Skip to main content

WFH பண்ணுறீங்களா...? இல்லை பொழுதுபோகலையா? இதைப் பாருங்க... வெளிய போகாதீங்க!

Published on 25/03/2020 | Edited on 25/03/2020

கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வுஹானில் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று இன்று உலகம் முழுக்க 190 நாடுகளில் பரவி மக்களிடத்தில் பெரும் பீதியை கிளப்பி இருக்கிறது. இந்த கரோனா வைரஸ் தொற்று மிக எளிதில் பரவும் என்பதால் இதைத் தடுப்பதற்காக வீட்டிலேயே தங்கி பணி புரியுமாறு மத்திய அரசால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதே நிலையில்தான் பல உலக நாடுகளும் இருக்கின்றன.

 

tanhaji



வீட்டிலிருந்து பணிபுரிவது, விடுமுறையில் இருபது நாட்கள் இருப்பது என்பது கேட்பதற்கு மகிழ்ச்சியைத் தரலாம். ஆனால், சமூக விலங்காக சுற்றித் திரிந்த நமக்கு பொழுதை போக்குவது சிரமம்தான். பகல் முழுவதும் கணினியில் வேலை நடக்கும். மாலையிலும் தற்போதுள்ள சூழ்நிலையில் வீட்டைவிட்டு வெளியேறக் கூடாது என்பதால் கண்டிப்பாக அந்த விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியாது. கண்டிப்பாக நம்முடைய நலனுக்காவது வீட்டில் இருந்துதான் ஆக வேண்டும். ஏனென்றால் கரோனா தொற்று பாதிப்பானது நம்மில் ஒரு சிலரின் அலட்சியத்தால் கடுமையாகப் பரவ வாய்ப்புள்ளது.

ஏற்கனவே 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறை குறித்து எக்கச்சக்க மீம்ஸ் கிளம்பிவிட்டன. வீட்டை விட்டு வெளியேறாமலேயே  இருந்தால் கண்டிப்பாகப் போர் அடிக்கும், அந்த போரை திருப்பி அடிக்க, WFH ட்யூட்களுக்கு இருக்கும் முக்கிய வழி OTT தளங்கள். பல தளங்கள், பல நூறு படங்கள்... இவற்றில் சமீபத்தில் வந்த சுவாரசிய படங்களை எடுத்துக்கொடுத்து அவர்களுக்கு உதவலாமே என்ற எண்ணத்தில் இந்தக் கட்டுரை...

 

ayyapanum koshiyum



இந்தியாவில் மிகப்பெரிய ஓடிடி பிளாட்ஃபார்மாக இருப்பது ஹாட்ஸ்டார். அதில் தற்போது வெளியாகியுள்ள புதுப்படங்கள் என்றால், மூன்று ஹிந்திப் படங்கள் இருக்கின்றன. அஜய் தேவ்கன், சைஃப் அலிகான் ஆகியோர் நடிப்பில் வெளியான 'டன்ஹாஜி... தி அன் ஸங் வாரியர்' படமானது 200 கோடிக்கும் மேல் வசூலை வாரிக்குவித்தது. அந்தப் படம் ஹாட்ஸ்டாரில் ஹாட்டாக வந்திருக்கிறது.  இதனையடுத்து இருப்பது ஆசிட் வீச்சில் தாக்கப்பட்ட பெண்ணின் உண்மைக் கதையை மையமாக வைத்து தீபிகா நடித்த 'சப்பாக்'. கொஞ்சம் சீரியஸ் படங்களை விரும்புவோருக்கான சாய்ஸ் அது.  தமிழில் 'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்துக்கொண்டிருப்பவர் கங்கனா ரனாவத். பல ஆண்டுகளுக்கு முன்பு 'தாம் தூம்' படத்தில் 'ஜெயம்' ரவியுடன் இணைந்து நடித்தவர். அவர் பெண் கபடி வீராங்கனையாக நடித்திருக்கும் படமான 'பங்கா'வும் ஹாட்ஸ்டாரின் லேட்டஸ்ட் வரவு. இந்த மூன்று படங்களும் ஹாட்ஸ்டார் ஓடிடி பிளாட்பார்மில் பார்க்கக்  கிடைக்கின்றன. தனிமையைப் போர் அடிக்காமல் இனிமையாக்க ட்ரை செய்து பாருங்கள்.

