Skip to main content

"அப்போ மிஸ் ஆகிடுச்சு; இப்போவும் மிஸ் ஆகிடுச்சு" - மேடையில் வருத்தத்தை தெரிவித்த அமீர்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

'Missed then, missed now' - Aamir speech

 

ஜீவாவின் 'திருநாள்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ராம்நாத் இயக்கியிருக்கும் படம் 'ஆதார்'. இப்படத்தில் கருணாஸ், அருண் பாண்டியன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். பி.சசிகுமார் தயாரித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் கருணாஸ், அருண் பாண்டியன், பாரதிராஜா, அமீர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

அந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் பேசுகையில், "பொதுவாக ஒரு இசை வெளியீட்டிற்குச் சென்றால், ஒரு சிறப்பு அழைப்பாளராக இருப்போம். அந்த படத்தோடு எந்த தொடர்பும் இருக்காது. அந்த நபர்களோடு மட்டும் தொடர்பு இருக்கும். ஆனால் இந்த படத்தை அப்படிச் சொல்லிவிட முடியாது. இந்த திரைப்படத்திற்கும் எனக்கும் தொடர்பு இருக்கிறது. இயக்குநர் ராம்நாத் அவருடைய முந்தைய படமான 'திருநாள்' படத்தில் நீங்கள் நடிக்கணும் என்று என்னிடம் சொன்னார். ஒரு முதல் பட இயக்குநர் வெறும் கதையாக மட்டும் சொல்லாமல், அப்போதே 4 பாட்டு பதிவு பண்ணிட்டு வந்து இருந்தார். ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான அந்த 4 பாடல்களையும் போட்டுக் காண்பித்தார்.  ஒரு அருமையான கதைக்களத்தோடு இந்த கதையை எழுதியிருக்கிறேன் என்றார். அன்றைக்கு அந்த திரைப்படத்தில் நடிக்க முடியாத சூழல். அதன் பிறகு ஜீவாவை வைத்து படம் பண்ணினார். 

 

இரண்டாவது,  'ஆதார்' திரைப்படத்தின் கதையையும் முதலில் என் அலுவலகத்திற்குத் தான் எடுத்து வந்தார். இந்த முறை வேற லெவல்ல ஒரு கதை எழுதி இருக்கிறேன், நீங்க கதை கேளுங்க என்று சொன்னார். கதையைக் கேட்டேன் மிகவும் நன்றாக இருந்தது. யார் நடிக்கிறார்கள் என்று கேட்டேன். பாரதிராஜா நடிக்கிறார் என்றார். தமிழ் சினிமாவில் கொண்டாடுவதற்கு மிச்சம் இருக்கக்கூடிய ஒரே கலைஞன் பாரதிராஜா மட்டும் தான். அதனால், பாரதிராஜாவோடு இணைந்து நடித்து விடலாம் என்று எண்ணினேன். அவரிடம் வேலை செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை, நடிக்க வாய்ப்பு கிடைச்சா அதை பயன்படுத்திக்கணும் என்கிற எண்ணம் எனக்குள் எப்போதும் உண்டு. ஏனென்றால் எட்டு வருடத்திற்கு முன்பே ஒரு நாள் குற்றப் பரம்பரை பண்ணுவோமான்னு கேட்டார். அதில் பேய்க்காமன் என்கிற கதாபாத்திரம் இருக்கு அந்த கதாபாத்திரத்தை எனக்கு நடித்துக் காண்பித்தார். அந்த வயதான தாத்தா கதாபாத்திரம் இன்னும் என் கண்ணுக்குள்ளே இருக்கு. மிகப் பிரமாதமான ஒரு நடிப்பு  சும்மா அவரை புகழ்வதற்காகச் சொல்லவில்லை. அப்படி ஒரு கலைஞன் இன்னும் வெளிய வரவில்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.

