Skip to main content

ஆஸ்கர் என்றாலே சர்ச்சைதானா? 

Published on 25/02/2019 | Edited on 25/02/2019
oscar


2019 ஆண்டுக்கான ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று காலை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி, நடைபெற்று முடிந்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டரில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சி என்றால் அதை பொழுதுபோக்காக கொண்டு செல்ல தொகுப்பாளர் மிகவும் அவசியம், அதிலும் ஆஸ்கர் போன்ற உலகப்புகழ் பெற்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பாளர் மிகவும் அவசியமானவர். ஆனால், இந்த வருடம் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர் இல்லாமல்தான் நடந்து முடிந்திருக்கிறது. இந்த வருட ஆஸ்கருக்கு தொகுப்பாளராக காமெடியன் கெவின் ஹார்ட் தேர்வு செய்யப்பட்டார். ஆனால், அவருடைய முந்தைய ட்வீட் பதிவுகள் அனைத்தும் எல்.ஜி.பி.டி சமூகத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் இருந்ததால், அவருக்கு கடும் எதிர்ப்பு வந்தது. அவர் ஆஸ்கர் நிகழ்ச்சியில் பங்கேற்க பலரும் தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர். இதனால் ஆஸ்கர் விருது வழங்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதிலிருந்து தானே விலகிக் கொள்வதாக கெவின் ஹார்ட் கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தார். ஆஸ்கர் நிர்வாகக்குழு அவரை மீண்டும் தொகுத்து வழங்க அழைத்தது. ஆனாலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை. இதனையடுத்து ஆஸ்கர் நிர்வாகம் தொகுப்பாளர் இல்லாமலே நிகழ்ச்சியை நடத்த முடிவெடுத்தது. 30 ஆண்டுகளுக்கு பின் ஆஸ்கர் நிகழ்ச்சியில் தொகுப்பாளர் இல்லாமல் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

இந்த சர்ச்சை முடிந்த பின்பு மேலும் சிறந்த ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பு, ஒப்பனை & சிகை அழங்காரம், லைவ் ஆக்‌ஷன் குறும்படம் ஆகிய நான்கு பிரிவுகளுக்கும் விருது வழங்கும் நிகழ்வை நேரலையில் காட்டாமல் விளம்பரம் ஒளிபரப்படும் என்று ஆஸ்கர் நிறுவனம் சர்ச்சையை கிளப்பியது. பின்னர் இதுபோன்று வருடா வருடம் நான்கு விருதுகள் இதுபோலதான் லைவில் தவிர்க்கப்படும் என்று ஆஸ்கர் பதில் தந்தது.

oscar

விருது வழங்கும் விழாவுக்கு முன்புதான் இவ்வளவு சர்ச்சைகள் என்று பார்த்தால் விருது வழங்கியதிலும் இந்த முறை சர்ச்சைதான். ரோமா என்னும் படத்திற்குதான் சிறந்த படத்திற்கான விருது கிடைக்கும் என சொல்லப்பட்ட நிலையில், கிரீன் புக் என்ற படத்திற்கு சிறந்த படத்திற்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது. கிரீன் புக் படத்தை ஒப்பிட்டு பார்த்தால் அதனுடன் பரிந்துரையில் உள்ள மற்ற படங்கள் அனைத்துமே சிறந்த படங்கள் என்று சமூக வலைதளத்தில் விமர்சிக்க தொடங்கிவிட்டனர்.  ஒருவேளை மூன் லைட் சிறந்த படம் என அறிவித்துவிட்டு, உடனே லாலா லேண்ட் சிறந்த படம் எதோ தவறு நடந்துவிட்டது என்று 89 ஆஸ்கார் நிகழ்ச்சியில் தெரிவித்ததை போன்று கிரீன் புக் படத்திற்கு தெரிவித்துவிட்டார்களோ என்று சமூக வலைதளத்தில் நையாண்டி செய்கிறார்கள்.
 

சிறந்த படம் பிளாக்-க்ளாஸ்மேன் படத்திற்குதான் கிடைக்கும் என்கிற எதிர்ப்பார்பில் இருந்து இயக்குனர் ஸ்பைக் லீ, அந்த விருதை கிரீன் புக் படத்திற்கு என அறிவிக்கும்போது அமர்ந்திருந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டு, பின்னர் கிரீன் புக் படக்குழு விருதை வாங்கி சென்ற பின்னரே திரும்பினார் என்று மேலும் ஒரு சர்ச்சையை சமூக வலைதளத்தில் மீம்ஸுகளாக பரவி வருகிறது. முன்னதாக ஆஸ்கர் விருது வழங்கும் விழா என்றாலே எதாவது சர்ச்சைகள் இல்லாமல், இருக்காது. கடந்த 2014ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவை பார்த்தவர்களைவிட கடந்த ஆண்டு ஆஸ்கார் விழாவை பார்த்தவர்கள் எண்ணிக்கை மிகவும் சொற்பம் என்று தகவல் வெளியானது. ஆஸ்கர் என்றால் விருது வழங்கும் நிகழ்ச்சி என்பதை தாண்டி, சர்ச்சை நிகழ்ச்சி என்கிற கண்ணோட்டத்திலேயே பார்க்க வைக்கிறார்கள். 91 ஆண்டுகள் கடந்தும் இன்னும் ஆஸ்கார் விருது வழங்கும் நிகழ்ச்சி சர்ச்சைகளை தோளில் சுமந்தபடியே பயணித்து வருகிறது...

 

 

சார்ந்த செய்திகள்