Skip to main content

"வெற்றிமாறன் கூட அடிக்கடி டிபேட் நடக்கும்" - பாவக்கதைகள் இசையமைப்பாளர் சிறப்புப் பேட்டி...

Published on 04/01/2021 | Edited on 04/01/2021

 

paava kadhaigal oor iravu music director sivatmikha interview

 

சமீபத்திய, பிரபலமான பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா ’பாவக்கதை’ படத்தில் இசையமைப்பாளராகப் பணியாற்றியவர். அவர் பெண் இசையமைப்பாளராக அடையாளம் காணப்பட்டது குறித்தும், இயக்குனர் வெற்றிமாறன் உடன் பணியாற்றிய அனுபவங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ நேர்காணலில் உற்சாகமாகக் கூறியதைப் பார்க்கலாம்.

 

இன்று பெண் இசையமைப்பாளர்கள் குறைவாகவே இருக்கின்ற சூழ்நிலையில், உங்களைத் தனித்துவமாகக் காட்டிக்கொள்ள என்ன முறையைக் கடைப்பிடிக்கிறீர்கள்?

எல்லா வகையான பாடல்களையும் தமிழ்த் திரையுலகம் ஏற்றுக் கொள்ளும். ஆனால் அதை நாம் மறந்துவிடுகிறோம். காரணம், நாம் நம்முள் இருக்கும் அந்த தனித்துவமான திறமையை வெளிக்கொணராமல் பிறர் செயல்படுத்திய விதங்களில் நம்மை மாற்றிக்கொள்கிறோம். அவ்வாறு நடக்காமல், நம்முள் இருக்கும் திறமையை வெளிக்காட்டினாலே போதுமானது, வேறு ஒன்றும் கடைப்பிடிக்கத் தேவையில்லை. அவரவருக்கு என்று இயற்கையாக இருக்கும் ஸ்டைலை வெளிக்காட்டினாலே ஈர்க்கக்கூடியதாகவும் போதுமானதாகவும் இருக்கும். பிறரால் அடையாளம் காணப்பட்ட ஸ்டைலை பின்தொடராமல் இருந்தாலே போதுமானது .

 

படத்தைப் பார்த்ததும் யாராவது உங்களைத் தொடர்புகொண்டு வாழ்த்தினார்களா ?

படம் வெளியானதும் பலர் என்னை வாழ்த்தினார்கள். அதிலும் பல நல்ல கருத்துகள் கேட்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. மிகவும் எதிர்பார்க்காத ஒன்றாக நான் சில நாட்களுக்கு முன்பு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜை தொடர்புகொண்டு பேசினேன் அப்போது அவரும் என்னை வாழ்த்தினார். 'பீட்ஸா', 'பேட்ட' போன்ற அவர் இயக்கிய படங்களைப் பார்த்த சமயங்களில் இருந்து நான் விஜய் சேதுபதி, கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இருவருடைய மிகப் பெரிய ரசிகை. அவ்வாறு இருக்க அவர் என்னை வாழ்த்தியது எனக்கு அதிக ஊக்கமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. . 

 

திரையுலகிற்குள் நுழைவதை உங்களுடைய குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டார்களா?

பொதுவாகவே பெற்றோர்கள் படிக்க வேண்டிய வயதில் படிப்பை தவிர்த்து வேறு எதிலும் நமக்கு உள்ள ஆர்வத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அதை போன்றே என் வீட்டிலும் அரங்கேறியது. குறைந்தது இன்ஜினியரிங்காவது முடித்துக்கொண்டு மற்ற முயற்சிகளை செய்துகொள் என்றார்கள். ஆனால், எனக்கு அதில் சுத்தமாக ஆர்வம் இல்லை. பிடிக்காத ஒன்றைச் செய்து என் நேரத்தை வீண்செய்யவும் தயாராக இல்லை. ஆனால், நான் அந்த சிறு வயதிலே ஒரு ஸ்திரமான முடிவு செய்து, இதுதான் வாழ்க்கை என எண்ணி முழுவதுமாய் இறங்கினேன். அதனால்தான் இன்றைக்கு வெற்றி சார் போன்ற பெரிய மனிதர்களுடன் பணியாற்றும் வாய்ப்புகள் கிடைத்தது. நான் எடுத்தது நிச்சயமாக ஒரு கடினமான முடிவுதான். இப்போது, நான் தோல்வி அடைந்திருந்தால் என் பெற்றோர்களே என் பேச்சைக் கேட்டியா என்று என்னைக் கண்டித்திருப்பார்கள். அந்தப் பயமே என்னை இங்குவரை கொண்டு வந்தது என்பதுதான் உண்மை .

