92 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் லிஸ்ட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய சினிமா சார்பில் ‘கல்லி பாய்’ என்ற படத்தை தேர்வு செய்துள்ளது ஃபிலிம் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா. ரன்வீர் சிங் மற்றும் அலியா பட் நடிப்பில் உருவான இந்த படத்தை ஜோயா அக்தர் இயக்கினார். இந்த வருட தொடக்கத்தில் வெளியான இப்படத்திற்கு இந்தியாவை தாண்டி அமெரிக்காவில் நல்ல வரவேற்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. காரணம் இந்த படத்தின் கரு... தாராவி பகுதியிலிருந்து வரும் இளைஞன் எப்படி உலக பிரபலமடைந்த ராப் பாடகராகிரான் என்பதுதான். இதேபோல ஒரு கதை அம்சத்தை கொண்டதுதான் 8 மைல் என்ற ஹாலிவுட் படம். 2002ஆம் ஆண்டிற்கான சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதையும் 8 மைல் படம் பெற்றுள்ளது. அதில் பிரபல ராப் பாடகர் எமினம் நடித்திருப்பார். கல்லி பாய் வெளியானபோது 8 மைல் படத்தின் காப்பி என்று மிகப்பெரிய விமர்சனம் எழுந்தது. தற்போது இந்த படம்தான் ஆஸ்கருக்காக இந்தியா சார்பில் கலந்துகொள்ள தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வுக்கு சமூக வலைதளத்தில் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்தியா சார்பில் எந்த படம் ஆஸ்கர் விருது விழாவில் கலந்துகொள்ளப்போகிறது என்பதை தேர்ந்தெடுக்கும் எஃப் எஃப் ஐ அமைப்பின் லிஸ்ட்டில் மொத்தம் 28 படங்கள் தேர்வு செய்யப்பட்டது. அதிலிருந்து ஒரு படத்தை தேர்வு செய்ய வேண்டும் என்றபோதுதான் கல்லி பாய் படத்தை தேர்வு செய்திருக்கின்றனர். அந்த லிஸ்ட்டில் தமிழ் படங்களான வடசென்னை, சூப்பர் டீலக்ஸ், ஒத்த செருப்பு 7 உள்ளிட்டவை அடங்கும். மேலும் அந்த லிஸ்ட்டில் ஐந்து ஹிந்தி படங்கள், மூன்று மலையாள படங்கள், தலா ஒரு கன்னட மற்றும் தெலுங்கு படங்களும் இருந்தன.
1957ஆம் ஆண்டில் இருந்து இந்திய படங்கள் ஆஸ்கர் விழாவில் கலந்து கொள்கின்றன. அதில் முதன் முறையாக ஒரு தென்னிந்திய சினிமா ஆஸ்கருக்கு இந்தியா சார்பில் அனுப்பப்பட்டது 1969ஆம் ஆண்டு தெய்வமகன் படம்தான். அதன்பின் நாயகன், அஞ்சலி, தேவர் மகன், குருதிப்புனல், இந்தியன், ஜீன்ஸ், ஹே ராம் படங்கள் அனுப்பப்பட்டன. இதன்பின் பல வருடங்கள் கழித்து கடந்த 2016ல்தான் விசாரணை படம் இந்தியா சார்பில் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டது. இதுவரை தெலுங்கிலிருந்து சுவாதி முத்தயம் என்ற படம் மட்டும்தான் சென்றிருக்கிறது. கலைக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்படும், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் சினிமா என்று சொல்லப்படும் மலையாள சினிமாவிலிருந்து இரண்டு படங்கள்தான் சென்றிருக்கின்றன. அதில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆதாமிண்டே மகன் அபு என்ற மலையாள படம் இந்தியா சார்பில் ஆஸ்கரில் கலந்துகொண்டது. அங்கு அவர் ஆஸ்கர் கமிட்டியில் எப்படி தன்னுடைய படத்தை புரோமோட் செய்தார், அப்போது என்ன அவதிகள், கஷ்டங்கள் ஏற்பட்டன என்பதை வைத்து ஆஸ்கார் கோஸ் டூ என்று ஒரு படத்தையே எடுத்துவிட்டார் அந்த இயக்குனர்.
1957ஆம் ஆண்டிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்படும் படங்களில் இதுவரை 20 படங்கள்தான் ஹிந்தி அல்லாதவை. பல படங்கள் ஹிந்தி படங்களை தாண்டி ஆஸ்கர் போட்டியில் கலந்துகொள்ள தகுதியிருந்தும் ஹிந்தி படங்களுக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ என்பது பலரது சந்தேகமாக இருக்கிறது. எஃப் எஃப் ஐ அமைப்பின் விதிமுறைகள் இருக்கின்றன. அந்த விதிகளுக்கு உட்பட்டு நம்முடைய படங்களை அவர்களுக்கு அனுப்ப வேண்டும். அதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டும். ஆஸ்கர் கமிட்டி என்று ஒன்று இருக்கிறது. அதில் நம்முடைய படத்தை உறுப்பினர்களை பார்க்க வைத்து வாக்கு சேகரிக்க வேண்டும். இதில் இந்திய படம் என்றாலே உறுப்பினர்கள் தவிர்த்துவிடுவார்கள் என்று பலரும் சொல்கிறார்கள்.
பொதுவாக இந்திய சினிமா என்றாலே பாலிவுட் சினிமா என்றுதான் அமெரிக்கர்கள் நினைக்கிறார்கள், குறிப்பாக ஆஸ்கர் குழு உறுப்பினர்களுக்கு அப்படித்தான் தெரிகிறது என்று வெற்றிமாறன் ’விசாரணை’ படத்தை அனுப்பும்போது தன்னுடைய ஆஸ்கர் அனுபவத்தை பகிர்ந்திருந்தார். உலகின் மிகப்பெரிய வணிக சினிமாத்துறையாக இந்திய சினிமா இருக்கும் பட்சத்தில் இந்திய சினிமா என்றால் பாலிவுட் மட்டுமல்ல பல மொழிகளில் உருவாகும் சினிமா இருக்கிறது என்பதை உலகறிய செய்ய வேண்டும். இல்லை என்றால் ஹிந்தி அல்லாத மொழிப் படங்கள் இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு அனுப்பப்படுவதே பெரிதாகப் பேசப்படும். கடைசிவரை சிறந்த வெளிநாட்டு நாமினேஷனுக்கும் செல்லாத, ஈரான், கொரியா, ஜப்பான் படங்கள் வாங்குவதைப் விருதுகளையும் பெறாத நிலை தொடரும்.