 

குற்றப் பரம்பரையில் அந்த தாத்தா  கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். நீ அந்த போலீஸ் கதாபாத்திரத்தைப் பண்ணு என்றார். சரி சார் பண்ணுவோம் என்றேன். அதன் பிறகு 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தை ரீமேக் பண்ணலாம்னு இருக்கேன் பண்ணுவோமா எனக் கேட்டார். அவர் எதாவது யோசிச்சிகிட்டே இருப்பார். அவர் மனதளவில் இன்னும் இளைஞன் தான். இப்பவும் என்கிட்ட அதைத் தான் சொன்னார், சோர்வாக இருக்கு ஆனாலும் ஒரு படம் இயக்க போறேன்னு சொன்னார். இத எப்படிச் சொல்லமுடியும் என்று தெரியவில்லை. தலைப்பு மற்றும் ஹீரோ போன்ற விவரங்களைச் சொன்னார். ஹீரோயின் தேடிட்டு இருக்கிறாராம்.

 

இப்படிப்பட்ட கலைஞனோடு பணியாற்றும் வாய்ப்பு இரண்டாவது முறையாக ஆதார் படத்திலும் எனக்கு மிஸ் ஆனது. எப்படி பாரதிராஜா சாருடன் வாய்ப்பு தவருகிறதோ அதுபோல இனியாவோடு நடிக்கிறதுக்கான வாய்ப்பு தவறிக்கிட்டு இருக்கு. இது இரண்டாவது முறை என்று நினைக்கிறேன். தேனியில் நடந்த 'அன்னக்கொடியும் கொடிவீரனும்' படத்திற்கான போட்டோஷூட்டில் நானும் இனியாவும் சேர்ந்து நடித்திருந்தோம். முதல் முறையாக பாரதிராஜா என்னிடம் இனியாவை முதுகில் தூக்கிட்டு ஓடுடான்னு சொன்னார். சார் தாங்காது சார் உடம்பு என்று சொன்னேன். அப்போது நான் நடிக்க முடியாத சூழல். பிறகு அந்த கதையில் மாற்றம் செய்துவிட்டார். அப்பவும் மிஸ் ஆகிவிட்டது, இப்பவும் மிஸ் ஆகிவிட்டது" என்றார்.

 

அதேபோல தமிழ் சினிமா பின்தங்கியிருக்கிறது என அதே மேடையில் அருண்பாண்டியன் பேசியதற்குப் பதிலளித்த அமீர், "இந்தியாவிற்கே முன்னோடி தமிழ் சினிமா தான். ஒரு நாளும் தமிழ் சினிமா பின்னோக்கி செல்லாது. ஒரு 'ஆர்ஆர்ஆர்' படத்தையோ, ஒரு 'கே.ஜி.எஃப்' படத்தையோ வைத்து நீங்க எடை போட்டிங்கன்னு சொன்னால். நம்ம அந்த காலத்திலே 'சந்திரலேகா' படம் எடுத்துவிட்டோம். எளிமையான படைப்புகளுக்கு இணையாகத் தமிழ் சினிமாவிற்கு ஈடு இணை எந்த சினிமாவும் இல்லை. பின்தங்கி இருக்கிறோம் என்கிற வார்த்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தமிழ் சினிமா எப்போதும் முன்னோடியாகத்தான் இருந்திருக்கிறது. கமர்ஷியல் சினிமா எப்போதும் ஒரு பக்கம் இருக்கும்.

 

தமிழ் சினிமாவில் இருக்கக் கூடிய கலைஞர்கள் தான் மற்ற மொழிகளுக்கும் சென்றிருக்கிறார்கள். இதே ராஜமௌலி தான் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் விளம்பரத்திற்காக உட்காந்திருக்கும் போது, 'தமிழ் சினிமா எங்களுடைய தாய் வீடு. அதைப் பார்த்து பிரமிக்கிறோம் இன்னும் கத்துக்க வேண்டியது நிறைய இருக்கு' என்று சொல்கிறார். அதனால் ஒரு சில படங்களின் வெற்றியை வைத்து விட்டு தமிழ் சினிமாவை எடை போட்டு விட வேண்டாம். தமிழ் சினிமா என்றைக்கும் தலை நிமிர்ந்து நிக்கும். தலை நிமிரச் செய்கிற வேலையைத் தமிழ் கலைஞர்கள் தொடர்ந்து செய்து கொண்டு இருப்பார்கள்" என்று பேசினார்.


 

சார்ந்த செய்திகள்