அப்படியே நெட்பிளிக்ஸ் பக்கம் வந்தால் நிறையவே கொட்டிக்கிடக்கிறது. அதில் இரண்டு புதுப்படங்களை பரிந்துரை செய்கிறேன். அல்லு அர்ஜூன், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகிய, தெலுங்கின் சமீபத்திய சூப்பர் ஹிட் படமான 'அலா வைகுந்தபுரமுலோ' என்ற செம்ம  ஃபேமிலி டிராமா உங்கள் ஃபேமிலியோடு கண்டுகளிக்க உகந்தது. கியாரா அத்வானி நடிப்பில் தற்போது நெட்பிளிக்ஸ் தயாரித்து வெளியிட்டுள்ள படமான 'கில்டி'யும் ஒர்த் வாட்சிங் என்கிறார்கள் நெட்பிளிக்ஸ் ரசிகர்கள்.

 

ala vaigundapuramalo



லாஸ்ட் பட் நாட் லீஸ்ட்... இந்தியாவில் வெளியாகும் பல படங்களை ஆன்லைனில் வெளியிடும் ஓடிடி பிளாட்பார்மான அமேசான் ப்ரைம் வீடியோ. வழக்கம்போல நிறைய படங்களை இந்த மாதத்தில் வெளியிட்டுள்ளது. அதில் பலரின் பாராட்டையும் கவனத்தையும் பெற்று வரும் கன்னட படமான  'டியா' உள்ளது. '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு' உள்ளது. டான்ஸில் பட்டையைக் கிளப்பும் ரெமோ டி'சௌசாவின் படங்களின் வரிசையில் தற்போது லேட்டஸ்ட்டாக வெளியாகியுள்ள 'ஸ்ட்ரீட் டான்சர் 3டி' படம் ப்ரைமில் வெளியாகியுள்ளது. மலையாளத்தில் ப்ரித்வி ராஜ் மற்றும் பிஜு மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வேற லெவல் வரவேற்பைப் பெற்ற படம் 'அய்யப்பனும் கோஷியும்'. மூன்று மணிநேர பயணமாக இருந்தாலும் செம இன்ட்ரெஸ்டிங்காக இருக்கிறது இந்தப் படம்.

இது போக நூற்றுக்கணக்கான படங்கள், சிரீஸ்கள் பல்வேறு தளங்களிலும் இருக்கின்றன. இவற்றில் படம் பார்க்கலாம், கிண்டிலில் புத்தகம் படிக்கலாம், வீட்டில் தனித்திருந்து கரோனோவை ஒழிக்க  உதவியாக இருக்கலாம். பிற மொழி படங்களாக இருக்கிறதே... தமிழ் படங்களெல்லாம் சஜஸ்ட் பண்ண மாட்டீங்களா என்று கேட்டால்... பல தமிழ் படங்களும் இருக்கின்றன. அவற்றின் விமர்சனங்களும் நம் தளத்தில் இருக்கின்றன. படித்துவிட்டு படத்தைப் பார்த்து மகிழுங்கள்...

நக்கீரன் திரைவிமர்சன பக்கம்

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

காளி கெட்டப்பில் மிரட்டும் அல்லு அர்ஜுன்

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
allu arjun pushpa 2 teaser released

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அல்லு அர்ஜுன், 'புஷ்பா’ படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானார். இந்த நிலையில், புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதை முடித்துவிட்டு அட்லி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று பிறந்தநாள் காண்கிறார் அல்லு அர்ஜுன். அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்பட பலரும் சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புஷ்பா 2 படக்குழு அல்லு அர்ஜுனுக்கு வாழ்த்து தெரிவித்து படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது. டீசரில் அல்லு அர்ஜுன், காளி கெட்டப்பில் திருவிழாவில் எதிரிகளை மிரட்டி சண்டை போடும் காட்சி இடம்பெறுகிறது.

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய சுகுமாரே இயக்கி வருகிறார். ஃபஹத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றுகிறார்.