ஆறு ராஜா, ஸ்வேதா ஜோயல், 'பூ' ராமு உள்ளிட்டோர் நடிப்பில் ஆறு ராஜா எழுதி இயக்கியுள்ள 'பாப்பிலோன்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய நக்கீரன் ஆசிரியர் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். அவரது பேச்சிலிருந்து ஒரு பகுதி...
"பொதுவாகவே நான் இசைவெளியீட்டு விழா போன்ற இதர சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்கப்பதில்லை. அவ்விழாக்களை, விழாக்களில் கலந்துகொள்பவர்களை குறையாக சொல்லவில்லை. நமக்கும் அவ்விழாவுக்கும் பெரிய சம்மந்தமில்லை என்பதால் தவிர்க்கிறேன். படம் திரையில் வந்ததும் திரையரங்கில் சென்று பார்க்கலாம் என்பதுதான் என் நோக்கம். இப்போதெல்லாம் பல கோடிகள் செலவு செய்து படம் எடுத்து வருகிற நிலையில் ஆறு ராஜா ஒன்னேகால் கோடியில் அவரே நடித்து படம் எடுத்திருக்கிறார் என்பதை கேட்டதும் ஆச்சரியமாக இருந்தது.பெருமைக்கென்று சொல்லவில்லை. என்னையும் இதுவரை 28 படங்கள் வரை நடிக்க அழைத்தார்கள். எனக்கு அதில் விருப்பமும் இல்லை உடன்பாடும் இல்லை. இனி நடிக்கப் போறதும் இல்லை. அதனால இன்னும் பத்து படத்திற்கு நடிக்க கூப்பிடுவாங்க. ஏன்னா, இதுவரைக்கும் நடிக்கலைல... முதல் படமே சம்மதிச்சு நடித்திருந்தா இப்ப யாரும் கூப்பிட்டிருக்க மாட்டாங்க.
ஒரு நாள் நடிகர் ரஜினி சார் என்னிடம், "ஏன் கோபால்... நடிச்சா என்ன?"ன்னு கேட்டார். "ஏன் சார்... நல்லாதானே போய்ட்டு இருக்கு"னு சொன்னேன். காரணம் நாங்க நக்கீரன் ஆரம்பித்தோம், நக்கீரனா திரிகிறோம். எங்க பொழப்பு வேறு ஒன்றாகத்தான் இருக்கிறது. என் முன்னால் உட்காந்திருக்கும் பெரியவர்கள் போட்ட ரோட்டில்தான் நான் சைக்கிள்ல போய்ட்டு இருக்கிறேன். தாயப்பன் என்னிடம் உங்கள பாக்கணும்னு தம்பி ஆசைப்படுகிறார் என்று பேசத் தொடங்கியதும் எனக்கு தோன்றியது 'நடிக்க ஏதும் அழைப்பதற்காக வந்திருப்பார்களோ' என்று. "இல்ல, இசைவெளியீடு செய்யவேண்டும், அதற்காக உங்களை அழைக்க வந்திருக்கிறோம்" என்றார். உடனே நான், "தப்பா நினைச்சுக்காதீங்க அண்ணே... பொதுவாகவே நான் இதை போன்ற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதில்லை" என்றேன். பின்னர் அவர் கூறினார், "இவர் ஒரு ஆர்ட்டிஸ்ட். சந்திரமுகி ஓவியத்தை வரைந்தவர்" என்று கூறியதும், "சரி வருகிறேன்" என்று ஒப்புக்கொண்டேன். அந்த ஓவியம் உயிருள்ளது. அதை வரைந்த கலைஞனுக்கு மரியாதை செய்ய வேண்டும். மேலும் இவர் ஒரு சமூக நோக்கம் உள்ளதாகவும் பொள்ளாச்சி பிரச்னையை தழுவியதாகவும் படத்தை எடுத்திருத்தப்பதால் கண்டிப்பாக இந்த விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று வந்தேன். இந்தப் படம் லாபகரமான படமாக அமையவேண்டும், வெற்றி பெற வேண்டும் ".