
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகிற 21ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் படக்குழுவினர் கலந்து கொண்டு படம் குறித்த தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மிஷ்கின், படக்குழுவினரை பாராட்டி தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். அவர் பேசி முடித்த பின், மேடையில் இருந்த பெரிய திரையில், சில நபர்களுடைய புகைப்படங்கள் திரையிடப்பட்டு அவர்கள் குறித்து கேட்கப்பட்டது. அதாவது இவர் இந்த படத்தில் கல்லூரி முதல்வராக நடித்திருக்கும் நிலையில் அந்த கதாபாத்திரமாக இருந்து கொண்டு இந்த நபர்களை பற்றி சொல்ல வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டது.
அப்போது திரையில் மிஷ்கின் புகைப்படம் திரையிடப்பட்டது. அது குறித்து பேசிய மிஷ்கின், “கண்ணு தெரியாத ஒரு மான்ஸ்டர். ரொம்ப குறைவான நல்லவர்கள், நிறையக் கெட்டவர்கள் இருக்கும் சினிமாவில் அதிக கஷ்டப்பட்டுக் கொண்டும், கொஞ்சம் சமாளித்து கொண்டும் சீக்கிரம் சினிமாவை விட்டு வெளியே போகக்கூடிய டைரக்டர்” என்றார். மிஷ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து ட்ரெயின் என்ற தலைப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.