 

திரையுலகில் பெண் இசையமைப்பாளர்கள் குறைவாக இருப்பதன் காரணம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

திரையுலகில் உள்ள பெண்களை நடிக்கிறீர்களா? பாடுகிறீர்களா? என்றுதான் மற்றவர்கள் கேட்கிறார்களே தவிர, இசையமைப்பாளர் பெண்ணாக இருக்கலாம் என்ற எண்ணம் கூட யாருக்கும் ஏற்படுவது இல்லை. காரணம், அந்த ஒரு வட்டத்தை உருவாக்கியவர்களும் பெண்கள்தான். அதை உடைத்து காட்ட யாரும் போராடவில்லை. அதை நிரூபித்துக் காட்டவும் இல்லை. இன்று வரை பெண்கள் இசை வாத்தியங்களை வாசிக்கக் கற்றுக்கொள்வதிலும், டெக்னீஷியன் போன்ற வேலைகளைக் கற்றுக்கொள்ளாமல் இருப்பதே இவைகளுக்கு முக்கியமான காரணமாக எடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு ஏற்பட்ட அந்த ஒற்றை நோக்கம் கொண்ட மனப்போக்கை பெண்ணாக நாம்தான் உடைத்தெறிய வேண்டும். சமீபத்தில் அனைவரையும் வியந்து பார்க்க வைத்த பெண் இயக்குனராக அடையாளம் காணப்பட்டவர் சுதா கொங்கரா. இதனைக் கேட்கையில் பெருமையாக இருக்கிறது. நானும் இந்தப் பயணத்தில் பெண் இசையமைப்பாளராகக் கண்டுகொள்ளப்பட்டது ஒரு மகிழ்ச்சி அளிக்கிற விஷயம். 
 

cnc

 

இயக்குனர் வெற்றிமாறன் உடன் பணியாற்றிய அனுபவங்கள்?

என்னுடைய ஆரம்பக் கட்டத்திலே அவருடன் பணியாற்றியது எனக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தது. எனக்கும் இசையுடன் பயணிக்கப்போகும் வாழ்க்கைக்கும் கண்டிப்பாக தேவையானதாக இருக்கும் என நம்புகிறேன். அவருக்கும் எனக்கும் அடிக்கடி விவாதங்கள், அதிக கலந்துரையாடல்கள் நிகழ்ந்தன. ஆனால், அதை எல்லாம் நானும் அவரும் கற்றுக்கொள்ளும் நோக்கத்தோடு பார்த்தோமே தவிர சண்டையாகவோ, விவாதமாகவோ கருதியதில்லை. சில விஷயங்களை நான் எதிர்ப்பேன், சில விஷயங்களை அவர் எதிர்பார். ஆனால் அது எங்களுக்குப் புதியதாக ஒன்று கற்றுக்கொள்ளும் விதமாக அமைந்தது. இது எனக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திரைத்துறைக்கே நல்லது கிடையாது” - நயன்தாராவுக்கு ஆதரவு அளித்த வெற்றிமாறன்

Published on 16/01/2024 | Edited on 16/01/2024
Vetrimaran who supports Nayanthara for annapoorani movie issue

நயன்தாரா, ஜெய் உள்ளிட்ட பலர் நடிப்பில் அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த மாதம் 1 ஆம் தேதி வெளியான படம் அன்னபூரணி. 'ஜீ ஸ்டூடியோஸ்' நிறுவனம் மற்றும் 'டிரடண்ட் ஆர்ட்ஸ்' நிறுவனம் இணைந்து தயாரித்திருந்த இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். தமன் இசையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனமே பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 29 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

