக்கு பதக்கமும், ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படவுள்ளது.  

தேசிய ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படத்துக்கான நர்கிஸ் தத் விருது, தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழல் மதிப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விருது பெறும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இருவருக்கும் பதக்கமும், தலா ரூ.2 லட்சம் பரிசும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், தாதாசாஹேப் பால்கே விருதுக்கான பரிசுத் தொகை ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

சிறந்த படம், முதல் படம், முழுமையான பொழுதுபோக்கு வழங்கும் படம், இயக்கம் மற்றும் குழந்தைகள் படம் வகையில் வழங்கப்படும் சுவர்ண கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.3 லட்சமாகவும், தேசிய, சமூக மற்றும் சுற்றுச்சூழலை ஊக்குவிக்கும் சிறந்த திரைப்படம், நடிப்பு பிரிவுகள், சிறந்த திரைக்கதை, இசை மற்றும் பிற பிரிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும் ரஜத் கமல் விருதின் பரிசுத்தொகை ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

சிறந்த அனிமேஷன் படம், சிறந்த ஸ்பெஷல் எபெக்ட்ஸ் படம் ஆகியவை 'சிறந்த ஏ.வி.ஜி.சி. படம்' என்ற ஒரே விருதாக வழங்கப்படுகிறது. சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது. சிறந்த ஒலி வடிவமைப்புக்கான விருதாக மாற்றப்பட்டு பரிசுத்தொகை 2 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. சிறந்த இசை இயக்கத்துக்கான விருது சிறந்த பின்னணி இசை விருதாக மாற்றப்பட்டுள்ளது. சிறப்பு ஜூரி விருது நீக்கப்படுகிறது. 'சிறந்த குடும்ப படம்' என்ற விருது நீக்கப்பட்டு, 'சிறந்த திரைக்கதை' விருது அறிமுகப்படுத்தப்படுகிறது.