Skip to main content

கோழியை வெட்டும் போது மாட்டை வெட்டக்கூடாதா? - சர்ச்சையான நிகிலா விமலின் பேச்சு 

Published on 19/05/2022 | Edited on 19/05/2022

 

nikhila vimal talk about cow

 

மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ள நிகிலா விமல் தமிழ் கிடாரி, வெற்றிவேல், தம்பி, பஞ்சுமிட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் நடிப்பில் தற்போது மலையாளத்தில் வெளியாகியுள்ள 'ஜோ அண்ட் ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

 

இந்நிலையில்  'ஜோ அண்ட் ஜோ' படத்திற்காக நிகிலா விமல் அளித்த பேட்டியில் மாட்டு இறைச்சி குறித்து பேசியது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "பசுவை கொல்லக் கூடாது என்ற சட்டம் தற்போது தான் நடைமுறைக்கு வந்துள்ளது. அது நம் பிரச்சனை இல்லை. விலங்குகளை பாதுகாக்க வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் எந்த விலங்கையும் கொல்லக்கூடாது. பசுவுக்கு மட்டும் தனித்துவமாக எதுவும் இல்லை. கொல்லலாம் என்றால் எல்லாவற்றையும் கொல்லலாம். மாட்டை கொல்லக் கூடாது, ஆனால் கோழியை கொல்லலாம் என்பது என்ன நியாயம். கோழியும் உயிர்தானே. எந்த உயிரையும் கொல்லக்கூடாது என்றால் எல்லாரும் சைவமாகத்தான் மாற வேண்டும். அது சாத்தியமில்லை. நான் அனைத்து வகையான உணவுகளையும் சாப்பிடுவேன்" எனத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில் நிகிலா விமலுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கேரளா மாநிலத்தில் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாய் திறந்த ஜாஃபர் சாதிக் - சிக்கும் திரைப் பிரபலங்கள்

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
Jaffer Sadiq case he invested in films by fraud money

டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுப்பட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக்தான் என்பது தெரியவந்தது.

மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாஃபர் சாதிக் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால், கட்சியிலிருந்து அவரை நிரந்தரமாக நீக்குவதாக தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அறிவித்திருந்தார். தொடர்ந்து ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், அவரது இல்லத்தில் சோதனையில் ஈடுபட்ட மத்திய போதைப்பொருள் தடுப்புத்துறை, வீட்டை தாழிட்டு நோட்டீஸ் ஒட்டிச் சென்றிருந்தது. தொடர்ந்து ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

இது குறித்து என்.சி.பி. தலைமையகத்தில் சிறப்பு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்திய என்.சி.பி. துணை இயக்குநர் ஞானேஷ்வர் சிங்க், ஜாபர் சாதிக் குறித்து பல்வேறு அதிர்ச்சியான தகவல்களைப் பகிர்ந்தார். அவர் கூறுகையில், “ஜாஃபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெரும் தொகையை சம்பாதித்து, தனது குற்றங்களை மறைக்க திரைப்படங்கள், கட்டுமானம் மற்றும் விருந்தோம்பல் போன்ற பல தொழில்களில் முதலீடு செய்துள்ளார். அவரது போதைப்பொருள் கடத்தல், உணவுப் பொருள் ஏற்றுமதி என்ற பெயரில் புதுடெல்லி, தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் பிற இடங்களில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் மலேசியா வரை பரவியிருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளில் 3500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தியுள்ளனர். அவரது தயாரிப்பு நிறுவனத்தில் போதைப்பொருள் பணம் பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது தயாரிப்பு நிறுவனம் பண மோசடி செய்யும் முன்னோடியாக இருந்ததாக தெரிகிறது” என்றார். 

மேலும், தமிழ்நாடு திரைத்துறை சார்ந்த பிரபலங்களுக்கும் தொடர்பிருப்பதாக ஜாஃபர் சாதிக் வாக்குமூலம் கொடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல், கட்டுமான துறையில் இருக்கும் நபர்களும் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. விசாரணைக்குப் பிறகு, அதில் தொடர்புடைய திரைப் பிரபலங்களின் பெயர்கள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 24/02/2024 | Edited on 24/02/2024
Beef can be transported in buses Minister Sivasankar

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே வசித்து வரும் பாஞ்சாலை என்ற பெண் அந்த பகுதியில் சிறிய அளவில் மாட்டிறைச்சி பக்கோடா விற்பனை செய்யும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். அதோடு அரூருக்கும் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார். அதன்படி அண்மையில் வழக்கம்போல் தனது சொந்த ஊரிலிருந்து மாட்டிறைச்சியை எடுத்துக்கொண்டு அரூர் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் ஏறி சில கிலோமீட்டர் சென்ற பின் நடத்துநர் ரகு, என்ன எடுத்து வர்றீங்க... என்று கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு மாட்டிறைச்சி எடுத்து வருவதாகப் பாஞ்சாலை பதிலளிக்க, இதெல்லாம் பேருந்தில் எடுத்து வரக்கூடாது என்று கூறி மோப்புப்பட்டி என்ற வனப்பகுதியில் பேருந்தை நிறுத்தி பாஞ்சாலத்தை இறக்கி விட்டுள்ளார். பாஞ்சாலை அடுத்த பேருந்து நிறுத்தத்திலாவது இறக்கி விடுங்கள்; இங்கே இறக்கி விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். ஆனால் அதனையெல்லாம் கண்டுகொள்ளாத நடத்துநர் ரகு, பாஞ்சாலையை பாதியிலேயே இறக்கிவிட்டுச் சென்றுள்ளார். இதனையடுத்து பாஞ்சாலை நடந்தே பேருந்து நிறுத்தம் சென்று வேறு பேருந்தில் ஏறி வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்ற அவர், நடந்த சம்பவத்தைத் தனது உறவினர்களிடம் எடுத்துக் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அந்த பேருந்து திரும்பி அந்த வழியாக வந்த பிறகு வழிமறித்து நியாயம் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நடந்த சம்பவம் குறித்து போக்குவரத்து துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் பெண் பயணியின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் நடுவழியில் இறக்கி விட்டதற்காக ஓட்டுநர் சசிகுமார் மற்றும் நடத்துநர் ரகு இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். சமூக வலைத்தளங்களில் இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில், பாதிக்கப்பட்ட மூதாட்டி பஞ்சாலை கொடுத்த புகாரின் பேரில் பேருந்து நடத்துநர் ரகு மற்றும் ஓட்டுநர் சசிகுமார் ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Beef can be transported in buses Minister Sivasankar

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் விளக்கமளிக்கையில், “அரசு பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்வது குற்றமில்லை. பேருந்துகளில் மாட்டிறைச்சி கொண்டு செல்லலாம். பேருந்துகளில் இறைச்சி எடுத்துச் செல்ல எந்த தடையுமில்லை. மாட்டிறைச்சி கொண்டு சென்ற மூதாட்டி பேருந்தில் இருந்து இறக்கி விடப்பட்ட விவகாரத்தில் 5 நிமிடத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது துறை ரீதியான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், “மலைப் பகுதிகளில் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து திட்டம் நாளை உதகையில் தொடங்கப்பட உள்ளது. அதேபோன்று மற்ற மலைப் பகுதிகளில் படிப்படியாக இந்த திட்டம் தொடங்கப்பட உள்ளது.  500 மின்சார பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 100 பேருந்துகள் வாங்க டெண்டர் விடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.