தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கவனம் செலுத்தி வரும் நித்யா, கடைசியாக தமிழில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்காக தேசிய விருதும் பெறவுள்ளார். இதையடுத்து தற்போது கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் காதலிக்க நேரமில்லை படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரிலீஸூக்கி தயாராகி வருகிறது. இதன்பின்பு பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும் தனுஷ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நித்யா, தனது பெயரின் பின்னால் இருக்கும் மேனன் குறித்து விளக்கமளித்துள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்றை அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசியதாவது, “யாருமே எனது பெயரை சரியாக புரிந்துகொள்ளவில்லை. படப்பிடிப்பு முடிந்தால் கூட, கொச்சிக்கு தானே டிக்கெட் புக் பண்ணனும்? எனக் கேட்கின்றனர். ஆனால் நான் கன்னடத்தை சேர்ந்தவள்.
என்னுடைய பெயரில் இருக்கும் மெனன் பெயர், நான் வைத்தது தான். அது நிறைய பேர் மேனன் என கருதுகிறார்கள். அது அப்படி இல்லை. சாதி பெயர் பயன்படுத்த எனக்கு பிடிக்காது. முன்பு என்னுடைய பெயர் என்.எஸ்.நித்யா என இருந்தது. பொதுவாக பெங்களூருவில் அம்மா, அப்பா பெயரின் முதல் எழுத்தை கொண்டு தான் பெயர் வைக்கும் வழக்கம் இருந்தது. அதனால் அம்மா பெயர் நளினி, அப்பா பெயர் சுகுமார் என இணைத்து என்.எஸ்.நித்யா என இருந்தது. அந்த பெயர் பாஸ்போர்டில் பிரச்சனையை உருவாக்கும் என்பதால் மெனன் என்ற பெயரை இணைத்துக் கொண்டேன். ஜோதிடம் பார்த்து தான் இந்த பெயரை வைத்தேன்” என்றார்.