இப்படம் மத உணர்வைப் புண்படுத்தும் விதமாக இருப்பதாகக் குறிப்பிட்டு மும்பையைச் சேர்ந்த சிவசேனா முன்னாள் தலைவர் ரமேஷ் சோலங்கி என்பவர், மும்பை எல்டி மார்க் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் நயன்தாரா, ஜெய், நிலேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட படக்குழுவினர் சிலர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். பின்பு இப்படத்துக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் படத்தை தடை செய்யவேண்டும் எனப் பதிவிட்டு வந்தனர். மேலும் மும்பையில் உள்ள நெட்ஃபிளிக்ஸ் அலுவலகத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். பிறகு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இப்படம் நீக்கப்பட்டது. இதற்கு சமூக வலைத்தளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் வெற்றிமாறன், புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது என்று கூறினார். இது குறித்து அவர் பேசியதாவது, “தணிக்கைச் செய்யப்படாத படைப்பு சுதந்திரம் என்று எதுவும் இந்தியாவில் இருக்கும் திரைப்பட இயக்குநர்களுக்கு கிடையாது. இது ஓடிடிக்கும் பொருந்தும். ஆனால், மத்திய தணிக்கைக் குழு அனுமதி வழங்கிய ஒரு படத்தை, புற அழுத்தங்களால் ஓடிடியில் இருந்து நீக்க வைப்பது என்பது திரைத்துறைக்கே நல்லது கிடையாது. ஒரு படத்தை திரையிட அனுமதிப்பதற்கும் மறுப்பதற்கும் தணிக்கை குழுவுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. இத்தகைய நிகழ்வுகள் தணிக்கைக் குழுவின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

“குறைகளோடும் தவறுகளோடும் தான் படம் எடுக்கிறோம்” - மனம் திறந்த வெற்றிமாறன்

Published on 22/12/2023 | Edited on 22/12/2023
vetrimaaran speech in  CIFF

21வது சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் 21 ஆம் தேதி வரை சென்னையின் பல்வேறு திரையரங்குகளில் நடைபெற்றது. இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் (Indo Cine Appreciation Foundation) கடந்த 2003 ஆம் ஆண்டு முதல் இந்த விழாவைத் தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழா போட்டியில் தமிழ் பிரிவில், வசந்த பாலனின் அநீதி, மந்திர மூர்த்தியின் அயோத்தி, தங்கர் பச்சானின் கருமேகங்கள் கலைகின்றன, மாரி செல்வராஜின் மாமன்னன், விக்னேஷ் ராஜா மற்றும் செந்தில் பரமசிவம் ஆகியோரின் போர்த்தொழில், விக்ரம் சுகுமாரனின் ராவணக் கோட்டம், அனிலின் சாயவனம், பிரபு சாலமனின் செம்பி, சந்தோஷ் நம்பிராஜனின் ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன், கார்த்திக் சீனிவாசனின் உடன்பால் மற்றும் வெற்றிமாறனின் விடுதலை பகுதி 1 உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டன.

இதில் சிறந்த படமாக அயோத்தி தேர்வு செய்யப்பட்டது. விடுதலை படத்தின் முதல் பாகத்துக்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு சிறப்பு ஜூரி விருது அறிவிக்கப்பட்டது. விருது வாங்கிவிட்டு மேடையில் பேசிய வெற்றிமாறன், “எப்போதுமே இது மாதிரியான படங்கள் எடுக்கும்போது ஒரு பேலன்ஸ் இருக்கணும். சில இடங்களில் கதையில் சமரசம் பண்ணிப்போம். சில இடங்களில் ஜனரஞ்சகத்தன்மைக்காக சமரசம் செய்துகொள்வோம். என்னுடைய படங்களில் நிறைய சீன்களில் டப்பிங் சரியாக இருக்காது. ஆனால் எல்லா படங்களையுமே நிறைய குறைகளோடும் தவறுகளோடும் தான் எடுத்து முடிக்கிறோம். இருந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு பாராட்டுகிறார்கள். அதே சமயம் கதையின் நோக்கம் படத்தின் குறைகளை மறக்கடிக்க செய்கிறது.  

இது மாதிரி கதையாடல்கள் சமூகத்தில் ஒரு மாற்றம் நிகழ்த்தும் என்ற நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்திற்காகத்தான் இந்த அங்கீகாரம் என நினைக்கிறேன். அடுத்தடுத்து செய்யும் முயற்சிகளில் சமரசங்களை குறைத்துக் கொள்ள வேண்டும். இன்னும் சரியாக கொடுக்க வேண்டும் என விரும்புகிறேன். விடுதலை மாதிரியான படத்திற்கு ஜனரஞ்சகமான ஆதரவும் திரைப்பட விழாக்களின் அங்கீகாரமும் பெரிய ஊக்கமளிக்கிறது. நோக்கம் பத்தி பேசும்போது அயோத்தி பத்தி பேச வேண்டும். இன்றைய காலகட்டத்தில் தொடர்புபடுத்தி கொள்ளக்கூடிய ஒன்று. கடந்த சில வருடங்களில் வந்த படங்களில் ஒரு நல்ல நோக்கத்தோடு வந்த படம். அந்த இயக்குநரின் நோக்கத்தை ஆதரித்த மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள்” என்றார்.