Skip to main content

“பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்” - மிஷ்கின்

Published on 29/01/2024 | Edited on 29/01/2024
mysskin about poorna

இயக்குநர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த், பூர்ணா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டெவில்'. ராதாகிருஷ்ணன் தயாரிக்கும் இப்படத்தை மிஷ்கின் வழங்குகிறார். மேலும் பாடல்களுக்கு வரிகள் எழுதி இசையமைப்பாளராக இந்தப் படம் மூலம் அறிமுகமாகிறார். இப்படம் பிப்ரவரி 2ஆம் தெதி வெளியாகிறது. இதையொட்டி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “சில செய்திகளில் நான் என் தம்பியை தூக்கிப் பிடிப்பதாக எழுதி இருந்தார்கள். அந்த செய்தியைப் படித்து நான் வெட்கப்பட்டேன். நான் உதவி இயக்குநராக சேர வேண்டும் என்று கேட்ட என் தம்பியைப் பார்த்து செருப்பைத் தூக்கி எறிந்தவன். வாழ்க்கையில் அதிகமாக கஷ்டப்பட்ட நபர்களால் மட்டுமே சினிமாவை நேசித்து காதலிக்க முடியும். கஷ்டங்களை அனுபவிக்காமல் வளரும் ஒருவரால் சினிமாவிற்கு உண்மையாக இருக்க முடியாது என்பது என் எண்ணம். அதனால் தாய் தகப்பன் இல்லாத வாழ்க்கையில் கொடுமையான சோகத்தை அனுபவித்த இளைஞர்களை நான் உதவி இயக்குநராகச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவேன்.

ஆதித்யா, பார்த்திபன் சாரிடம் பணியாற்றிவிட்டு வந்த பின்னர் தான் நான் அவனை உதவி இயக்குநராக சேர்த்துக் கொண்டேன்.. இந்த வாழ்க்கையில் வெற்றி என்பது ஒன்றுமே இல்லை, அது போல் தான் தோல்வியும் ஒன்றுமே இல்லை. இந்த வாழ்க்கையில் நீங்கள் பெரிதாய் ஏதும் செய்துவிட முடியாது.  சாமான்ய மனிதன் தன் குடும்ப உறவினர்களுக்காக உழைக்கிறான்… இன்னும் வெகு சில மனிதர்கள் இந்த உலக மக்களுக்காக உழைக்கிறார்கள். அவர்கள் வெகு சிலரே… அது எல்லாராலும் முடியாது. ஒரு படத்தை  நீங்கள் உண்மையாக  எடுத்திருக்கிறீர்கள் என்றால், அந்த படத்திற்குள் கேளிக்கைகள்,  சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கலாம். அதை மீறி நெஞ்சைத் தைப்பது போல் ஒரு விஷயம் இருக்க வேண்டும் என்று சொல்வேன். அதுதான்  திரைப்படத்திற்கான உயிர்.  நான் விதார்த்திடம் நீ இன்னும் 50 வருடம் நடித்துக் கொண்டிருப்பாய்… என்று கூறினேன். அவன் சினிமா இல்லை என்றால் இறந்துவிடுவான்… சினிமாவில் தொடர்ச்சியாக உழைத்துக் கொண்டே இருக்கும் நபர் விதார்த்.. நானும் அப்படித்தான் உழைத்துக் கொண்டே இருக்கிறேன். விஜய் சேதுபதியைப் போல் விதார்த் முகத்திலும் தமிழ் லான்ஸ்கெப் இருக்கும். 

நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த நடிகர் நடிகைகள் என்பேன்.. பூர்ணா அந்த மாதிரியான நடிகை. சவரக்கத்தி படத்தில் என் அம்மாவின் கதாபாத்திரத்தை தான் எழுதியிருந்தேன்… அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தது பூர்ணா… பூர்ணாவின் குழந்தை காலை எடுத்து என் தலையில் வைத்துக் கொண்டேன்.. அது போல் தான் பூர்ணாவின் காலையும்… பூர்ணா என் வாழ்க்கையில் மிக முக்கியமான பெண். அவள் வயிற்றில் நான் குழந்தையாகப் பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போல் அவள் பார்த்துக் கொள்வாள். என்னையும் அவளையும் குறித்து சிலர் தவறாகப் பேசுவார்கள். அவள் எனக்குத் தாய் போன்றவள். என் குழந்தையை விட அவள் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்…. அவள் சாகும் வரைக்கும் நடித்துக் கொண்டே இருக்க வேண்டும். மற்ற படங்களில் அவள் நடிப்பாளா என்று தெரியாது. என் படங்களில் எப்போதும் பூர்ணா இருப்பாள். இசையில் நூறு மார்க் வாங்குபவர்கள் எப்பொழுதும் இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான். நான் இளையராஜா ஐயாவிடம் இருந்து சண்டை போட்டு வந்ததற்குப் பின்னர் 6 ஆண்டுகளாக இசையைக் கற்று வருகிறேன்… இப்படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று கேட்டதும் ஏற்றுக் கொண்டு இசையமைத்து இருக்கிறேன்…. என் இசைக்கு  35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று நம்புகிறேன்” என்றார். 

சார்ந்த செய்திகள்