Pa. Ranjith called for a amstrong memorial rally

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 05.07.2024 அன்று இரவு பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே 6 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு நீதி வேண்டி நினைவேந்தல் பேரணி நடத்தவுள்ளதாக இயக்குநர் பா.ரஞ்சித் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பில், ‘பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இக்கொடூர நிகழ்வு தனிப்பட்ட முறையில் நம் ஒவ்வொருவருக்கும் பேரிழப்பாகும். தலித்துகள், சமூக அரசியல் மற்றும் பொருளாதார விடுதலை அடைய இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. அதில் அவர்கள் சந்தித்த இழப்புகள் எண்ணிலடங்கா!

Advertisment

இதையெல்லாம் மீறி இயக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் ‘அம்பேத்கரியம்’ என்கிற ஒற்றைப்புள்ளியில் இணைந்த தலைவர்களே நம் பலம். நூறு வருடத்திற்கும் மேலான தலித் அரசியல் வரலாற்றில் ஒரு தலைவரின் இருப்பே கேள்விக்குறியாகியிருப்பது சுலபமாகக் கடந்து போகக்கூடிய நிகழ்வல்ல. சமத்துவத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் என்கிற ஆளுமையை வீழ்த்திவிட்டால் அவர்தம் நம்பிய அரசியலும் வீழும் என்கிற சிந்தனை உதிப்பதற்கு முன்பே அதைப் பொய்ப்பிக்க வேண்டிய கடமை நமக்கிருக்கிறது. பாபாசாகேப் அம்பேத்கரை நெஞ்சிலேந்தி, இவ்விழப்பு ஒரு குடும்பத்திற்கோ, இயக்கத்திற்கோ நேர்ந்ததாகக் கருதாமல் நம் ஒவ்வொருவருக்கும், சமூகத்திற்கும் நேர்ந்த இழப்பு எனப் பறைசாற்றுவோம்.

சாதி, மதம் மற்றும் இயக்கங்களுக்கு அப்பாற்பட்டு, தான் நம்பிய தத்துவத்தின்படி வாழ்ந்த சமூக வீரர் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் செயற்பாடுகளை நினைவிலேந்தி வரும் 20ஆம் தேதி மாலை 3 மணியளவில் சென்னை எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே கூடி இராஜரத்தினம் அரங்கம் வரை ஊர்வலமாகச் சென்று அங்கு நடைபெறும் நினைவேந்தல் கூட்டத்தில் பெருந்திரளாக அணியமாகி, கட்சிப் பாகுபாடு இல்லாமல் அணிதிரள்வோம். வழக்கு விசாரணை நேர்மையான முறையில் நடத்தப்பட்டு உண்மையான குற்றவாளிகளைத் தண்டித்திடவும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திடவும் குரல் கொடுப்போம். அனைத்து தலித் கூட்டமைப்பின் தலைவர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்வேறு சங்கங்கள் மற்றும் கலைஞர்கள் கலந்துகொள்ளும் எழுச்சிமிகு பேரணியில் ஆயிரமாயிரமாய் இணைவோம், வாருங்கள்! ஜெய் பீம்!’ எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment