மலையாளியான நித்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். சித்தார்த்தின் 180 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர் வெப்பம், உருமி, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, மெர்சல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள திருச்சிற்றம்பலம் படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார். இதனிடையே நடிகை நித்யா மேனனுக்கும், மலையாள நடிகர் ஒருவருக்கும் விரைவில் திருமணம் என்ற செய்திகள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில் இதனை நடிகை நித்யா மேனன் மறுத்துள்ளார். விஜய் சேதுபதி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள 19 (1)(A) என்ற படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய நித்யா மேனன், “என் திருமணம் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவிய செய்திகளில் உண்மையில்லை. ஒரு செய்தியை வெளியிடும் போது சம்பந்தப்பட்டவரிடம் விசாரித்து நன்கறிந்து வெளியிட வேண்டும். அதை விட்டுவிட்டு தவறான தகவல்களைப் பரப்பக் கூடாது" என வெளுத்து வாங்கியுள்ளார்.