விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் லண்டனில் உருவாகி வந்த துப்பறிவாளன் 2 படத்திலிருந்து மிஷ்கின் நீக்கப்பட்டுவிட்டார் என்று அண்மையில் தகவல் ஒன்று வெளியாகி வந்தது.
மேலும் மிஷ்கின் ஏன் துப்பறிவாளன் படத்திலிருந்து விலகினேன் என்பதற்கு விளக்கம் தருவதுபோல ஒரு வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதில், விஷால் சாட்டிலைட்டிலிருந்து குதிப்பதுபோல ஒரு சீன் யோசித்திருக்கிறேன் அதற்காக நூறு கோடி பட்ஜெட் கேட்டேன் என்று கிண்டலடிப்பதுபோல சொல்கிறார்.
இந்நிலையில் இதை உறுதிப்படுத்தும் விதமாக விஷால் வெளியிடும் துப்பறிவாளன் 2 ஃபர்ஸ்ட் லுக் குறித்தான போஸ்டரில் விஷால் மற்றும் இப்படத்தின் இசையமைப்பாளரான இளையராஜாவின் பெயர் மட்டும் இடம்பெற்றுள்ளது. இயக்குனரான மிஷ்கின் பெயர் இடம்பெறாததால் பலரும் குழப்பத்தில் இருக்கின்றனர். இன்று வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக் மூலம் மிஷ்கின் இயக்குகிறாரா இல்லையா என்பது உறுதியாக தெரிந்துவிடும்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் விஷால் துப்பறிவாளன் படத்தை இயக்குவது எப்படி இருக்கிறது என்று தனது அனுபவத்தை கூறியிருந்தார். அதில், “துப்பறிவாளன் 2 படத்தை இயக்குவதை ஆசிர்வதிக்கப்பட்ட ஒன்றாக கருதுகிறேன். இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நான் உற்சாகமாக இருக்கிறேன்.
இயக்குநர் தான் ஒரு படத்தின் கேப்டன் ஆஃப் தி ஷிப். அந்த விதத்தில் பொறுப்புகளும் எனக்கு நிறைய உள்ளன. படத்தொகுப்பு, இசை, பின்னணி இசை என எல்லாத் துறைகளிலும் அவதாரம் எடுப்பது சிறப்பான அனுபவமாக கருதுகிறேன். அதற்காக காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.