Skip to main content

"சமரசமற்ற இயக்குநர் வெற்றிமாறன்" - குணச்சித்திர நடிகர் மூணார் ரமேஷ் புகழாரம்

 

Munnar Ramesh Interview

 

தனித்துவமான நடிப்பினை வெளிப்படுத்தி  குணச்சித்திர நடிகராக வலம் வரும் மூணார் ரமேஷ் அவர்களை நமது நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து நம்மோடு பகிர்ந்து கொண்டார்.

 

மூணார் ரமேஷ் பேசியதாவது “என்னுடைய சொந்த ஊர் மூணார் என்பதால் மூணார் ரமேஷ் என்கிற பெயர் வந்தது. சினிமாவில் ஒவ்வொரு நடிகருக்கும் அடுத்தடுத்த நிலைக்கு வளர வேண்டும் என்கிற ஆசை இருக்கும். வெற்றிமாறன் சாரோடு நீண்ட நாள் பழக்கம் உள்ளது. அந்த நட்பும், என்னுடைய கரியருக்கு உதவி செய்ய வேண்டும் என்கிற அவருடைய எண்ணமும் தான் அவர் தொடர்ந்து எனக்கு வாய்ப்புகள் வழங்குவதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய படைப்புகளின் மேல் அனைவருக்குமே ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது”.

 

விடுதலை படத்தின் படப்பிடிப்பு மிகவும் சவாலானதாக இருந்தது. அனைத்தையும் ராவாக எடுக்க வேண்டும் என்று நினைப்பார் வெற்றிமாறன். இயற்கை உள்ளிட்ட பல்வேறு இடர்பாடுகள் எங்களுக்கு இருந்தன. எதிலும் சமரசம் செய்துகொள்ளாத இயக்குநராக வெற்றிமாறன் இருப்பதால் தான் அவர் படப்பிடிப்புக்கு நீண்ட காலத்தை எடுத்துக் கொள்கிறார். ஒரு படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை அதுபற்றிய சிந்தனையிலேயே அவர் இருப்பார். படப்பிடிப்பு முடியும் வரை படம் பற்றிய பேச்சுக்களையே விரும்புவார். அந்த நேரங்களில் அவரை யாரும் டிஸ்டர்ப் பண்ணக்கூடாது.

 

அவருடைய படங்களில் எனக்குக் கிடைக்கும் நல்ல பெயர் அனைத்தும் வெற்றிமாறன் சாரையே சாரும். சூரி சாரிடம் வெற்றிமாறன் சார் சில புதிய விஷயங்களைக் கண்டுபிடித்தார். வெற்றிமாறன் சாருடைய அணுகுமுறைக்கு சூரி சார் விரைவில் பொருந்திப் போனார். தன்னுடைய நடிப்பு முறையையே மாற்றிக் கொண்டார். யாரையும் மாற்றுவதற்கான மந்திரம் வெற்றிமாறன் சாரிடம் இருக்கிறது. புதுப்பேட்டை படத்தில் நடிக்கும்போது என்னிடம் உருவம் மட்டும் தான் இருந்தது. என்னை நடிக்க வைத்தது முழுக்க முழுக்க செல்வராகவன் தான். 

 

புதுப்பேட்டை, வடசென்னை ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நடக்கும் என்று நம்புகிறேன். வடசென்னை 2 படம் நிச்சயம் வரும் என்று வெற்றிமாறன் சார் சொல்லியிருக்கிறார். அது போன்ற படங்களை அவரால் தான் சிறந்த முறையில் எடுக்க முடியும். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பும் தற்போது நடந்து வருகிறது. ஐஸ்வர்யா மேடம் மிகவும் வேகமாக வேலை செய்கிறார். ரஜினி சாரின் கேமியோவும் அதில் இருக்கிறது. ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய பண்பும் ஆன்மீகமும் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரோடு இந்தப் படத்தில் நானும் ஒரு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு வருமா என்கிற எதிர்பார்ப்போடு இருக்கிறேன்.